Wednesday, September 28, 2011

காளி கேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அத்தனை பிரபலமாகாத ஒரு பிக்னிக் ஸ்பாட். இயற்கை அன்னை எங்கள் மாவட்டத்திற்கு அள்ளிக்கொடுத்திருக்கிருக்கும் வன வளத்திற்கு இந்த ஒரு பகுதியே சான்று. ஏனோ அரசாங்கமும் இந்த பகுதியை சுற்றுலா மையமாக்க ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாததால் இது இதுவரை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடமாக உள்ளது.
கண்ணாடி போல் தெளிந்த, குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாறும், சிறு காளி அம்மன் கோவிலும் இங்கு பிரசித்தம். சுற்றிலும் ரப்பர் எஸ்டேட்டுகள், பாதிக்கு மேல் வனத்துரை மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்று ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில். நம் கழக அரசுகளின் கட்டுப்பாட்டில் ரப்பர் எஸ்டேட் மற்றும் வனவளம்.. நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் அந்த நிர்வாகம் எப்படி இருக்குமென்று. இங்கு வேலை பார்க்கும்
அரசு அதிகாரிகள் ரொம்ப ஷேமமாக இருப்பதற்கான எல்லா வசதிகளையும் இயற்கை அன்னை அளித்துள்ளாள்.

ரொம்ப மேலே செல்ல அனுமதி இல்லை, மேற்பகுதியில் சில தனியார் எஸ்டேட்கள் இருக்கின்றன.. அடியேனுக்கு அங்கு செல்ல வாய்ப்பேதும் இதுவரை கிட்டவில்லை.

என் சமீபத்திய சென்ற மாத விடுமுறையில், காளி கேசம் ட்ரிப் எதிர்பாராத விதமாய் அமைந்தது.. கன்னியாகுமரி என்று அஜென்ண்டாவில் இருந்தது சில பல காரணங்களால் காளிகேசம் என்று மாறிப்போனது. யாருக்கும் நான் வெஜ் மூடு எதுவும் இல்லாததால் உடுப்பி இன்டர்நேஷனலில் வாங்கிய நாலு பார்சல் பூரி கிழங்குடன் நாங்கள் பழைய காலத்து நண்பர்கள் நாலுபேர் எங்கள் பெங்களூர் நண்பன் புதியதாய் வாங்கியிருந்த டாட்டா மான்ஸாவில் கிளம்பி சென்றோம்.

பொண்டாட்டிகளை சமாளித்துவிட்டு தனியே கிளம்புவதே பெரிய சாகசம், நாலு பேரும் இப்போது நான்கு திக்கில் வேலை பார்ப்பவர்கள், நான் ஊருக்கு வரும் சமயம் எப்படியாவது மற்ற மூவரும் ஒன்று அல்லது இரண்டு நாள் ப்ரோக்ராம் வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து விடுவார்கள். அதற்கு ஏற்பாடு செய்வதற்குமுன் தாவு தீர்ந்துவிடும், பல ஈமெயில்கள் பறக்க வேண்டியதிருக்கும். சிலர் மனைவியுடன் வந்திருப்பார்கள், சிலர் தனியே.

ஏதோ ஆபிஸ் மீட்டிங் சென்னையில் என்று சொல்லி விட்டு சூட்கேஸ் சகிதம் நாகர்கோவில் வந்து லாட்ஜில் தங்கும் சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. நான் அப்போது மனைவியுடன் மாட்டிக்கொண்டிருப்பேன், கண்டிப்பாய் பெர்மிஷன் கிடைக்காது என் நண்பர்களுடன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து செலவு செய்வதற்கு. நாங்கள் நான்கு பேர் சேர்ந்தால் செய்யும் லூட்டிகள் அத்தனை உலக பிரசித்தம் ஆகிவிட்ட படியால்..

என்ன செய்வது, ஏதோ காரணத்திற்காக நான் திருநெவேலி அல்லது திருவனந்தபுரம் அவசரமாக போக வேண்டியுள்ளது என்று சொல்லி நான் இவர்களுடன் சேர்ந்தாக வேண்டும்.

ஆத்தாடி, அந்த அவஸ்த்தையை எழுத்தில் சொல்வது கடினம்.. அவர்கள் எல்லாம் வந்திருப்பார்கள், என் மனைவிக்கும் தெரியும்.. அவர்களை விட்டு விட்டு நான் தனியே வேரு ஊருக்கு கிளம்புகிறேன் என்பதை கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தில் நம்ப வைப்பது எத்தனை சிரமம் என்று எனக்குத் தான் தெரியும்?? அப்படியும் ஏதோ சொல்லி சமாளித்து கிளம்பியாக வேண்டும்.

சரி பேக் டு காளிகேசம்.. மிக அருமையான சுற்றுலா பகுதி.. தெளிந்த ஓடும் நீரில் மூழ்கி குளிப்பது கண்டிப்பாய் ஒரு சுகானுபவம், துபாய் போன்ற பாலைவன நகரங்களில் கிடைக்காதது.

