
வெளிநாட்டு மோகம் (எங்க, அதுக்குள்ள, நம்மள முளுசா படிச்சிட்டு போங்க, என்னைப்பத்தி தெரியும்ல! பிச்சுபிடுவேன், பிச்சு) என்று ஒரு நண்பர் நேற்று எழுதியதைப்படித்ததிலிருந்தே ஒரு சோகம் மனதில் இழையோடிக்கொண்டிருந்தது.. அவர் பதிவில் ஒரு பதிலும் போட்டுவிட்டேன், ஏதோ அவசரத்தில் சிறு நகைச்சுவை இழையோட(?) அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போதே ஆர்வம் தாளாமல்.
மாலை வீட்டிற்கு வந்து நிதானமாக அந்த பதிவிற்க்கு வந்த எல்லா பதில் கருத்துகளையும் படித்து பார்த்தேன், பலதரப்பட்ட கருத்துகளும் இருந்தன, உண்மையில் அது மனதை ஒரு சீராய்வு செய்ய வேண்டிய நேரம் போல் இருந்தது.
மாலை இன்னும் ஒரு கருத்து சொல்லலாமா என்று யோசித்தேன், அது கொஞ்சம் நீளும் போல் இருந்ததால், சரி இதை நம் ஒரு பதிவாகவே விட்டுவிடுவோம் என்று நம்ம கடைக்கு வந்து விட்டேன்.
ஏன், எதற்க்கு, எப்படி, எந்த நிலையில் வந்தோம் என்பதில் அவரவர்க்கு ஒரு ஆயிரம் காரணங்கள் இருக்கும் சொல்வதற்க்கு, நான் அந்த பதிவில் நண்பர் எழுதியிருப்பதில் அனேகத்தை ஒத்துக்கொள்கிறேன், அதை இங்கே விளக்க முற்பட்டால் அவரை காப்பி அடித்தது போல் ஆகும். ஏற்கனவே நீ எழுதியது தானா?? அல்லது ‘மண்டபத்ல யாராவது எழுதிக்குடுத்தாய்ங்களா‘ன்னு கேக்குறாங்க சார்.
பள்ளோடத்லயே சீராய்வு மற்றும் ரிவிஷன் கருமம்லாம் பண்ணதில்லை.. பண்ணிருந்தா நாமளும் ஊருலயே இருந்துருப்போம்ல?? ஆனால் இது எண்ணற்ற சுதந்திரங்கள் கொண்ட பதிவுலகம், கையில் பிரம்புடன் பின்னால் போடவும், தலையில் குட்டவும் அருகில் யாரும் இல்லை என்று வாழும் உலகம்.
நான் அப்போது முதன்முதலில் ஏர்போர்ட் வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.. என் குடும்பமே அழுதது அருகில் நின்று ஏர்போர்ட் வரை வந்து. மனைவியின் கண்ணீர் மாளாது.. நான் அப்போது இந்தியாவில் வாங்கிய அதிகபட்ச சம்பளம், ரூபாய் 6250 மாதம் ஒன்றுக்கு. இரண்டு குழந்தைகள், ஊரில் அப்பா கட்டிய சொந்த வீடு இருந்தாலும், மாடி போர்ஷனை லீசுக்கு கொடுத்து விட்டு நான் வேலைபார்த்தது திருநெல்வேலியில். அந்த சம்பளம் வாங்கி குழந்தைகளை கவனித்து வீட்டை மீட்பது ஒரு கனவாகவே பட்டது எனக்கு.
நெஞ்சில் பாரம் அடைக்க ஏர்போர்ட்டுக்குள் சென்றேன். பொதுவாகவே முதல்முறை வருபவராக இருந்தாலும் சரி, முப்பதாவது முறை வருபவராக இருந்தாலும் சரி, தனியாய் என்னைப்போல் இந்திய ஏர்போர்ட்டுகளில் கிளம்பி வரும்போது வழக்கமாய் முகத்தில் ஈ ஆடாது. ‘உம்‘ மென்று இருப்பார்கள். அதே இங்கிருந்து ஊருக்கு செல்லும் போது பயபுள்ளைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்கவேண்டுமே, ஆஹா, ஓஹோ என்று டியூட்டி ப்ரீயில் பர்ச்சேஸ் கள கட்டும், முடிந்தவரை வாங்கித்தள்ளுவார்கள் உறவுகளுக்காக.
மாப்ளை நாலு பாட்டில்தான் உடுவானாம்ல?? என்ற கருத்துரைகள் அதிகமாக கேட்கும். சரி எங்கள் விடுமுறைக்காலம் எப்படி இருக்கும் என்ற சொந்தகதை, சோக கதை??
30 நாள் லீவில் முதல் வருடம் சென்றவுடன்..
