Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, September 28, 2011

காளி கேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அத்தனை பிரபலமாகாத ஒரு பிக்னிக் ஸ்பாட். இயற்கை அன்னை எங்கள் மாவட்டத்திற்கு அள்ளிக்கொடுத்திருக்கிருக்கும் வன வளத்திற்கு இந்த ஒரு பகுதியே சான்று. ஏனோ அரசாங்கமும் இந்த பகுதியை சுற்றுலா மையமாக்க ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாததால் இது இதுவரை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடமாக உள்ளது.




கண்ணாடி போல் தெளிந்த, குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாறும், சிறு காளி அம்மன் கோவிலும் இங்கு பிரசித்தம். சுற்றிலும் ரப்பர் எஸ்டேட்டுகள், பாதிக்கு மேல் வனத்துரை மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்று ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில். நம் கழக அரசுகளின் கட்டுப்பாட்டில் ரப்பர் எஸ்டேட் மற்றும் வனவளம்.. நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் அந்த நிர்வாகம் எப்படி இருக்குமென்று. இங்கு வேலை பார்க்கும்
அரசு அதிகாரிகள் ரொம்ப ஷேமமாக இருப்பதற்கான எல்லா வசதிகளையும் இயற்கை அன்னை அளித்துள்ளாள்.

ரொம்ப மேலே செல்ல அனுமதி இல்லை, மேற்பகுதியில் சில தனியார் எஸ்டேட்கள் இருக்கின்றன.. அடியேனுக்கு அங்கு செல்ல வாய்ப்பேதும் இதுவரை கிட்டவில்லை.

என் சமீபத்திய சென்ற மாத விடுமுறையில், காளி கேசம் ட்ரிப் எதிர்பாராத விதமாய் அமைந்தது.. கன்னியாகுமரி என்று அஜென்ண்டாவில் இருந்தது சில பல காரணங்களால் காளிகேசம் என்று மாறிப்போனது. யாருக்கும் நான் வெஜ் மூடு எதுவும் இல்லாததால் உடுப்பி இன்டர்நேஷனலில் வாங்கிய நாலு பார்சல் பூரி கிழங்குடன் நாங்கள் பழைய காலத்து நண்பர்கள் நாலுபேர் எங்கள் பெங்களூர் நண்பன் புதியதாய் வாங்கியிருந்த டாட்டா மான்ஸாவில் கிளம்பி சென்றோம்.

பொண்டாட்டிகளை சமாளித்துவிட்டு தனியே கிளம்புவதே பெரிய சாகசம், நாலு பேரும் இப்போது நான்கு திக்கில் வேலை பார்ப்பவர்கள், நான் ஊருக்கு வரும் சமயம் எப்படியாவது மற்ற மூவரும் ஒன்று அல்லது இரண்டு நாள் ப்ரோக்ராம் வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து விடுவார்கள். அதற்கு ஏற்பாடு செய்வதற்குமுன் தாவு தீர்ந்துவிடும், பல ஈமெயில்கள் பறக்க வேண்டியதிருக்கும். சிலர் மனைவியுடன் வந்திருப்பார்கள், சிலர் தனியே.

ஏதோ ஆபிஸ் மீட்டிங் சென்னையில் என்று சொல்லி விட்டு சூட்கேஸ் சகிதம் நாகர்கோவில் வந்து லாட்ஜில் தங்கும் சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. நான் அப்போது மனைவியுடன் மாட்டிக்கொண்டிருப்பேன், கண்டிப்பாய் பெர்மிஷன் கிடைக்காது என் நண்பர்களுடன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து செலவு செய்வதற்கு. நாங்கள் நான்கு பேர் சேர்ந்தால் செய்யும் லூட்டிகள் அத்தனை உலக பிரசித்தம் ஆகிவிட்ட படியால்..

என்ன செய்வது, ஏதோ காரணத்திற்காக நான் திருநெவேலி அல்லது திருவனந்தபுரம் அவசரமாக போக வேண்டியுள்ளது என்று சொல்லி நான் இவர்களுடன் சேர்ந்தாக வேண்டும்.

ஆத்தாடி, அந்த அவஸ்த்தையை எழுத்தில் சொல்வது கடினம்.. அவர்கள் எல்லாம் வந்திருப்பார்கள், என் மனைவிக்கும் தெரியும்.. அவர்களை விட்டு விட்டு நான் தனியே வேரு ஊருக்கு கிளம்புகிறேன் என்பதை கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தில் நம்ப வைப்பது எத்தனை சிரமம் என்று எனக்குத் தான் தெரியும்?? அப்படியும் ஏதோ சொல்லி சமாளித்து கிளம்பியாக வேண்டும்.

சரி பேக் டு காளிகேசம்.. மிக அருமையான சுற்றுலா பகுதி.. தெளிந்த ஓடும் நீரில் மூழ்கி குளிப்பது கண்டிப்பாய் ஒரு சுகானுபவம், துபாய் போன்ற பாலைவன நகரங்களில் கிடைக்காதது.

நான் சிறுவயதில் (கல்லூரி முதல் ஆண்டு??) முதல் முறையாக காளிகேசம் சென்றேன்.. ஒரு எட்டு அல்லது ஒன்பது நண்பர்கள் முதல் நாளே சிக்கன் மசாலா மற்றும் புரோட்டா, ரைஸ் என்று ஆர்டர் கொடுத்து எடுத்துச்சென்று அங்கு வைத்து தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 5 கோழி கறி சொல்லியிருந்தோம், ஆனால் சாப்பிடும் போது பத்துக்கு மேல் கால் பீஸ் இருந்தது, இதை சொல்லிச்சொல்லி ஆர்டர் கொடுத்தவனை அழ வைத்தது தனிக்கதை.

இந்த மாதிரி கெட்டுகதர்களுக்கு ஏற்ற இடம். அப்போது பஸ் கீரிப்பாறையுடன் நின்று விடும், அதன் பின் காளிகேசம் வரை சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். ஆனால் இப்போது பஸ் காளிகேசம் கோவில் வரை செல்லும் என நினைக்கிறேன். ரோடு வசதி உள்ளது, பஸ் வசதியை விசாரித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் நினைவில் உள்ளது என் கல்லூரி மூன்றாம் ஆண்டில் கல்லூரி நண்பர்கள் இணைந்து சென்றது. அப்போது சிக்கன் ரவாபிரியாணி என்று ஒன்றை அங்கே சென்று சமைத்துச்சாப்ட்டோம். நன்றாகத்தான் இருந்தது, நான் முதலும், கடைசியுமாய் சாப்பிட்ட சிக்கன் ரவா பிரியாணி அது தான். சமையல் செய்ய ஆளை அழைத்துச்சென்றிருந்தோம். கல்லூரி நண்பர்களுடன் தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

பின்னர் நான் பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் என் மற்ற நண்பர்கள் அவர்கள் பெண் நண்பர்களுடன் சென்றதை கதை, கதையாக இப்போதும் சொல்வார்கள் என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதற்காக. மூன்று அல்லது நான்கு பேர் ஜோடியாக இருக்கவும் ஒருவன் மட்டும் ஜோடி இல்லாமல் மற்ற ஜோடிகளை மறைந்திருந்து கவனித்து நேரம் போக்கியதை இந்த முறையும் சொல்லி சிரித்துக் கொண்டோம். (மக்கா, யார் வேண்டுமானாலும் நீங்கதான் அந்த ஜோடி இல்லாத ஆள் என்று தப்பித்துக் கொள்ளுங்கள், அதனால் பெயர் சொல்லவில்லை). அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே திருமணம் வரை சென்றார்கள்..

எஸ், அடுத்த முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றால் மறக்காமல் காளிகேசம் செல்லுங்கள், சமைத்து சாப்பிடுவதற்கும், மற்றவற்றுக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.. இது போல் காட்டுப்பிரதேசங்களில் சமைக்கப்படும் உணவிற்கு ஏதோ தனி சுவை உள்ளது, அதனை மிஸ் பண்ண வேண்டாம். மனைவிகளை அழைத்துச்சென்றால், தண்ணி அடிக்க முடியாது, சிகரட் குடிக்க முடியாது போன்ற சில்லரை பிரச்னைகள் உள்ளது, நன்கு யோசித்து முடிவு எடுங்கள்.




காட்டாறு மற்றும் சிற்றருவிகளை பற்றித்தெரிந்த குமரி மாவட்டத்து நண்பர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள், சில இடங்கள் அபாயமானவை, ஆழம் தெரியாமல் காலை வைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அன்புடன், வசந்தா நடேசன்

Tuesday, September 27, 2011

கட்டிங், கட்டிங்..

வணக்கம் நண்பர்களே.

சிறுவயது மலரும் நினைவுகள் என்றுமே மனதுக்கு நிறைவானவை.. மீண்டும், மீண்டும் எத்தனை முறை வாழ்க்கையில் அசை போட்டாலும் அலுப்பை தராதவை. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்வதற்காக செய்த அளும்புகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.

சிறு வயதில் எனக்கு குருவிக்கூடு வைத்து என் அம்மா தலை சீவி விடுவார்கள். நல்ல வேளையாக குடுமி ஸ்டைல் இருந்த காலத்தில் பிறந்து தொலைக்காமல் இருந்தேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டதுண்டு. இடது உச்சி எடுத்து தலை சீவிவிட்டு, வலது பக்கம் படிந்துள்ள முடியை அப்படியே பின்னால் கோறிவிட்டு ஒரு மூணு இஞ்ச் முன்னந்தலையில் விட்டு விட்டு வலதுபக்கமாய் பணித்து சீவி விட்டால் அதுதான் குருவிக்கூடு ஸ்டைல்.

மிகச்சிறு வயதில் எங்கே குருவி நெசமாலுமே குடி வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் தான். நீண்ட நாட்களாக, ஒரு அஞ்சாப்பு அல்லது ஆறாப்பு படிப்பது வரை ஐயா இந்த ஸ்டைல் தான். பின்னர் ஒரு சுப தினத்தில் இனி குருவிக்கூடு சரிவராது என்று வெறுமனே இடது உச்சி எடுத்து பணித்து சீவிக்கொள்ள ஆரம்பித்தேன்.

பின்னர் வந்தது பாருங்கள் ஹேர் ஸ்டைலில் ஒரு புரட்சி.. ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் வந்து எல்லா இளைஞர்களை பாடாய் படுத்தியது மறக்க முடியாதது. பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஸ்டைலாக இது இருந்தது.. வணங்காத முடியையும் ஹீட்டர் போட்டு ஒரு அளவுக்கு வளைத்து முக்கால் காதை மூடிக்கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்தார்கள் என்று நினைக்கிறேன்..

சினிமா உலகிலும் இந்த ஸ்டைல் பிரபலம். ஒரு தலை ராகம் சுதாகர், கமல ஹாசன் என்று எல்லோருக்குமே ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் தான் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு. இடையிலேயே சுதாகர் எல்லாம் காணாமல் போனது வேறு கதை.

என்னுடைய அப்பா அப்போது முடி வெட்டிக்கொள்ளும் கடையில் தான் நானும் அப்போது முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது என் வீட்டில் எழுதாத சட்டம். கொஞ்சம் வளர்ந்ததும் இந்த சட்டத்தை மாற்ற நிறைய போராடியிருக்கிறேன். இப்போது ரோடுக்கொரு ஏ.சி சலூன் வந்து விட்ட நிலையில் நான் ஊருக்கு சென்றால் என் பையன் வெட்டிக்கொள்ளும் கடையில் நானும் முடி வெட்டிக்கொள்கிறேன், காலம் எவ்வளவு மாறியிருக்கிறது!

