Wednesday, September 28, 2011

காளி கேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அத்தனை பிரபலமாகாத ஒரு பிக்னிக் ஸ்பாட். இயற்கை அன்னை எங்கள் மாவட்டத்திற்கு அள்ளிக்கொடுத்திருக்கிருக்கும் வன வளத்திற்கு இந்த ஒரு பகுதியே சான்று. ஏனோ அரசாங்கமும் இந்த பகுதியை சுற்றுலா மையமாக்க ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாததால் இது இதுவரை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடமாக உள்ளது.




கண்ணாடி போல் தெளிந்த, குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாறும், சிறு காளி அம்மன் கோவிலும் இங்கு பிரசித்தம். சுற்றிலும் ரப்பர் எஸ்டேட்டுகள், பாதிக்கு மேல் வனத்துரை மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்று ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில். நம் கழக அரசுகளின் கட்டுப்பாட்டில் ரப்பர் எஸ்டேட் மற்றும் வனவளம்.. நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் அந்த நிர்வாகம் எப்படி இருக்குமென்று. இங்கு வேலை பார்க்கும்
அரசு அதிகாரிகள் ரொம்ப ஷேமமாக இருப்பதற்கான எல்லா வசதிகளையும் இயற்கை அன்னை அளித்துள்ளாள்.

ரொம்ப மேலே செல்ல அனுமதி இல்லை, மேற்பகுதியில் சில தனியார் எஸ்டேட்கள் இருக்கின்றன.. அடியேனுக்கு அங்கு செல்ல வாய்ப்பேதும் இதுவரை கிட்டவில்லை.

என் சமீபத்திய சென்ற மாத விடுமுறையில், காளி கேசம் ட்ரிப் எதிர்பாராத விதமாய் அமைந்தது.. கன்னியாகுமரி என்று அஜென்ண்டாவில் இருந்தது சில பல காரணங்களால் காளிகேசம் என்று மாறிப்போனது. யாருக்கும் நான் வெஜ் மூடு எதுவும் இல்லாததால் உடுப்பி இன்டர்நேஷனலில் வாங்கிய நாலு பார்சல் பூரி கிழங்குடன் நாங்கள் பழைய காலத்து நண்பர்கள் நாலுபேர் எங்கள் பெங்களூர் நண்பன் புதியதாய் வாங்கியிருந்த டாட்டா மான்ஸாவில் கிளம்பி சென்றோம்.

பொண்டாட்டிகளை சமாளித்துவிட்டு தனியே கிளம்புவதே பெரிய சாகசம், நாலு பேரும் இப்போது நான்கு திக்கில் வேலை பார்ப்பவர்கள், நான் ஊருக்கு வரும் சமயம் எப்படியாவது மற்ற மூவரும் ஒன்று அல்லது இரண்டு நாள் ப்ரோக்ராம் வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து விடுவார்கள். அதற்கு ஏற்பாடு செய்வதற்குமுன் தாவு தீர்ந்துவிடும், பல ஈமெயில்கள் பறக்க வேண்டியதிருக்கும். சிலர் மனைவியுடன் வந்திருப்பார்கள், சிலர் தனியே.

ஏதோ ஆபிஸ் மீட்டிங் சென்னையில் என்று சொல்லி விட்டு சூட்கேஸ் சகிதம் நாகர்கோவில் வந்து லாட்ஜில் தங்கும் சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. நான் அப்போது மனைவியுடன் மாட்டிக்கொண்டிருப்பேன், கண்டிப்பாய் பெர்மிஷன் கிடைக்காது என் நண்பர்களுடன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து செலவு செய்வதற்கு. நாங்கள் நான்கு பேர் சேர்ந்தால் செய்யும் லூட்டிகள் அத்தனை உலக பிரசித்தம் ஆகிவிட்ட படியால்..

என்ன செய்வது, ஏதோ காரணத்திற்காக நான் திருநெவேலி அல்லது திருவனந்தபுரம் அவசரமாக போக வேண்டியுள்ளது என்று சொல்லி நான் இவர்களுடன் சேர்ந்தாக வேண்டும்.

ஆத்தாடி, அந்த அவஸ்த்தையை எழுத்தில் சொல்வது கடினம்.. அவர்கள் எல்லாம் வந்திருப்பார்கள், என் மனைவிக்கும் தெரியும்.. அவர்களை விட்டு விட்டு நான் தனியே வேரு ஊருக்கு கிளம்புகிறேன் என்பதை கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தில் நம்ப வைப்பது எத்தனை சிரமம் என்று எனக்குத் தான் தெரியும்?? அப்படியும் ஏதோ சொல்லி சமாளித்து கிளம்பியாக வேண்டும்.