வரவேற்ப்பு பலமாக இருக்கும், நல்லாயிட்டடா, நல்லவாடா என்று தெருவில் காணும் உறவுகள் நண்பர்கள் எல்லாம் சொல்வார்கள், எப்ப வந்த, எப்ப வந்த என்று நச்சரிப்பு தாளாது. மனைவி கடைசி வாரம் நெருங்க, நெருங்க மீண்டும் அழுகை ஆரம்பித்திருப்பாள்.
போகவேண்டும் என்று சொல்லும் போது, இப்பதான் வந்த, அதுக்குள்ளயா? என்பார்கள் உறவுகள்.. எல்லாம் நடக்கும்.
முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.
இரண்டாம் வாரம், எல்லாம் நல்லா இருக்கா, வேலை எல்லாம் எப்படி என்று விசாரணைகள் இருக்கும்.
மூன்றாம் வாரம், மக்கா, நல்லா இருக்கியா? நம்ம வீட்டு பக்கம் ஒரு நடை வரப்பிடாது?? ஏதாச்சும் விசா இருந்தா சொல்லு நம்ம பய ஒருத்தன் இருக்கான், கொஞ்சம் தூக்கி விடு மக்கா என்பார்கள்.
அடுத்த வாரம், அந்த பயலுடன் வந்து நிற்ப்பார்கள், கையில் பாஸ்போர்ட் காப்பி மற்றும் பயோடேட்டா சகிதம். நாம நம்ம விசா எப்ப கிழியப்போகுதோன்னு இருப்போம், அந்த சமயத்துல இவுக?
ஐந்தாம் வாரம், மக்கா பாத்து சரி பண்ணிரு, போன்பண்ணு என்ன? என்பார்கள் கிளம்பும் போது மெனக்கெட்டு எதிரில் வந்து சந்தித்து.
உதவக்கூடாது என்ற எண்ணமில்லை, நான் வேலைசெய்யும் இடத்தில் இப்போது 80 சதவீதம் தமிழர்கள் தான், இதற்க்கு நானும் ஒரு சிறு காரணம். ஆனால் அதற்க்கான தேவைகள் வரும்போதுதான் இதை செய்ய முடியும். ஊரில் கேட்டவுடன் செய்யும் நிலையில் அனேகமாய் யாரும் இருக்கமாட்டார்கள். அல்லது நாம் தேடும் தகுதியுடைய நபர் நம் சொந்தத்தில் இல்லாமலிருப்பார், தகுதியில்லாத நபர்களை எடுத்தால் நமக்கு நேரமும், பண விரயமும், காலவிரயமும் தான் மிச்சமாகி இருக்கிறது அனுபவத்தில். சம்பந்தம் இல்லாமல் இது ஏன் இங்கே என்றால் கீழ்கண்ட கடுப்புதான் யுவர் ஆனர்??
5 வருடங்கள் கழித்தும் நாம் யாருக்காவது ஒருசிலருக்கு உதவும் நிலையில் இருந்திருக்கமாட்டோம் பல சமயங்களில். அப்போது எப்படி நம் விடுமுறை கழியும்?, படியுங்கள் கீழே.
முதல் வாரம் பார்ப்பவர்கள், ம்ம், எப்ப வந்த, நல்லா இருக்கியா, என்பார்கள்.
இரண்டாம் வாரம், நம் கண்ணிலேயே ஒருவேளை பட்டிருக்க மாட்டார்கள், ஒரு வேளை பார்த்தால், ம்ம், நல்ல ஜோருதான், புது வீடு எல்லாம் வாங்கிட்ட போல இருக்கு, பாத்துக்க, அது கொஞ்சம் வில்லங்கமான இடம், நாலு இடத்துல விசாரிச்சுதான் வாங்கினியா என்பது போல் பேச்சு இருக்கும்
மூன்றாம் வாரம், என்னா வந்து ரொம்ப நாளாச்சு போல இருக்கு? ம்ம், வேலை முக்கியம் பாத்துக்கோ என்பார்கள்.
நான்காம் வாரம் கேட்பார்கள் பாருங்கள் ஒரு கேள்வி?? நீ இன்னும் போகலையா?? விட்டால் அவர்களே நம்மை ஏர்போர்ட்டில் கொன்டு விட்டுவிடுவார்கள் போல் இருக்கும்.
ஒரு வேளை ஐந்தாம் வாரமும் நாம் கண்ணில் பட்டு தொலைத்தால், வேலைய உட்டு தூக்கிட்டானா?? அப்ப இனி இங்கதானா?? என்ன பண்றதா உத்தேசம்?? என்பார்கள்.

நம்ம நிலைமைய பாத்தீங்களா?? ம்ம்ம்ங்ங்ங்.
வேதனையுடனும், சோகத்துடனும், வசந்தா நடேசன்.