நானும் ஸ்டெப் கட்டிங் வெட்டிக்கொள்வதற்காக நிறைய சலூன்களை அப்போது மாற்றியிருக்கிறேன். நம் ஊர் சலூன்களில் ஹீட்டர் முதலிய அட்வான்ஸ் கருவிகள்(!) அறிமுகம் ஆனது அந்த காலம் தான். ஹீட்டர் போட்டுக்கொண்டால் முடி கொட்டி விடும், சீக்கிரம் நரைத்துவிடும் என்று பெருசுகளிடம் இருந்து மிரட்டல்களும் வருவதுண்டு.

பத்தாப்பு, பதினொண்ணாப்பு படிக்கும் போது யாருக்கு அதைப் பற்றி கவலை?? கலங்காமல் மாறி, மாறி ஹீட்டர் போட்டு பணிய வைத்த தலை என்னுடையது!

தெருவுக்கு தெரு அப்பாயிண்ட்மென்ட் எடுத்து/கொடுத்து சைட் அடித்த காலம் அது, இவள் செட்டாவாளா? அவள் செட்டாவாளா என்று அலைவோம். அப்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இவ்வ்வ்வளவு சோஷியலாய் இல்லை என்பது ஒரு குறைதான்.

கடைக்கண் பார்வைக்காக உயிரையே விட துணிந்திருந்த நம்மை முடி கொட்டிவிடும், நரை வந்துவிடும் என்பதெல்லாம் மிரள வைக்கவில்லை. முடிவெட்டிக்கொள்வதற்காக வடசேரியிலிருந்து செட்டிகுளம் ஜங்ஷன் வரை சைக்கிளை அளுத்திக்கொண்டு போயிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பின்னர் வந்தது தான் இப்போதைய டிஸ்கோ கட்டிங்.. கார்த்திக், கமல் ஹாசன் எல்லாம் இந்த ஸ்டைலுக்கு முதலிலேயே மாறி விட்டார்கள். என்னுடைய நண்பன் ஒருவன் அவன்தான் நாகர்கோவிலிலேயே முதன் முதலாக இந்த ஸ்டைல் வைத்துக்கொண்டதாக இந்த பேச்சு வரும்போதெல்லாம் அப்போது பீற்றிக்கொள்வான்.

நான் இன்றுவரை அதே டிஸ்கோவுடன் நிறுத்திக்கொண்டாலும், (ஆமா.. இப்ப மாத்திட்டா மட்டும் நாம சைட் அடிக்கவா போகப்போறோம்? இல்ல வீட்டம்மா தான் உட்ருமா??)

ஆனாலும் இப்போது வித விதமாய் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு பைக்கில் சுத்தும் என் பையனைக் கண்டு கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறேன்.

ம்ம், நாளை அவனுக்கு அசை போட இன்றைக்கு நிறையவே ஸ்டைல்கள் உள்ளன! நம் வாயிலேயே அந்த ஸ்டைல் பெயர்கள் நுழையவில்லை என்பது தான் நிஜம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, August 3, 2011

திருப்பம்

வாழ்வில் ஏதேதோ நாம் நினைக்காத பல விஷயங்கள் பல சமயங்களில் நடந்து விடுகிறது. அதற்கெல்லாம் நாம் காரணம் தேடினால் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

என்னைப்பொருத்தவரை நான் ஒரு பெரும் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக இந்த பதிவுலகிற்கு வரவில்லை. ஏதோ பொழுதுபோக்கு. சில காலங்கள் ஏதோ தோன்றியது, எழுதினேன், பின்னர் ஒரு சிறு இடைவெளி விடும் கட்டாயம் வந்தது. பின்னர் நான்கு மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் ஒரு தொடக்கம்.

சரிப்பா, எங்க போன இந்த நாலு மாசம்? என்று ஒரு கேள்வி பிறப்பது இயல்பு. மனிதனுக்கு பல சமயங்களில் பல பொழுதுபோக்குகள், சில நாலு மாதமாய் நான் சினிமா பார்ப்பதை பொழுதுபோக்காய் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இந்த சினிமா பைத்தியம் பிடிப்பதற்குமுன் ஊரில் நான் தியேட்டருக்குப்போய் சினிமா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என் மனைவியும் அதற்கு வற்புருத்தியதில்லை, அதனால் தப்பித்தேன்.

சிறுவயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன், வாழ்வில் பணத்திற்கான தேடலில் மூழ்க ஆரம்பித்தபின் சினிமாவுக்கான ப்ரியாரிட்டி குறைந்து போனது, எப்போதாவது நேரம் கிடைக்கும் போது டிவி யில் பார்த்தால் தான். கடைசியாக நான் தியேட்ருக்கு சென்று சினிமா பார்த்தது கோகுலத்தில் சீதை என்ற ஒரு அர்ஜீன் படம். குடும்பத்துடன் தான், என் மனைவியுடன் முதலில் பார்த்த படம். நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் என்று ஞாபகம்.

இங்கே துபாய் ஜீவிதம் ஆரம்பித்ததும், சில பல நேரங்களில் அலுவலக நண்பர்களுடன் சினிமாவிற்கு போனதுண்டு. ஓசி டிக்கெட். புதிய தமிழ் சினிமாக்கள் வரும்போது சில சமயங்களில் எங்களுக்கு 10 அல்லது 15 ஓசி டிக்கட்டுகள் கிடைக்கும், ஷிப்பிங் கம்பெனிகளில் இருந்து கொடுப்பார்கள்.

அதற்குப்பின் கழிந்த நாலு மாதங்களில் தினமும் ஒரு சினிமா பார்த்திருப்பேன், சமீபத்திய வெப்பம் சினிமா முதல் ஒரு நாலு வருடங்களுக்கு முன் வரை வெளிவந்த எல்லா முக்கியமான சினிமாக்களும் முடித்து விட்டேன். ஏதோ ஆவேசம் வந்தது போல் தினமும் டொவுன்லோட் செய்து ஒன்று அல்லது இரண்டு சினிமாக்கள்.

அப்போது தான் புரிந்தது, சினிமாவில் இருக்கும் மோகம் எத்தகையது என்பது. நானும் ஒரு காலத்தில் சிவாஜி ரசிகன் தான், பின்னர் புன்னகை மன்னன் வெளிவந்த போது முதல் நாள் (தீபாவளி அல்லது பொங்கல் அன்று?) முதல் காட்சிக்கு அடித்து பிடித்து போனது நினைவில் உள்ளது. ஆனால் அப்போதைய புரிதல் வேறு, இப்போதைய புரிதல் வேறு.

சரி, இனி பார்ப்பதற்கு புதியதாய் ஏதும் இல்லை என்ற ஒரு நிலை வந்ததும், அடுத்த பொழுது போக்காய் பொட்டி தட்ட வந்து விட்டேன். மன்னிக்கவும் இனி மொக்கைகள் தொடரும், எனக்கான அடுத்த தேடல் அல்லது அடுத்த பொழுதுபோக்கு மாட்டும் வரை கொஞ்சம் கஷ்டம் தான், பொருத்துக்கொண்டு அவ்வப்போது வந்து செல்லுங்கள்.

ஒரு விஷயம் உறுதி செய்து கொண்டேன், இனி தமிழ்மணம் அல்லது இன்ட்லியில் பதிவதில்லை, இந்த நாலு மாதங்களில் பல சமயங்களில் பல விஷயங்கள் இணையத்தில் வாசிக்கவும் செய்தேன். என் எழுத்தின் தரம் என்ன? என்ற ஒரு புரிதல் வந்துவிட்டது.

ஒருவேளை அப்படி ஒரு தரம் உள்ளது என்றோ அல்லது இதை பலர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ கண்டிப்பாக தமிழ்மணத்தில் பதிகிறேன். இனி முடிந்தவரை தினமும் சந்திக்கலாம்.

அன்புடன்

வசந்தா நடேசன்

Tuesday, March 1, 2011

இலங்கை குறித்து...

ஒரு சென்சிட்டிவ் பதிவு..

சென்ற வாரத்திலேயே எழுதிவைத்ததை, ஆலோசித்துகொண்டிருந்தேன், வேண்டுமா வேண்டாமா என்று, இருந்தும் என் நிலை இதுதான் என்பதால் துணிந்துவிட்டேன்.

என்னை நிறைய அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போகக்கூடும்.. இதை படித்தால்.. நான் அவர்களுக்கு என்னை பிடிக்கவேண்டும் என்று எழுதவும் வரவில்லை.. என்னைப்பொருத்தவரை எனக்கும், என் தாய்நாட்டுக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் உண்டான நியாயங்களும், தர்மங்களும் மட்டுமே முக்கியம். நான் குறிப்பிடப்போவது இலங்கை தமிழர்கள் குறித்த என் நிலை பற்றி மட்டுமே. பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஒரு சொல் உண்டு நம் தமிழ் மரபிடையே.. இது அதுபோல் ஒரு மணி கட்டும் முயற்சி தான்.. இது குறித்து நிறைய விவாதங்கள், விஷயங்கள் இருந்தாலும் இந்த பார்வை நம்மில் குறைவே.

தமிழ், தமிழர்கள் நிலை என்பது அப்போதைக்கப்போதைய காலம் சார்ந்து இருக்கவேண்டும் என்பது என் கனவு. இன்னும் நாம் அந்த கால அரசவம்ச வாழ்க்கை போலவோ அல்லது வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலம் போலவோ இல்லை.. உலகம் மாறியிருக்கிறது. மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். நம் எண்ணங்களையும் நாம் காலத்திற்க்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும்.

கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய் என்ற பழைய மூன்று பொம்மை கதையும் மனதில் வராமலில்லை.

ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன் படையெடுத்து சென்றான், இலங்கையை கைப்பற்றினான் (கவனிக்கவும்), மலேஷியாவைக் கைபற்றினான்.. என்று பல உண்மைகள்/கதைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன.. என்னைப்பொருத்தவரை இது என்ன என்ன காலத்தில் நடந்தது, எப்படி நடந்தது என்பது தெரியாது.. நானும் உங்களைப்போல் கண்ணால் கண்டது இல்லை.. எல்லாம் யாராலோ, அல்லது எங்கேயோ எழுதிவைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

கடவுள் குறித்து எழுதிய பலவற்றையும் இப்போது கொஞ்சம் மறுத்து மற்ற நிலைகளில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் காலம் இது. ஆனால் இலங்கை தமிழர்களை நம் அரசியல் வாதிகள் இன்னும் விடுவதாய் இல்லை, என்ன செய்வது காலத்தின் கோலம்.

எழுத்து என்பது எழுதுபவன் கைபொம்மை. அதை எழுதியவனே அதில் நிபுணன்.. ஒத்துக்கொள்ள முடிகிறதா?? இல்லையென்றால் வேறு பதிவிற்க்கு இப்போதே சென்றுவிடுங்கள், யாரையும் காயப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல..