சரி பேக் டு காளிகேசம்.. மிக அருமையான சுற்றுலா பகுதி.. தெளிந்த ஓடும் நீரில் மூழ்கி குளிப்பது கண்டிப்பாய் ஒரு சுகானுபவம், துபாய் போன்ற பாலைவன நகரங்களில் கிடைக்காதது.

நான் சிறுவயதில் (கல்லூரி முதல் ஆண்டு??) முதல் முறையாக காளிகேசம் சென்றேன்.. ஒரு எட்டு அல்லது ஒன்பது நண்பர்கள் முதல் நாளே சிக்கன் மசாலா மற்றும் புரோட்டா, ரைஸ் என்று ஆர்டர் கொடுத்து எடுத்துச்சென்று அங்கு வைத்து தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 5 கோழி கறி சொல்லியிருந்தோம், ஆனால் சாப்பிடும் போது பத்துக்கு மேல் கால் பீஸ் இருந்தது, இதை சொல்லிச்சொல்லி ஆர்டர் கொடுத்தவனை அழ வைத்தது தனிக்கதை.

இந்த மாதிரி கெட்டுகதர்களுக்கு ஏற்ற இடம். அப்போது பஸ் கீரிப்பாறையுடன் நின்று விடும், அதன் பின் காளிகேசம் வரை சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். ஆனால் இப்போது பஸ் காளிகேசம் கோவில் வரை செல்லும் என நினைக்கிறேன். ரோடு வசதி உள்ளது, பஸ் வசதியை விசாரித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் நினைவில் உள்ளது என் கல்லூரி மூன்றாம் ஆண்டில் கல்லூரி நண்பர்கள் இணைந்து சென்றது. அப்போது சிக்கன் ரவாபிரியாணி என்று ஒன்றை அங்கே சென்று சமைத்துச்சாப்ட்டோம். நன்றாகத்தான் இருந்தது, நான் முதலும், கடைசியுமாய் சாப்பிட்ட சிக்கன் ரவா பிரியாணி அது தான். சமையல் செய்ய ஆளை அழைத்துச்சென்றிருந்தோம். கல்லூரி நண்பர்களுடன் தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

பின்னர் நான் பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் என் மற்ற நண்பர்கள் அவர்கள் பெண் நண்பர்களுடன் சென்றதை கதை, கதையாக இப்போதும் சொல்வார்கள் என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதற்காக. மூன்று அல்லது நான்கு பேர் ஜோடியாக இருக்கவும் ஒருவன் மட்டும் ஜோடி இல்லாமல் மற்ற ஜோடிகளை மறைந்திருந்து கவனித்து நேரம் போக்கியதை இந்த முறையும் சொல்லி சிரித்துக் கொண்டோம். (மக்கா, யார் வேண்டுமானாலும் நீங்கதான் அந்த ஜோடி இல்லாத ஆள் என்று தப்பித்துக் கொள்ளுங்கள், அதனால் பெயர் சொல்லவில்லை). அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே திருமணம் வரை சென்றார்கள்..

எஸ், அடுத்த முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றால் மறக்காமல் காளிகேசம் செல்லுங்கள், சமைத்து சாப்பிடுவதற்கும், மற்றவற்றுக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.. இது போல் காட்டுப்பிரதேசங்களில் சமைக்கப்படும் உணவிற்கு ஏதோ தனி சுவை உள்ளது, அதனை மிஸ் பண்ண வேண்டாம். மனைவிகளை அழைத்துச்சென்றால், தண்ணி அடிக்க முடியாது, சிகரட் குடிக்க முடியாது போன்ற சில்லரை பிரச்னைகள் உள்ளது, நன்கு யோசித்து முடிவு எடுங்கள்.




காட்டாறு மற்றும் சிற்றருவிகளை பற்றித்தெரிந்த குமரி மாவட்டத்து நண்பர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள், சில இடங்கள் அபாயமானவை, ஆழம் தெரியாமல் காலை வைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அன்புடன், வசந்தா நடேசன்

1 comment:

  1. Thanks for collecting all the pebbles for my kid at Kalikesam....

    (Nama ellam poruppa ahittomunnu nenacha achariyama than irukku)

    ReplyDelete