ஒரு வேளை உங்களை என் எழுத்து காயப்படுத்தக்கூடும், இருந்தாலும் இது என் அளவிலான நியாயங்களை சொல்லும் ஒரு முயற்சி தான், நாளை நானே இதிலிருந்து வேறுபடக்கூடும், ஒருவேளை நான் உறுதியாக நம்பினால் மட்டும்..

என்னைப்பொருத்தவரை இலங்கைத்தமிழர்களுக்கான ஒரே நிரந்தர தீர்வு (யாருடா இப்ப தீர்வு கேட்டாங்கன்னு சொல்லாதீங்க, நம் மீனவர் பிரச்னை, வரும் தமிழக தேர்தலை கலக்கப்போகும் இப்போதைய தலைபோகும் ப்ரச்னை எல்லாம் இதுதான் என்று நினைக்கிறேன்), அவர்களை தாய்தமிழகத்திற்க்கு மறுகுடியேற்றம் செய்வதுதான். தமிழர்களே அங்கே வாழ முடியவில்லையா?? இங்கே எங்களுடன் தமிழகம் வந்துவிடுங்கள்.. அவர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தந்து இங்குள்ள சக தமிழனுக்கு என்ன என்ன உரிமைகள் உண்டோ அதை அத்தனையும் பெற்றுத்தர தமிழர்கள் போராடவேண்டும்.. இதுவே அவர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.

எப்படி இருந்தாலும் தமிழர்கள் பிற நாடுகளுக்கு பிழைக்க சென்றவர்கள் தான் என்பதை முதலில் நினைவில் கொள்ளவேண்டும்.. பிழைக்கமுடியவில்லையா, திரும்பி வந்து விடுங்கள் தாய்நாட்டுக்கு. ஏன் அடம் பிடிச்ச கழுதையாய் அங்கிருந்து செத்து மடிகிறீர்கள்?? நம் தமிழினம் நம் தமிழர்களுக்கு இந்த உரிமையை பெற்றுக்கொடுக்க போராடினால் நான் மகிழ்ச்சியடைவேன். நம்மைப்போல் அவர்களுக்கும் வாக்குரிமை, முக்கியமாக நீ இலங்கை தமிழன், நீ மலேசிய தமிழன் என்று பாகுபாடு பார்க்காமல் அவர்களுக்கு இந்த உரிமையை வழங்க, அவர்களுக்காக போராட எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ரெடி இப்போது?? எனக்கு பரிபூர்ண சம்மதம். உங்களுக்கு, உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

ஆனால் இதில் முக்கியமானது, இதற்க்கு பெரும்பாலான இலங்கை/மலேஷிய தமிழர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் நாடு இலங்கை அல்லது மலேஷியா?? சாதாரண கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், இந்தியாவும் இலங்கையும் ஆடுகிறது, ஒரு இலங்கை தமிழன் யாருக்கு சப்போர்ட் பண்ணுவான் என்று நினைக்கிறீர்கள்?? கண்ணால் இதற்க்கு முன் இதை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். அவர்களுக்கு அவர்கள் நாடு தான் பெரிது. இதை நான் குறை சொல்லவில்லை.. அவரவர்க்கு அவரவர் நாடு பெரிது.

சமீபத்திய பிரச்னைகளில் கூட, இலங்கை தமிழர்கள், அங்கிருந்து தவித்தபோது, மனிதாபிமானம் கொண்டு நாம் உதவிட நினைத்தது சரிதான், ஆனால் இதை நம்மவர்கள் அரசியலாக்கி அவரவர் அவரவர் வசதிக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்றோ எதையோ சொன்னவர்கள் நேற்று மாற்றிச்சொன்னார்கள், நேற்று அப்படி சொன்னவர்கள் நாளை யார் ஆளுங்கட்சி, யார் எதிர்கட்சி என்பது பொருத்து மாறிக்கொண்டிருப்பார்கள், நாமும் அதனுடன் தலையாட்டிக்கொண்டிருப்போம், அது தான் நடந்து வருகிறது.

அதனால் ஏன் தமிழ்நாட்டு தமிழர்களே, நீங்கள் ஏன் தவிக்கிறீர்கள்? மனிதாபிமானம், எனக்கும் இருக்கிறது, அதனால் தான், தமிழர்களே வாருங்கள் என சொல்லவேண்டும் என்கிறேன். இன்று அகதிகளாய் வந்து நம் மண்ணில் கஷ்டப்படும் சகோதரர்களுக்காக எத்தனை பேர் நம் நாட்டில் போராடியிருக்கிறார்கள்? அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் எத்தனையோ சினிமா எடுத்து நம் தமிழ் மக்கள் காசு சம்பாதித்துவிட்டார்கள் என்பேன் என்னைக்கேட்டால்??

மக்களே சிந்தியுங்கள், மாக்களாக இருக்காதீர்கள் என்று இன்னொரு பெரியாராகும் நினைப்பல்ல
எனக்கு.. காலத்திற்க்கு தகுந்தபடி நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் நிலை..

இது குறித்து நான் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழ் முஸ்லீம்கள், கொழும்பு தமிழர்கள்(??) என்று பலரிடம் பேசியதுண்டு. எனக்கு தெரிந்து நல்ல தமிழ்பெயர் கொண்ட ஒரு கொழும்பு தமிழர் தன்னை தமிழர் என்றே கூறிக்கொள்ளமாட்டார், ஏன் என்று நானும் கேட்டிருக்கிறேன், அதற்க்கு அவர் அம்மா ஒரு மலையாளியாம், அவருடே நாடு கேரளமாம். எப்படி கதை??

இவர்கள் நாம் சென்று அழைத்தாலும் வரப்போவதில்லை.. வரநினைப்பவர்கள் எல்லாம் ஒருவேளை அங்கிருக்கும் ஏழைத்தமிழர்கள் தான், அவர்களும் முழுமனதுடன் வருவார்களா என்பது இன்றும் கேள்விக்குறி தான், ஏனென்றால் நாடு அமைதியாகி விட்டால் கஷ்ட்டமோ, நஷ்ட்டமோ.. அவர்கள் அங்கு வாழ்வதையே விரும்புவதாகக்தான் நான் பேசியவரை எனக்கு தோன்றுகிறது.

இலங்கை அமைதியாகிவிட்டால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதை இன்னொரு சிங்கப்பூர் அளவுக்கு கொண்டு செல்லமுடியும் (அங்கு ஒரு நல்ல அரசியல்வாதி வந்தால்) என்ற நிலையில் தமிழர்கள் வரமாட்டார்கள் என்பது இன்னொரு நிலை.. சொல்லப்போனால் இலங்கையை இந்த கதிக்கு ஆக்கியதே நம் அரசியல் வாதிகள் தான். இலங்கை முன்னேறக்கூடாது என்பதற்க்காக.

அது சின்ன நாடு, ஏற்றுமதி, இறக்குமதி என்று ஆரம்பித்துவிட்டால் இந்தியாவில்/குறிப்பாய் தமிழகத்தில் நம் சிறுவியாபாரிகள் முதல்கொண்டு பல குறு நிறுவனங்கள் வரை போட்டுத்தாக்கி விடும் வல்லமை அவர்களுக்கு இருந்தது(ஏர்செல் மற்றும் ஸ்டெர்லிங்/சிவா கம்ப்யூட்ர்ஸ் தொடங்கியது யாருன்னு உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்), இப்போதும் உள்ளது. ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து துணிகள் மற்றும் பிற எலக்ட்ராணிக் சாதனங்கள் என்று எத்தனையோ இந்தியாவிற்க்கு வந்து இங்கு விற்க்கப்பட்டது இன்னும் என் நினைவில் உள்ளது. அங்கிருந்து இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தவர்களையும் எனக்குத் தெரியும்.

கொழும்பு கோடீசுவரர்கள் அமைதிக்காக அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்ப புரிகிறதா நம்ம பயபுள்ளைகள் எதற்க்கு இலங்கையை போட்டுத்தாக்கினார்கள் என்பது??

அனேகமாய் பொறாமைப்பட்டே இலங்கையில் அமைதியைக்காக்கிறேன் பேர்வழி என்று இந்தியா ஓரளவுக்கு உதவுவது போன்ற தோற்றத்தில் செய்த உதவிகளே இன்றைய இலங்கை நிலைக்கு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. மனிதர்களே திருந்துங்கள், மனதை திருத்துங்கள் என்று சொல்லமுயன்றுள்ளேன். நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 22, 2011

சொந்தகதை, சோக கதை



வெளிநாட்டு மோகம் (எங்க, அதுக்குள்ள, நம்மள முளுசா படிச்சிட்டு போங்க, என்னைப்பத்தி தெரியும்ல! பிச்சுபிடுவேன், பிச்சு) என்று ஒரு நண்பர் நேற்று எழுதியதைப்படித்ததிலிருந்தே ஒரு சோகம் மனதில் இழையோடிக்கொண்டிருந்தது.. அவர் பதிவில் ஒரு பதிலும் போட்டுவிட்டேன், ஏதோ அவசரத்தில் சிறு நகைச்சுவை இழையோட(?) அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போதே ஆர்வம் தாளாமல்.

மாலை வீட்டிற்கு வந்து நிதானமாக அந்த பதிவிற்க்கு வந்த எல்லா பதில் கருத்துகளையும் படித்து பார்த்தேன், பலதரப்பட்ட கருத்துகளும் இருந்தன, உண்மையில் அது மனதை ஒரு சீராய்வு செய்ய வேண்டிய நேரம் போல் இருந்தது.

மாலை இன்னும் ஒரு கருத்து சொல்லலாமா என்று யோசித்தேன், அது கொஞ்சம் நீளும் போல் இருந்ததால், சரி இதை நம் ஒரு பதிவாகவே விட்டுவிடுவோம் என்று நம்ம கடைக்கு வந்து விட்டேன்.

ஏன், எதற்க்கு, எப்படி, எந்த நிலையில் வந்தோம் என்பதில் அவரவர்க்கு ஒரு ஆயிரம் காரணங்கள் இருக்கும் சொல்வதற்க்கு, நான் அந்த பதிவில் நண்பர் எழுதியிருப்பதில் அனேகத்தை ஒத்துக்கொள்கிறேன், அதை இங்கே விளக்க முற்பட்டால் அவரை காப்பி அடித்தது போல் ஆகும். ஏற்கனவே நீ எழுதியது தானா?? அல்லது ‘மண்டபத்ல யாராவது எழுதிக்குடுத்தாய்ங்களா‘ன்னு கேக்குறாங்க சார்.

பள்ளோடத்லயே சீராய்வு மற்றும் ரிவிஷன் கருமம்லாம் பண்ணதில்லை.. பண்ணிருந்தா நாமளும் ஊருலயே இருந்துருப்போம்ல?? ஆனால் இது எண்ணற்ற சுதந்திரங்கள் கொண்ட பதிவுலகம், கையில் பிரம்புடன் பின்னால் போடவும், தலையில் குட்டவும் அருகில் யாரும் இல்லை என்று வாழும் உலகம்.

நான் அப்போது முதன்முதலில் ஏர்போர்ட் வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.. என் குடும்பமே அழுதது அருகில் நின்று ஏர்போர்ட் வரை வந்து. மனைவியின் கண்ணீர் மாளாது.. நான் அப்போது இந்தியாவில் வாங்கிய அதிகபட்ச சம்பளம், ரூபாய் 6250 மாதம் ஒன்றுக்கு. இரண்டு குழந்தைகள், ஊரில் அப்பா கட்டிய சொந்த வீடு இருந்தாலும், மாடி போர்ஷனை லீசுக்கு கொடுத்து விட்டு நான் வேலைபார்த்தது திருநெல்வேலியில். அந்த சம்பளம் வாங்கி குழந்தைகளை கவனித்து வீட்டை மீட்பது ஒரு கனவாகவே பட்டது எனக்கு.

நெஞ்சில் பாரம் அடைக்க ஏர்போர்ட்டுக்குள் சென்றேன். பொதுவாகவே முதல்முறை வருபவராக இருந்தாலும் சரி, முப்பதாவது முறை வருபவராக இருந்தாலும் சரி, தனியாய் என்னைப்போல் இந்திய ஏர்போர்ட்டுகளில் கிளம்பி வரும்போது வழக்கமாய் முகத்தில் ஈ ஆடாது. ‘உம்‘ மென்று இருப்பார்கள். அதே இங்கிருந்து ஊருக்கு செல்லும் போது பயபுள்ளைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்கவேண்டுமே, ஆஹா, ஓஹோ என்று டியூட்டி ப்ரீயில் பர்ச்சேஸ் கள கட்டும், முடிந்தவரை வாங்கித்தள்ளுவார்கள் உறவுகளுக்காக.

மாப்ளை நாலு பாட்டில்தான் உடுவானாம்ல?? என்ற கருத்துரைகள் அதிகமாக கேட்கும். சரி எங்கள் விடுமுறைக்காலம் எப்படி இருக்கும் என்ற சொந்தகதை, சோக கதை??

30 நாள் லீவில் முதல் வருடம் சென்றவுடன்..

வரவேற்ப்பு பலமாக இருக்கும், நல்லாயிட்டடா, நல்லவாடா என்று தெருவில் காணும் உறவுகள் நண்பர்கள் எல்லாம் சொல்வார்கள், எப்ப வந்த, எப்ப வந்த என்று நச்சரிப்பு தாளாது. மனைவி கடைசி வாரம் நெருங்க, நெருங்க மீண்டும் அழுகை ஆரம்பித்திருப்பாள்.
போகவேண்டும் என்று சொல்லும் போது, இப்பதான் வந்த, அதுக்குள்ளயா? என்பார்கள் உறவுகள்.. எல்லாம் நடக்கும்.

முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.

இரண்டாம் வாரம், எல்லாம் நல்லா இருக்கா, வேலை எல்லாம் எப்படி என்று விசாரணைகள் இருக்கும்.

மூன்றாம் வாரம், மக்கா, நல்லா இருக்கியா? நம்ம வீட்டு பக்கம் ஒரு நடை வரப்பிடாது?? ஏதாச்சும் விசா இருந்தா சொல்லு நம்ம பய ஒருத்தன் இருக்கான், கொஞ்சம் தூக்கி விடு மக்கா என்பார்கள்.

அடுத்த வாரம், அந்த பயலுடன் வந்து நிற்ப்பார்கள், கையில் பாஸ்போர்ட் காப்பி மற்றும் பயோடேட்டா சகிதம். நாம நம்ம விசா எப்ப கிழியப்போகுதோன்னு இருப்போம், அந்த சமயத்துல இவுக?

ஐந்தாம் வாரம், மக்கா பாத்து சரி பண்ணிரு, போன்பண்ணு என்ன? என்பார்கள் கிளம்பும் போது மெனக்கெட்டு எதிரில் வந்து சந்தித்து.

உதவக்கூடாது என்ற எண்ணமில்லை, நான் வேலைசெய்யும் இடத்தில் இப்போது 80 சதவீதம் தமிழர்கள் தான், இதற்க்கு நானும் ஒரு சிறு காரணம். ஆனால் அதற்க்கான தேவைகள் வரும்போதுதான் இதை செய்ய முடியும். ஊரில் கேட்டவுடன் செய்யும் நிலையில் அனேகமாய் யாரும் இருக்கமாட்டார்கள். அல்லது நாம் தேடும் தகுதியுடைய நபர் நம் சொந்தத்தில் இல்லாமலிருப்பார், தகுதியில்லாத நபர்களை எடுத்தால் நமக்கு நேரமும், பண விரயமும், காலவிரயமும் தான் மிச்சமாகி இருக்கிறது அனுபவத்தில். சம்பந்தம் இல்லாமல் இது ஏன் இங்கே என்றால் கீழ்கண்ட கடுப்புதான் யுவர் ஆனர்??

5 வருடங்கள் கழித்தும் நாம் யாருக்காவது ஒருசிலருக்கு உதவும் நிலையில் இருந்திருக்கமாட்டோம் பல சமயங்களில். அப்போது எப்படி நம் விடுமுறை கழியும்?, படியுங்கள் கீழே.

முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.

இரண்டாம் வாரம், நம் கண்ணிலேயே ஒருவேளை பட்டிருக்க மாட்டார்கள், ஒரு வேளை பார்த்தால், ம்ம், நல்ல ஜோருதான், புது வீடு எல்லாம் வாங்கிட்ட போல இருக்கு, பாத்துக்க, அது கொஞ்சம் வில்லங்கமான இடம், நாலு இடத்துல விசாரிச்சுதான் வாங்கினியா என்பது போல் பேச்சு இருக்கும்

மூன்றாம் வாரம், என்னா வந்து ரொம்ப நாளாச்சு போல இருக்கு? ம்ம், வேலை முக்கியம் பாத்துக்கோ என்பார்கள்.

நான்காம் வாரம் கேட்பார்கள் பாருங்கள் ஒரு கேள்வி?? நீ இன்னும் போகலையா?? விட்டால் அவர்களே நம்மை ஏர்போர்ட்டில் கொன்டு விட்டுவிடுவார்கள் போல் இருக்கும்.

ஒரு வேளை ஐந்தாம் வாரமும் நாம் கண்ணில் பட்டு தொலைத்தால், வேலைய உட்டு தூக்கிட்டானா?? அப்ப இனி இங்கதானா?? என்ன பண்றதா உத்தேசம்?? என்பார்கள்.



நம்ம நிலைமைய பாத்தீங்களா?? ம்ம்ம்ங்ங்ங்.

வேதனையுடனும், சோகத்துடனும், வசந்தா நடேசன்.

Monday, February 21, 2011

தமிழ் மணம் தர வரிசை

இன்றைய பிரபல பதிவரின் ஒரு பதிவை படித்தபோது எனக்கும் இந்த எண்ணம் வந்து தொலைத்தது.. போதாத காலமோ என்ன எழவோ என்று நினைத்துக்கொண்டே என்னை சத்தியசோதனைக்கு ஆட்படுத்தினேன்.

முதலில், நீங்கள் ப்ரீ கேட்டகரில இருக்கீங்கோ, தரவரிசை எல்லாம் இல்லை என்று வந்தது.. ஓஹோ, காசு கட்னாத்தான் குடுப்பாங்க போலன்னு நினைச்சுட்டு சரி, ஆராரு இருக்கான்னு பாப்போம் என்று மேய்ந்து கொண்டிருந்தேன். வரிசை போனது, போனது போய்க்கொண்டே இருந்தது நீளமாக பக்கம், பக்கமாய்.. இரண்டாயிரத்தை தாண்டி..

என்னடா இது, நம்ம அவ்ளவ் மோசமா என்று நினைத்துக்கொண்டு எழுதுரதை நிப்பாட்டிபுடலாம் என்ற ஒரு எண்ணத்திர்க்கே வரஇருந்தேன்.. நல்லவேளை பதிவுலகம் செய்த புண்ணியம்..(???###@@@$$$!!!) இன்னொருமுறை செக் பண்ணலாமே என்று ஒரு எண்ணம் வந்து மீண்டும் சரியாக ப்ளாக் நேமை காப்பி பேஸ்ட் பண்ணினேன்..
366



ஒரு நிமிடம் துள்ளிக்குதித்துவிட்டேன், இதெல்லாம் நமக்கு ரொம்ப பழகிய நம்பராச்சே! நாமல்லாம் படிக்கும் போது அனேகமாய் 36 வது ராங்குக்கு மேல்தான்!! 36 என்பது பாத்து, பாத்து பழகுன நம்பர், இப்பம் கூட ஒரு ஆறு.. 366. எதிர்பார்க்கவில்லை. நான் ஏதோ 3699 என்பது போல் ஒரு நம்பரை தான் உண்மையில் எதிர் பார்த்தேன.. சூப்பர் போங்கள்.

இந்த பதிவுலக போதையை சுட்டியிருக்கும் அதே நேரத்தில் இன்று படித்த ஒரு நியாயமான பதிவும் முன்பு படிக்காதவர்கள் படிக்கவேண்டும் என நினைப்பதால் கீழே சுட்டியை தருகிறேன்.. பதிவுலக போதையினால் என்னென்ன நடக்கலாம், எவ்வாறு உங்கள் பாதையை அது திசைமாற்றக்கூடும் என்று ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கும் பதிவு..


ஹிட்ஸ்............சீரழிவின் தொடக்கம்!

Wednesday, February 16, 2011

மன்னிக்கவும் இன்னொரு கதை..

வணக்கம், இன்றும் ஒரு அனுபவப்பதிவே..

வெகு சமீபம் என்றுதான் சொல்லவேண்டும்.. இன்று ஒன்றுக்கும் ஆகாமல் சோம்பேறி குப்புசாமி போல் ச்சும்மா எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இணையத்தை மேய்ந்தபோது திரும்பவும் ஒரு ஜெயமோகன் கதையை படிக்க நேர்ந்தது, இது விபத்தா அல்லது தேடிப்போய், காசுகொடுத்து (இன்டர்நெட்டுக்கு காசு கட்டணும் சார்..) வாங்கிய சனியனா?? என்று தெரியாது. ஆனால் அந்த கதையை என்னால் வரிக்கு வரி ரசிக்க முடிந்தது, ஏன் பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் என்பதுதான் நிஜம்.

பலவகை எண்ணங்கள் வந்தன.. கதையை படிக்கும் போது, ஆஹா இந்த ஆள் இந்துக்களை சாடுகிறார் என நினைத்தேன் முதலில். பின்னர் ஒரு நிலையில் இவர் கிறிஸ்தவர்ளையும் வறுக்கிறாறே என்று தோன்றியது, இது என்னடா இது என்று தொடர்ந்தால், ஹிந்துக்களையும் , கிறிஸ்தவர்களையும் சேர்த்துப்பிடித்து ஒரு அவியல் பண்ணுகிறார் முடிவில். அது அவியல் அல்ல, ஓரளவுக்கு உண்மையிருக்கலாமோ?? என்று தோன்றியது, என் ரசனையை கதையை கடைசிவரி வரை படித்துவிட்டு கூறினால் மகிழ்வேன். முஸ்லீம்களுக்கும் இந்த கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை, நீங்கள் நம்பி வந்து படிக்கலாம், ரசிக்கலாம்.

நான் கடவுள் என்பதனை 100 சதவீதம் நம்பும் ஆத்திகனும் அல்ல.. (ஆத்திகர்களிலேயே பலர் நம்புவது இல்லை என்று தெரியும்) அல்லது நூறு சதவீதம் நம்பாத நாத்திகனும் அல்ல. (நாத்திகர்களிலேயே பலர் மஞ்சள் துண்டுடன் நம்புகிறார்கள் என்றும் தெரியும்) ஏதோ இருக்கிறது என்பதை நம்புகிறேன், அதை கேள்விகேட்காமல் ஒத்துக்கொள்கிறேன், என் பார்வைக்கு சரி யெனும் பட்சத்தில்.

நான் அல்லது நாம் இன்று ஒன்றை சரியென்போம், நாளை இன்னொன்றை சரியென்போம், அது மனித இயல்பு. அதற்க்கு மதத்தையோ அல்லது ஜாதியையோ மனதில் வைத்து தனிமனிதரை குறைசொல்வதிலோ அல்லது விவாதங்களில் இறங்குவதோ பயனில்லை. நம் முன்னோர்கள் நிறைய இதுகுறித்து செய்திருக்கக்கூடும், நாம் இது விஷயத்தில் புதிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் என் நிலை.

இருந்தாலும் யார் யார் இதை ரசிக்கமுடியும் யாரால் முடியாது என்பதையும் சிறு உலக அனுபவத்தால் இப்போது சொல்லவேண்டியது என் கடமை என்று நினைப்பதால் ஒரு சிறு பட்டியல் கீழே.. உங்களுக்கு கீழ்வரும் தகுதியும், திறமையும்(?) இருக்கிறதென்றால் கடைசியில் வரும் சுட்டியை சுட்டி மகிழுங்கள், நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டுமல்லவா?

1) முஸ்லீம்கள் தாரளமாக இதை படிக்கலாம், இது ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போட்டு கும்மியிருக்கும் கதை.
2) நீங்கள் தீவிர ஹிந்து/கிறிஸ்த்தவ விசுவாசி என்றால் இப்போதே அப்பீட் ஆகிக்கொள்ளுங்கள், இந்தக்கதை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
3) இதையும் மீறி படிக்கிறீர்களா?? அவசரப்பட்டு பாதியில் வந்துவிடவேண்டாம், கடைசி வரை படியுங்கள், என்னை நம்பி.
4) நான் இந்தக்கதையில் பார்த்தது, ஜாதி, மத வித்தியாசமில்லாத ஒரு ஜெயமோகனைத்தான், ஆனால் அவரை ஜாதியவாதி என்றும், இந்துத்வா என்றும் இதற்க்குமுன் இணையத்தில் படித்தது தவறு என்று உண்மையில் எனக்கு தோன்றியதால் தான் இதை எழுதுகிறேன்.
5) நான் இன்று ஜெயமோகன் ஆஹா ஓஹோ என்பேன், நாளை எனக்கு தவறெனப்பட்டால் அதையும் இதைப்போல் சுட்டிக்காட்டுவேன் (எப்பூடி..) , என்னை நம்பலாம் என்று தோன்றினால் கீழே சுட்டலாம்

மாடன் மோட்சம்

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, February 14, 2011

பீர் கடை

முஸ்கி:- இது என் நண்பனால் எழுதப்பட்டது, பையன் ப்ளாக் எழுத நல்ல ஆர்வமாக இருக்கிறான், எல்லாம் நம்ம கடைய பாத்துதான். ஆனால் பிள்ளையார் சுழிபோட நேரம் கூடிவரவில்லை இன்னும். அவசர வேலைகள் காரணமாக, நான் இன்று பிஸி என்றதும் அவனே மெனக்கெட்டு எழுதி இதை நீ எழுதியதாக போடு என்று இப்போதுதான் வேறு தலைப்புடன் ஈமெயில் வந்தது.. (நன்பேண்டா..) கொஞ்சம் திருத்தங்களுடன் அப்படியே கீழே..

நாங்கள் அனைவரும் கல்லூரியை முடித்து பின்னர் / /course ஐ நான் முடித்திருந்த நேரம். துடிப்புள்ள நான்கு இளைஞர்களாகிய நாங்கள் சொந்தமாக தொழில் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். எராளமான சிகரட்டுகளை துவம்சம் செய்த பிறகு ஒரு directorial board முடிவு செய்யப்பட்டது. அதன் படி முதல் board of director's மீட்டிங் ஒரு சுப யோக ஞாயிற்று கிழமையில் கன்னியாகுமரி கடற்கரையில் கூட்டுவது என்றும் மேலும் அந்த மீட்டிங்கில் நம் கம்பனியின் பெயரும் mode of operation உம் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு தொழில் நிறுவனம் என்றால் அதற்கு முதலீடு தேவை அல்லவா. அதனால் ஒவ்வருவரும் ருபாய் 100 முதலீடு செய்வது என்று / / படித்த மூத்த அறிவாளியான என்னால் முடிவு எடுக்க பட்டது. (நம்மள பத்தி சொல்லதுல பயபுள்ளைக்கு சந்தோசத்த பாருங்களேன்!) அந்த ஞாயிற்று கிழமையும் வந்தது. நாங்கள் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்கும் பொழுதே ஒருவன் சொன்னான் "பஸ் டிக்கெட் கூட நாமல்லாம் போர்டு மெம்பரானதால கம்பெனி கணக்கு தான், அதனால் நீ நம் முதலீட்டில் இருந்தே செலவு செய்" என்று. அங்கு தான் ஆரம்பித்தது சனி.

பஸ் நிறுத்தத்தை அடுத்தது தான் நம்ம ரெகுலர் பீர் கடை, வாரா வாரம் தவறாமல் ஆஜர் போடும் இடம். நம்மலாம் கடைக்கு ரெகுலர் customer வேறு. பஸ்ஸில் இருந்து இறங்கிய உடன் ஒரு கிராதகன் சொன்னான் நம்ம போர்டு மீடிங்க பீர் சாப்பிட்டுட்டே ஆரம்பிக்கலாமே என்று. பொதுவாக இந்த மாதிரி நலல ஐடியா ஒருவன் சொன்னால் அதை மறுக்கும் கெட்ட பழக்கம் எங்க நட்பு வட்டாரத்தில் என்றுமே இருந்தது இல்லை. எனெவே ஓசியிலே conference ரூம் கிடைத்தது என்ற சந்தோஷத்தில் நேராக நம்ம கடைக்கு சென்று நம்ம போர்டு மீட்டிங் ஆரம்பம் ஆனது.

பஸ்சுக்கே கம்பெனி கணக்கு என்று சொன்ன நம்ம கிராதகர்கள் பீருக்கு தனியா காசு கொடுககவா போறாங்க, அப்படி இப்படி போர்டு மீடிங்கில் இருந்த எல்லா agenda points discuss பண்ணி முடித்து நம்ம ரெகுலர் பாட்டி கடைக்கு போய் வடையும் டீயும் தின்று நாகர்கோயில் பஸ் ஏறும் பொது கம்பெனி கணக்கில் பாக்கி இருந்தது 50 ருபாய் என்று நினைவு. அந்த பணத்தில் ஒரு பொது visiting கார்டும் லெட்டர் padum எங்களால் அடிக்க முடிந்தது. (நல்ல வேளை நம்ம பய புள்ளைக ஒரு பீரோடு நிருத்திக்கிட்டானுங்க). அப்படி ஆரம்பிச்சது தானுங்கோ M.S.Pharma Chem (மூணு பேரோட பெயர் M ல அரம்பிக்குமுங்கோ ஒருத்தர் மட்டும் S ங்கோ).

ஒரு வாரத்திலேயே அந்த கம்பெனி போர்டுல இருந்து மூணு பேர் விலகுனதும், அந்த லெட்டர் பேட வைச்சு நம்ம நண்பர் ஒருவர் பெருங்காய கம்பெனி ஆரம்பிச்சு, மாட்டு மருந்து டீலர் ஷிப் எடுத்து அப்புறம் சாக்லேட் டீலர் எடுத்து ஓஹோன்னு வியாபாரம் பண்ணினார் என்பது வேறு கதை.

நாங்கள் இப்பொழுதும் ஒன்றாக சேரும் பொழுது கன்னியாகுமரி செல்கிறோம் (ஆனால் ஒவ்வருவரும் இப்போது ஒவ்வொரு ஊரில், நாட்டில் இருக்கிறோம்), பாட்டிக்கு இப்பொழுதும் எங்களை நினைவு இருக்கிறது. அதே கவனிப்புடன் சூடாக வடை தருகிறார்.

பஸ்ஸில் சென்ற நாங்கள் இப்போதெல்லாம் காரில் செல்கிறோம். வெகு சமீபத்தில் பீர்கடைக்குப்பதில் ஹோட்டல் தமிழ்நாடு பார் கடைக்கு போனோம், Gold Flake Cigarette இப்பொழுது ரோத்மன்ஸ் ஆகவும் Benson & Hedges அகவும் மாறி உள்ளது. ஆனால் அந்த குதூகலம் இல்லை... கவலையே இல்லாத அந்த வாழ்கை இல்லை...

இதுவெல்லாம் போக சென்ற ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்து போன் வருகிறது (நான்கு பயல்களும் சேர்ந்து ஒரு இடத்திற்கு போனால் என்ன செய்வார்களோ என்ற பயம் தான் காரணம்). பழைய பீர் கடை இப்பொழுது அங்கு இருக்கிறதா என்று தெரிய வில்லை. அடுத்தமுறை அதை ஆராய்ந்து கண்டிப்பாய் சொல்கிறேன். மனைவியை விட்டு (இவனுகளோட போக விட்டால்?) நம் மக்களுடன் தனியே செல்லும்போது.

பய ரசனையாய்தான் எழுதியிருக்கான், நான் ரசித்தேன்.. நீங்கள்??

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, February 6, 2011

‘சோற்றுக்கணக்கு‘ குறித்து...

இணையத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து நான் படித்துவரும் ஒரு பதிவரின் பதிவு வழியாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்ற சிறுகதையைப்பற்றி தெரியவந்தது. நேற்றே நம் பதிவரின் பதிவைப்பபடித்ததும் இந்தக்கதையை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதிற்க்குள் வந்தது.

நேற்று ஜெயமோகனின் தளத்துக்குச்செல்லும் நேரம் கிடைத்தது, அப்படியே நுனிப்புல் மேய்ந்து விட்டு அவரைப்பற்றிய சொந்தப்பக்கத்தை மட்டும் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். எங்கள் ஊர்ப்பக்கம் உள்ளவர் என்று தெரிந்தது, அதுவும் வெளிவந்ததற்க்கு ஒருகாரணமாக இருக்கலாம்.

நம்ம உள்ளூர்காரர்தானே என்ற ஒரு மலிந்த பார்வையும் தமிழர்களுக்கு உண்டுதானே? வெளிநாட்டுப்பொருளுக்கு இருக்கும் மரியாதை, மதிப்பை எந்த உள்ளூர் பொருளுக்கு கொடுக்கிறோம் நாம்? மேலும் நானும் எழுத்தாளர்தான், எனக்கும் வேலை இருக்கிறது(?) என்ற நினைப்பாகவும் இருக்கலாம். நான் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று என்னை சொல்லிக்கொள்வதில்லை, என்றாலும் என் பொழுதை போக்க எழுதுபவன் தானே.

எனக்கு சிறுகதைகள் பற்றிய ஆர்வம் அற்றுப்போய்விட்டதென்று தான் நினைக்கிறேன். இணையத்தில் இப்போது தமிழ் படிப்பதற்க்கு முன்பு இணையத்தில் வெறும் பத்திரிகைகள் படித்த அனுபவம் தான் எனக்கு அதிகம். வெகு சின்னவயதில் குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படித்த அனுபவம் தான். கொஞ்சம் வளர்ந்தபின் பள்ளி விடுமுறைகளில் பக்கத்து அக்கா வீட்டில் ஓசியில் கிடைத்த கடல்புறா படித்த அனுபவமும் உண்டுதான். கல்லூரி சென்றதுமுதல் சினிமாவிற்கும் சைட்அடிப்பதற்குமே நேரம் சரியாக இருந்தது, இப்படி சிறுகதைகள் நாவல்கள் பக்கமே போனதில்லை.

பணம் தேடவேண்டிய வயது வந்தபோது பணத்தின் பின்னால் ஓடவும், அதுகுறித்த தேடலிலுமே காலம் கழிந்துவிட்டது, என் குற்றம் தானா தெரியவில்லை.

சரி, சோற்றுக்கணக்கு பற்றி சொல்லவருகிறேன், இன்றும் அலுவல் விட்டு வந்ததும் ஒரு ஆர்வமும் இல்லாமல் பொட்டிதட்ட உட்கார்ந்தேன், வரும் வழியிலேயே கம்ப்யூட்டருக்கு செலவழிக்கும் நேரத்தை இனி குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையிலேயே வீட்டுக்கு வந்தேன். கழிந்த இரண்டு மூன்று நாட்களாய் ரொம்ப உழைத்துவிட்டேனோ என்று நினைப்பில் வந்த ஒரு உளைச்சல் என்று சொல்லலாம்.

சரி இந்த கதையை படிக்கலாம் என்று ஒரு ஆர்வமே இல்லாமல் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கதை ஒரு கட்டுரை வடிவில் ஆரம்பித்தது, அந்தக்கதையின் ஆழக்கருத்தை மெள்ள விளக்கிவிட்டு கட்டுரை வடிவிலிருந்து ஒரு கட்டத்தில் கதைக்குள் ஜெட் வேகத்தில் நுழைந்து உணர்வுப்பூர்வமாய் உள்ளே இழுத்து வைத்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்று சொல்லலாமா அல்லது குறுங்கதையா? எனக்கு கதை என்பதே உணர்வற்றுப் போய்விட்ட நிலையில் இது சிறுகதைக்கும் கொஞ்சம் அதிகம் அல்லது குறுங்கதைக்கும் கொஞ்சம் சின்னதாக என்அளவில் நினைக்கிறேன்.

கதையை இங்கே விளக்கப்போவதில்லை, அது என் நோக்கமும் அல்ல, ஆனால் இதன் முடிவில் அதன் சுட்டியை வைப்பேன் கண்டிப்பாய் நீங்கள் சென்று அதை படிக்க வேண்டும் என்பதற்க்காக.

ஒரு சின்ன முன்னுரை மட்டும் இங்கே. இது ஒருகாலத்தில் ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் நம்மிடையே கலந்து கட்டி இருந்த நம் மக்களின் வறுமையையும், அவர்களின் வாழ்க்கை முறையும் பற்றியது.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் அதை தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன், கதையில் வரும் கொடும் வறுமை கடவுள் புண்ணியத்தால் இன்று நம்மிடையே இல்லை.

அதுவும் பொழுது போக பொட்டி வாங்கி வைத்து தட்டும் நம்மில் பலர் இதைப்பற்றி அறிந்திருக்கவே வழியில்லை. நல்லது தான், ஆனாலும் நாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது என்ற ஒரு கொள்கை விரும்பியோ, விரும்பாமலோ என்னிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.

நான் என் பதிவிற்கு வருகைகளைக்கூட்டவோ அல்லது திருவாளர் ஜெயமோகனுக்கு ஜால்ரா தட்டும் எண்ணத்திலோ இதை எழுதியிருக்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம், மன்னிக்கவும். அவரின் தமிழை ரசித்து, இந்த வகை எழுத்துக்கள் இன்னும் சந்தையில் இருக்கின்றன என்பதை தமிழ் வளர மக்களிடம் பரப்பலாமே என்ற ஒரு நல்லெண்ணமே.

அவர் கதையில் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு பதில் எழுதிப்போட்டிருக்கமுடியும், ஆனால் இதை அப்படியே அங்கே விடுவதை விட இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். மேலும் இந்த வகை சிறுகதைகள் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இன்னும் ஒருசிலர் பெறட்டுமே என்ற எண்ணமே.

உண்மையில் அந்த கதையில் வரும் பாத்திரம் விளக்கிய உணர்வுகள் இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது, நான் அந்த அளவு வறுமையை சந்தித்தவனில்லை எனினும் என் அந்த கால வறுமைக்கும் இதற்க்கும் ரொம்ப தூரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்கள் உணர்வுகளை பிழியப்போகும் அதன் சுட்டி இங்கே சோற்றுக்கணக்கு!

எனக்கு இங்கே கருத்துக்களை ஏதும் சொல்லாமல் நீங்களும் கதையை படித்துவிட்டு உங்கள் பதிவில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, February 1, 2011

செயல்திறன் அல்லது தனித்திறன்

எந்த வேலையாக இருந்தாலும் அதற்க்கான தனித்திறமை வேண்டும்!



இந்தியனை பற்றி நான் சொன்னதில்லை இது, சொன்னால் அது செய்தியும் அல்ல. இந்த வீடியொவில் வரும் நபர் தமிழர் அல்லது மலையாளியாக இருக்கவேண்டும், ஆனால் இந்த வீடியோ எப்படி வெளிநாடு போய் கீழ்வரும் ஈமெயிலில் இருக்கும் வெள்ளையர்களை ஆச்சரியப்பட வைத்ததோ தெரியவில்லை! இதை அனுப்பிவிட்டு என்னிடம் வந்து
அந்த வீடியோவை பார்த்தாயா? He is working like a automated machine!
என்று ஆச்சரியப்பட்டது தான் செய்தி.



வழக்கம் போல் சொந்த அடையாளங்களை அழித்தேன், இதை அனுப்பிய என் முதலாளியின் பெயர் உட்பட, டாஸ்க் பாரை கவனிக்க மறந்துவிட்டேன்!! வீட்டுக்கு வந்து வெளியிடும் போது தான் கவனித்தேன், சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டேன், ஒன்று நான் கணக்கெழுதும் புஸ்தகங்கண்ணா, இன்னொன்று என்னுடைய அலுவலக ஈமெயில் தரவிறக்கி, பரவாயில்லை தானே.

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, January 31, 2011

மிரட்டுராய்ங்கண்ணா!

தலைப்பைப் பார்த்து மிரளாமல் வந்ததற்க்கு முதற்க்கண் என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இது மொக்கைங்கோவ். ச்ச்சும்மா உங்களை மிரட்டுவதற்க்குத்தான்(??!!)

நீங்கள் அறுபதுகளில் பிறந்தவர்களா? அல்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, இது உங்களை கண்டிப்பாய் மிரளவைக்கும் என நம்புகிறேன். தினமும் கம்ப்யூட்டரை பாக்ரீங்கல்ல, கண்ணு நல்ல கண்டிஷனா தான் இருக்கும்.

ரைட்டு, இப்ப அப்படியே கீழ்வரும் வரிகளை வரிசைப்படி படித்துவிட்டு கடைசியில் காணும் 'கை'யில்(ஹைப்பர்லிங் தான் சார்!)கிளிக்குங்கள் மிரள்வதற்க்கு..


1.- கடைசியில் இருப்பதை கிளிக்கினால் வரும் விண்டோவில் "click me to get trippy" என்று இருப்பதை கிளிக்கவும்.

2.- கிடைக்கும் படத்தின் மையத்தை குத்துமதிப்பா 30 வினாடிகள் தொடர்ந்து பார்க்கவும்.

3.- மவுசிலிருந்து கையை எடுக்கக்கூடாது சார். 30 வினாடிகளுக்குப்பின் அப்டியே உங்கள் மவுஸ்பிடித்த கையை முதலில் பார்க்கவும். கண்டிப்பாய் ஷாக்காவீர்கள், ஆகவில்லை என்றால்?

4.- இன்னொரு 30 வினாடிகள் பார்த்துவிட்டு நீங்கள் ஆணாயிருந்தால் பக்கத்திலிருக்கும் உங்கள் மனைவியை பார்க்கவும். ஒருவேளை பெண்ணாயிருந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் கணவரை பார்க்கவும். கண்டிப்பாய் மிரள்வீர்கள்!

இங்கே சுட்டவும்..மிரட்டுராய்ங்கண்ணா!

ரைட்கிளிக் பண்ணி (Option வந்தால்!), புதிய விண்டோவுக்கு தள்ளவும், திரும்பி வந்து கமெண்ட் எழுத வசதியாக இருக்கும். (ஹி... ஹி.... ஹி....)

இதுக்கு பேரு "cenesthetic hallucination" ங்களாம், யாருக்கு தெரியும், நான் அப்பாவிங்க.

அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, January 1, 2011

புத்தாண்டு நினைவுகள்

இந்த புத்தாண்டு தினத்தில் ஏனோ இந்த புத்தாண்டு மலரும் நினைவுகள்.

முன்பெல்லாம் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, தமிழ்புத்தாண்டு இந்த மூன்று நாட்களும் நானும் என் நண்பர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து அன்று மட்டும் வித்யாசமாக வேஷ்டி மற்றும் சட்டையில் எங்கள் ஊர்க்கோயில்களுக்கு செல்வது வழக்கம்.

முதலில் எங்கள் ஊர் நாகராஜா கோவில், பின்பு குமாரகோவில், அதன் பின்பு சுசீந்தரம் அல்லது கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில். எல்லாம் முதல் நாள் இரவே பிளான் போட்டு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் அவரவர் வண்டியில் குறித்த இடத்தில் கூடி சரியாய் 9 அல்லது 10 மணிக்கு இதை செய்து முடித்திருப்போம்.

நல்ல சைட் அடிக்கலாம் அதற்க்காக கோவிலுக்கு சென்றோம் என்றாலும் வெறும் சைட் அடிப்பதற்க்காக மட்டுமே என்று சொல்வதர்க்கில்லை. அதன் பின்னால் ஒண்ணாம் தேதி நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும் இருந்தது நிஜம் தான்.

இன்று துபாயில் நண்பர்கள் எல்லாம் காலையில் கோயிலுக்கு போகவேண்டும் என்று நேற்றே முடிவு செய்தார்கள், நான் வரலைங்க, நீங்க எல்லாம் போய்ட்டு வந்திருங்கன்னு நேற்றே சொல்லிவிட்டேன். நான் சோம்பேறி ஆகிவிட்டடேனா?

இங்கு கோவில் அதன் முழுமையான வடிவத்தில் இல்லை என்பது ஓரு பக்கம், அங்கேயும் ஒரு ஹாலில் தான் சாமியை வைத்திருக்கிறார்கள், நம் வீட்டிலும் அப்படித்தான் வைத்திருக்கிறோம், பொறவு ஏன் அங்க வர என்று தான் நினைக்கிறேன்.

எல்லோரும் கோவிலுக்கு போய்விட்டு பதினொன்றரை மணிக்கு வந்துவிட்டார்கள், வீட்டில் என்னுடனிருந்த மற்ற நண்பர்கள் காலையிலேயெ எழுந்து இட்லியும் சட்னியும் ரெடி பண்ணியிருந்தார்கள். நான் வழக்கம் போல் கடைசியில் எழுந்து குளித்துவிட்டு வந்து டிபன் சாப்பிட்டேன்.

ஒன்றாம் தேதி நல்ல விசயங்களை பார்ப்பது, நல்லவிசயங்களைப்பேசுவது என்ற எங்கள் நண்பர் வட்டத்து அந்தகாலப்பழக்கம், எங்களுக்கு நல்லதையே தந்திருக்கிறது, இன்று எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த குறையும் இல்லை, எல்லோரும் நிறைவாகவே இருக்கிறோம், அந்த நாகராஜர், தாணுமாலையன் அல்லது முருகன் அருளால். அனைவருக்கும் நன்றி கூறி என் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Tuesday, December 28, 2010

இணையத்தில் வந்த கதை 2

முதலில் எழுதிய வந்தகதையின் தொடர்ச்சி..

சரி இன்டர்நெட் வரும்போது வரட்டும் மீண்டும் தமிழ்ச்சேவை தொடங்க தீர்மானித்தேன்.. நாம் எழுதாவிட்டால் பதிவுலகம் என்ன ஆகும் என்று அநியாயமாய் கவலை வந்தது. பதிவுலகில் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன், ஆயிரம் கேள்விகள் அநியாயமாய் அடுக்கடுக்காய் வந்தது..

நான் ஒரு இலக்கியவாதியோ கவிஞனோ இல்லை, கிலோ என்ன விலை கேஸ் தான்! கதை எழுதவும் தெரியாது! கட்டுரைகளோ துணுக்குகளோ கூட எழுதியது இல்லை, சரி ஜோக் ஏதாவது என்றால் அந்த ஞானமும் நஹி.. பழகியவர்கள் எல்லாம் என்னை சீரியஸ் ஆசாமி என்றே சொல்லியிருக்கிறார்கள்!

ஏதோ சிறு வயதில் கொஞ்சம் கதைகள் படித்திருக்கிறேன். கன்னித்தீவு(!), டார்ஜான் (!) சிலகாலம் தொடர்ந்ந்ந்து நாகர்கோவில் வடசேரியில் வீட்டுப்பக்கம் லைப்ரரியில் படித்திருக்கிறேன் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில தினசரிகளும் வாராந்திரி மாதாந்திரிகளும் படித்திருக்கக் கூடும். அதிக பட்சம் ஸ்கூல் நாட்களில் சில பல அத்தியாயங்கள் குமுதத்தில் கடல் புறா, கல்கியில் பொன்னியின் செல்வன்... கல்லூரி பருவங்களில் ரசித்தவை, பாலகுமாரன், சுஜாதா, மதன். எல்லாம் அப்போது இருந்து இப்போது காணாமல் போய்விட்ட மடத்துவாசல் தெரு லைப்ரரியிலோ, திருவள்ளுவர் லைப்ரரியிலோ தான். வறுமைக்கோட்டை எப்படி தாண்டுவது என்ற சிந்தனையிலேயே இளமையில் பல காலம் கழிந்து விட்டது என்றாலும் படிப்பதில் ஆர்வம் இருந்தது உண்மை.

முதலில் வந்தகதையை எழுதுவோம், இலக்கணமா இல்லை இலக்கியமான்னு அப்புறம் பாத்துக்கலாம், வடசேரி கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் (சத்தியமா எங்க ஸ்கூல் பேரு அதான் சார்! இப்ப என்ன பேரு வச்சிருக்காங்களோ தெரியவில்லை, அடுத்தமுறை போகும் போது பார்க்கவேண்டும்) கோலப்ப வாத்தியார்ட்ட ஒண்ணாப்பு படிச்சி வளர்ந்த நான் இது எழுதியதே சாதனை தான், கோலப்ப வாத்தியார் இதை ஒரு வேளை படிக்க நேர்ந்நதால் புல்லரித்துப்போய்விடக்கூடும்..

பொதுவாக எழுத வருபவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கக்கூடும், சமூகத்தை திருத்தவேண்டும் என்று கங்கணம் கட்டி எழுத வரலாம், பெயர், புகழ், பணம் சம்பாதிப்பது சிலவேளை நோக்கமாக இருக்கக்கூடும், சிலர் பக்திப்பூர்மாய் விரதம் இருந்து, மாலை போட்டு ஆன்மிகத்தை வளர்க்கப்போறேன் என்று வரக்கூடும்!

நமக்கு இது ஒன்றும் நோக்கம் இல்லை, பின்ன ஏண்டா வந்தன்னு உங்களுக்கு கோபம் வருவது நியாயமானதே! யார் கெட்டநேரமோ படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது, இணையத்தில் தமிழ் படித்தால் படித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது,, எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யம் வந்தது, எவ்வளவு நேரம், எத்தனை புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்.

போகன் என்று ஒருவர் எழுத்துப்பிழை எழுதுகிறார், எங்கள் ஊர்க்காரர் போல் இருக்கிறது.. அகத்தியர் பற்றி நிறைய எழுதுகிறார், கொஞ்சம் அப்படி இப்படி (அழகாக, இனிமையாக சார்!) எழுதினாலும் அவர் கடையில் நிறைய சரக்கு இருக்கும் போல் இருக்கிறது., ரசிக்க முடிகிறது.

அவர் தளத்தின் வழியாக அப்பாத்துரை என்பவரின் தளத்துக்கு செல்லும் படி நேர்ந்தது, அது ஹோல் சேல் மால் போல்! அறிவுச்சரக்கு அதிகம், மோகவண்டாய் பல மணி நேரம் இந்த இருவரின் தளத்திலேயே சுற்றி வந்தேன். மலைப்பாக இருந்தது, நாமும் கொஞ்சம் எழுதிப்பார்த்தால் என்ன என்று ஒரு ஆசை வந்தது.

கண்டிப்பாய் இது பேராசை தான், அவர்களை கம்பேர் பண்ணினால் நம்முது வெறுங்கடை, இருந்தாலும் ஆசை யாரை விட்டது, என்னைப்போல் பலர் இணையத்தில் பொழுது போக்கு எழுத்தாளர்களாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கட்டுரை வடிவில் ஏதேனும் எழுதலாம் என்று சுற்று முற்றும் சனி பகவான் நிற்க்கிறானான்னு பார்த்துவிட்டு இணையத்தில் வந்த கதை என்று பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்.

தமிழ் இணைய வட்டத்தில் நடக்கும் சண்டை, கூத்தைப்பார்த்தால் மனதுக்குள் ஒருவித பயம் வந்தது. சரி, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதலாம் என்று அதற்க்கான ரூல்ஸ் அண்டு ரெகுலேஷனை என் மனசாட்சியும் நானும் பேசுவதாய் கேள்வி பதில் பாணியில் நினைத்துப்பார்த்தேன். கலைஞர் மட்டும்தான் கேள்வி பதில் எழுதலாமா என்ன? இதோ வருகிறது..

மனசாட்சி : யாரு நீனு?

நான் : வசந்தா நடேசன்

மசா : உன் சர்ட்டிபிகட் பெயரா இது?

நான் : சத்தியமா இல்லைங்க

மசா : ஏன், பெயரச்சொல்ல தெகிரியம் இல்லையோ?

நான் : ஆமாங்க. காலம் இருக்கிற இருப்புல எதுக்குங்க வம்பு , நம்ம வாய் வேற சும்மா இருக்காது. வேலில போறத வேட்டிக்குள்ள உட்டாப்ல ஆயிரக்கூடாது பாருங்க.

மசா : சரி, என்ன எழுதப்போர?

நான் : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, கொஞ்சம் கதை, கொஞ்சம் கவிதை

மசா : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, சரி, அது என்ன கொஞ்சம் கதை, கவிதை, இதுக்கு முன்னால எழுதியிருக்கியா?

நான் : எங்கங்க, சின்னவயசுல சைட் அடிக்கும் போது கொஞ்சம் கவிதை எழுதிருக்கேன், சும்மா டிரை பண்ணலாம், காசா, பணமா? சும்மா டயரி எழுதற மாதி எழுத வேண்டியதான்.

மசா : மவன, நீ டயரியே ஜனுவரி 1க்கு பொறவு வாழ்க்கைல எழுதினதே இல்ல, எங்க போட்டு? என்ன தெரியும் உனக்கு?

நான் : என்ன அப்டி சொல்லீட்டீங்க.. டெபிட், கிரடிட் தெரியும்ங்க

மசா : அது எவனுக்கும் தேவைப்படல, தெரியும்ல?

நான் : தெரியுங்க, டெபிட் கிரடிட்னா கல்ல எடுப்பாங்க. சும்மா எதுனா டிரை பண்றங்க, வரலன்னா, அப்புரம் பாத்துக்கலாம்.

மசா : கருத்து சொல்லி ஒன்ன ஓட, ஓட தொரத்தப்போராங்க பாரு,

நான் : பாத்துக்கலாங்க, அஞ்சமாட்டம்ல. நாம சரின்னு படரத எழுதறோம், யாரு மனசும் நோகாம எழுதணுங்க. தப்புன்னா தயங்காம கால்ல விழுந்துருவோம்ல!

மசா : இது தேவையா? எதுக்கு எழுதணும்? எதுக்கு கால்ல விழுணும்?

நான் : பொழுது போகணுங்களே? தப்புன்னா கால்ல விழருதல தப்பே இல்லீங்க.

இப்படித்தான் வந்தேன், கோடிக்கணக்கான(!) ஈமெயில்கள் வந்த கதையை முடிக்க வேண்டி வற்ப்புருத்தியதால், அன்றே எழுதி வைத்திருந்ததை ஓரளவுக்கு ப்ரூஃப் பார்த்து ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன், Sorry for the Delay!

ஒருவழியாய் இண்டர்நெட் கனெக்ஷ்னனும் வந்து இதை பாதியில் விட்டுவிட்டு வேறு சிலவும் எழுதியிருக்கிறேன், ஏதோ யாவாரம் சுமாரா போகுது. இதுவரை யாரும் கல்லைத்தூக்க வில்லை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இணையத்தைத்தான்! நாம ஓடிப்போயிருவோம்ல.

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, December 20, 2010

இணையத்தில் வந்த கதை

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் தமிழ்மணம் மேய்வது வழக்கம். ஒரு நேரத்தில் அது போதையாகவே மாறி ஆபிஸ் வேலையை விட்டு மேய்ச்சலுக்கே நேரம் சரியாகப்போயிற்று,, சரி இது தொடர்ந்தால் வேலைக்கே டிஸ்கி ஆகிவிடும் என்று பயந்து அதை விட்டு விலகி மீண்டும் என் மனைவி சொல்வது போல் ஆபிஸ் கழுதையாகவே மாறி பல காலம் ஆயிற்று.

இருந்தாலும் போதை விடுமோ? மீண்டும் துளிர்த்தது,, அடங்குடா என்று சொல்லிப்பார்த்தும் மனம் அடங்குவதாய் தெரியவில்லை,, தொடங்குடா என்றது ! ஜாதக தோஷம்! (எனக்கா அல்லது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கா தெரியவில்லை!) வேறு வழி தெரியாமல் என்ன செய்யலாம் வேலையா? இணையமா? என்ற ரீதியில் மனதிற்க்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு வழியாய் ‘இரண்டும் தேவையே‘ என்று லியோனி பாணியில் முடிவு செய்து, அதற்க்கான திட்டமிடல் ஆரம்பம் ஆனது,, இணையத்திற்காக வேலையை இழக்கமுடியாது என்பது வேறு விஷயம்!

ஆபிஸ் முடிந்து மாலை ஐந்தரைக்கு வீட்டுக்கு வந்தால் வேறு வேலை ஒன்றும் பெரிதாக இல்லை, சமையலைத்தவிர! (நான் துபையில் வேலை பார்க்கும் ஒரு அனாதப்பய தான், குடும்பம், குட்டிங்கள்ளாம் ஊர்ல இருக்காங்க சொகமா !) சமையலுக்கு ஒரு அரை மணி நேரம் நான் உதவினாலே போதும் மீதியை உடனிருக்கும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. இங்கே குளிர் காலம் இப்போது தொடங்கி விட்டதால் மாலை வாக்கிங் போய் ஒரு வாரம் ஆயிற்று,, சமையலும், இரண்டு லார்ஜ் அடித்து பின் சாப்பிட்டு (இடையிடையே சன் டிவி பார்த்து) பதினொரு மணிக்குத் தூங்கினால் மறுநாள் காலை ஆறு பத்து அலாரம்!

மாலை வேளை இனி இணையவேளை என்று முடிவு செய்தேன் ஆனால் அதற்க்கான பட்ஜெட் மற்றும் செயல் திட்டம் மலைப்பைத் தந்தது! ஒரு மடிகணிணியும், இன்டர்நெட்டும் முதலில் தேவை, இரண்டாவதாக தமிழ் டைப்பிங் கற்றுத் தேரவேண்டும்! நான் ஒன்றும் இலக்கியம் எழுதப்போவதில்லை என்றாலும் முடிந்தவரை தப்பில்லாமல் எழுதவேண்டும் என்று நினைத்ததே காரணம்!

துபையில் சிலகாலமாய் எல்லோரும் லேப்டாப்பும் கையுமாக அலைகயில் நான் மட்டும் நீண்ட நாளாக வேண்டாம் என்று தள்ளிப்போட்டது தவறென்று பட்டது.. கிட்டத்தட்ட கழிந்த இருபது ஆண்டுகளாக வேலைநாட்களில் எல்லாம் ஆபிஸில் கணிணியுடன் மாறடித்து மாறடித்து வீட்டிற்க்கு வந்தும் அது வேண்டாம் என்று வெருப்பில் இருந்தேன் என்பதே உண்மை, விதி யாரை விட்டது, ஆஜர் போட்டாகிவிட்டது இனி ஆடித்தான் ஆகவேண்டும்!

ஒரு சுபவேளையில் கிரடிட் கார்டு உரசி மடிகணிணி வீட்டிற்க்கு வந்தது, இனி தமிழ் கற்க வேண்டும், கற்றபின் இன்டர்நெட் எடுக்கலாம் என்று முடிவெடுத்து துவங்கினால் இடையில்
தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் எண்ணம் வந்து, ஆபிஸிலும் ‘ஓகே‘ சொன்னதால் எல்லாம் போட்டது போட்டபடி பறந்து விட்டேன்,, Back to Family Life, 22 நாள் ஊரில் இருந்தேன், வந்து மீண்டும் துவங்கினேன்.. அவ்வளவு சுலபத்தில் தமிழ் டைப்பிங் கைவரவில்லை, விட்டுவிடுவோமா என்ன? வந்துட்டோம்ல?

இப்போது ஏதோ கொஞ்சம் டைப்ப முடிகிறது என்றால் இதற்க்கு முதலில் ஆசான் சாப்ட்வேருக்கு ஒரு நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நன்றி கெட்ட பாவி ஆகிவிடுவேன்! நல்லாத்தான் கத்து கொடுக்கிறாங்க சார்.. தப்பு தப்பாக தமிழெழுதும் பதிவர்கள் இதைப்பயன்படுத்தி என்னைப்போல் குறைந்த அளவு தப்புகளுடன் எழுதலாம். வாழ்த்துக்கள். 12 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னாலும் உண்மையில் அதைவிட குறைவான நேரமே போதும். அருமையாக டிசைன் செய்திருக்கிறாகள், Chennai Kavigal\Aasaan\Aasaan.exe க்கு மீண்டும் ஒரு நன்றி!

தமிழ் டைப்பும் வேகம் இன்னும் வரவில்லை என்றாலும் கைகள் துடிக்கிறது, என்ன செய்வது எழுத்துக்காரனாய் ஆகி விடுவது என்ற முடிவை மாற்றுவது இல்லை என்று தீர்மானித்து துவங்கிவிட்டேன். டைப்ப, டைப்ப வேகம் வந்துவிடும் என்று தெரியாதா என்ன?

கழிந்த 2 நாட்களாய் இன்டர்நெட்டுக்கு அலைகிறேன், (துபாயில் தான் சார்!)
முதல் நாள் Shindaga Etisalat போனால் வீடு இருக்கும் கட்டிடத்தில் உள்ள வொர்க்கிங் நம்பர் கேட்டார்கள்! இந்த பில்டிங்கில் இருப்பதே நாலு ஃப்ளாட் தான், யாரிடமும் இல்லை என்றேன், அப்ப Al Kaleej Centre Etisalat போ என்றார்கள், அங்கு தான் வொர்க்கிங் நம்பர் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் கொடுக்கும் வசதி இருக்கிறதாம் ! Tenancy contract கொண்டு போ என்றார்கள், சரிங்க சார் என்று அடுத்த நாள் Al Kaleej Centre Etisalat போனால் அங்கே பில்டிங் பிளாட் நம்பர் கேட்டார்கள், டெனன்சியில் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டாகளாம். லேண்ட்லார்டிடம் கேட்டு முனிசிபாலிட்டி கொடுத்திருக்கும் survey plan வாங்கவேண்டுமாம்! நடக்கிற கதையா? வழக்கமாய் இது போல் வேலைகள் இங்கே ஒரே விசிட்டில் முடிந்துவிடும்,

நமக்கு நேரம் சரியில்லையோ என்று ஒரு ஆயாசம் வந்துவிட்டது, நமது தமிழ்ச்சேவை அவ்வளவு தான் என்று வெருத்துப்போய் பத்து நிமிடத்தில் காருக்கு திரும்பினேன், பார்க்கிங் போட்ட 2 திர்கம் தண்டம் ஆக வேண்டாம் என்று பக்கத்தில் உள்ள சிட்டி மார்ட் அல் மயாவில் ராத்திரி சாப்பாட்டுக்கு ரவையும் பழமும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் போதே முன்பு DEWA (Dubai Electricity and Water Authority) கனெக்ஷனுக்காக லேண்ட்லார்ட்டிடம் ஏதோ பேப்பர் வாங்கியது நினைவு வந்தது, வந்து வேகமாய் பைலை புரட்டினால் survey plan தான், தப்பினேன்டா சாமி என்று எடுத்து வைத்தேன் அடுத்த நாள் கொண்டு செல்லலாம் என்று ! எப்போதும் கையில் கிடைக்கும் முக்கியமான எல்லா பேப்பர்களையும் காப்பி எடுத்து வைப்பது எவ்வளவு நல்லது என்று நினைத்துக்கொண்டேன்.

சத்தியமா சுருக்கமா தான் சொல்ல நினைத்தேன், கொஞ்சம் நீண்டு விட்டது, நம்ம கைல என்னங்க இருக்கு! இரண்டு நாட்களாய், கைவசம் இருந்த ஈமெயில், இத்துப்போன கவிதை, சுட்ட கவிதைன்னு ஓட்டியாயிற்று, சொந்தமா எழுதலைன்னா உலகம் நம்மள பத்தி என்ன நினைக்கும் என்று கைவலிக்க, வலிக்க எழுதியாயிற்று. துபாயின் இரவு வாழ்க்கை அழைக்கிறது.

மீண்டும் நாளை வருகிறேனே. நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, December 19, 2010

அயல்நாட்டு அகதிகள்

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
Happy New Year, Happy Pongal என்று மனம் முழுக்க சோகத்தோடு
கைபேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்!

இங்கே கண்ணே மணியே என்று காதலியை
நெஞ்சுருகி கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை!
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல்
கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது.

தொலைதூரக்காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்றே எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும், உடல்நலக்குறையென்றாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகுமுன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை, எங்கள் வியர்வையின் வாசம்
வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள்
கலப்பை பிடிக்கவில்லை என்றாலும் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லாபூச்சிகள்.

திரைகடலோடியும் திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன, விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர்வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! !

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழிலென்று பெருமிதப்பட்டோம்,
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா
முதலீடு செய்திருக்கின்றோம்!
இப்போது தான் புரியத்தொடங்கியது,
சேர்ந்தே நரைக்கவும் தொடங்கியது!

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை! !
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது…
யாருக்காக! எதற்க்காக! ! ஏன்! ! !

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு, குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

நாங்கள் சுமக்கும் சிலுவை, எங்களால்
எங்கள் முதுகில் அறையப்பட்டவை, எங்களுக்குத்தெரியும்
உழைக்க கைகள் வேண்டும் என்று.

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சிணுங்கல், அம்மாவின் அரவணைப்பு
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை
இப்படி எத்தனையோ இழந்தோம்.

எல்லாவற்றையும் இழந்த நாங்கள், இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்?
இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை
இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் நம்மூர்
Ricshaw Man கூட Rich Man தான்.

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்
அயல்நாட்டு அகதிகளாய்!

வா. அருள் குமார்.

==========================================================

மேலுள்ள கவிதை திரு.அருள்குமார் என்ற முகம் தெரியாத நண்பரால் எழுதப்பட்டது. ஈமெயில் மூலம் யாரோ ஒரு அகதி அனுப்பி எனக்கும் வாசிக்கக்கிடைத்தது. நானும் ஒரு அகதி என்பதால் அவரிடம் அனுமதி வாங்க வழியில்லாமல் அப்படியே கொடுத்துள்ளேன்.

முன்பே இது வலைத்தளத்தில் இருந்தால், தயைகூர்ந்து மன்னிக்கவும், நான் புதுசுங்க.

அரபு நாடுகளில் வசிப்பவர்களிடம் பொதுவாகவே இது போல் புலம்பல்கள் சகஜம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் இது போல் புலம்புவதாக தெரியவில்லை. அதிக சம்பள வித்தியாசம் காரணமாக இருக்கலாம். (ஒரு பொறாமை தான்!)

அதுபோல் இங்கு வசிப்பவர்கள் அனேகமாக வருடந்தோறும் ஊருக்குச்சென்று விடுவார்கள், சொல்லப்போனால் எப்படா ஊருக்குப்போவோம்னு காத்திருப்பார்கள். ஆனால் பிற தேசங்களில் வசிப்பவர்கள் அப்படி செல்வதாக தெரியவில்லை. அதுவும் கல்யாணம் முடிந்து விட்டால் அனேகமாக அங்கேயே தங்கிவிடுவதாக கேள்வி. மனைவியுடன் தான். (வயிற்றெரிச்சல் தான் சார்!)

சரி, எல்லாம் விதிப்படி தான் நடக்கும், பொழப்ப பாக்கலாம் வாங்க.

அன்புடன்,

அகதி வசந்தா நடேசன்.