நான் சிறுவயதில் (கல்லூரி முதல் ஆண்டு??) முதல் முறையாக காளிகேசம் சென்றேன்.. ஒரு எட்டு அல்லது ஒன்பது நண்பர்கள் முதல் நாளே சிக்கன் மசாலா மற்றும் புரோட்டா, ரைஸ் என்று ஆர்டர் கொடுத்து எடுத்துச்சென்று அங்கு வைத்து தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 5 கோழி கறி சொல்லியிருந்தோம், ஆனால் சாப்பிடும் போது பத்துக்கு மேல் கால் பீஸ் இருந்தது, இதை சொல்லிச்சொல்லி ஆர்டர் கொடுத்தவனை அழ வைத்தது தனிக்கதை.

இந்த மாதிரி கெட்டுகதர்களுக்கு ஏற்ற இடம். அப்போது பஸ் கீரிப்பாறையுடன் நின்று விடும், அதன் பின் காளிகேசம் வரை சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். ஆனால் இப்போது பஸ் காளிகேசம் கோவில் வரை செல்லும் என நினைக்கிறேன். ரோடு வசதி உள்ளது, பஸ் வசதியை விசாரித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் நினைவில் உள்ளது என் கல்லூரி மூன்றாம் ஆண்டில் கல்லூரி நண்பர்கள் இணைந்து சென்றது. அப்போது சிக்கன் ரவாபிரியாணி என்று ஒன்றை அங்கே சென்று சமைத்துச்சாப்ட்டோம். நன்றாகத்தான் இருந்தது, நான் முதலும், கடைசியுமாய் சாப்பிட்ட சிக்கன் ரவா பிரியாணி அது தான். சமையல் செய்ய ஆளை அழைத்துச்சென்றிருந்தோம். கல்லூரி நண்பர்களுடன் தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்து, தண்ணி அடித்து, சாப்பிட்டு, குளித்ததெல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

பின்னர் நான் பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் என் மற்ற நண்பர்கள் அவர்கள் பெண் நண்பர்களுடன் சென்றதை கதை, கதையாக இப்போதும் சொல்வார்கள் என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதற்காக. மூன்று அல்லது நான்கு பேர் ஜோடியாக இருக்கவும் ஒருவன் மட்டும் ஜோடி இல்லாமல் மற்ற ஜோடிகளை மறைந்திருந்து கவனித்து நேரம் போக்கியதை இந்த முறையும் சொல்லி சிரித்துக் கொண்டோம். (மக்கா, யார் வேண்டுமானாலும் நீங்கதான் அந்த ஜோடி இல்லாத ஆள் என்று தப்பித்துக் கொள்ளுங்கள், அதனால் பெயர் சொல்லவில்லை). அந்த ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே திருமணம் வரை சென்றார்கள்..

எஸ், அடுத்த முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றால் மறக்காமல் காளிகேசம் செல்லுங்கள், சமைத்து சாப்பிடுவதற்கும், மற்றவற்றுக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.. இது போல் காட்டுப்பிரதேசங்களில் சமைக்கப்படும் உணவிற்கு ஏதோ தனி சுவை உள்ளது, அதனை மிஸ் பண்ண வேண்டாம். மனைவிகளை அழைத்துச்சென்றால், தண்ணி அடிக்க முடியாது, சிகரட் குடிக்க முடியாது போன்ற சில்லரை பிரச்னைகள் உள்ளது, நன்கு யோசித்து முடிவு எடுங்கள்.
காட்டாறு மற்றும் சிற்றருவிகளை பற்றித்தெரிந்த குமரி மாவட்டத்து நண்பர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள், சில இடங்கள் அபாயமானவை, ஆழம் தெரியாமல் காலை வைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அன்புடன், வசந்தா நடேசன்

Tuesday, September 27, 2011

கட்டிங், கட்டிங்..

வணக்கம் நண்பர்களே.

சிறுவயது மலரும் நினைவுகள் என்றுமே மனதுக்கு நிறைவானவை.. மீண்டும், மீண்டும் எத்தனை முறை வாழ்க்கையில் அசை போட்டாலும் அலுப்பை தராதவை. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்வதற்காக செய்த அளும்புகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.

சிறு வயதில் எனக்கு குருவிக்கூடு வைத்து என் அம்மா தலை சீவி விடுவார்கள். நல்ல வேளையாக குடுமி ஸ்டைல் இருந்த காலத்தில் பிறந்து தொலைக்காமல் இருந்தேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டதுண்டு. இடது உச்சி எடுத்து தலை சீவிவிட்டு, வலது பக்கம் படிந்துள்ள முடியை அப்படியே பின்னால் கோறிவிட்டு ஒரு மூணு இஞ்ச் முன்னந்தலையில் விட்டு விட்டு வலதுபக்கமாய் பணித்து சீவி விட்டால் அதுதான் குருவிக்கூடு ஸ்டைல்.

மிகச்சிறு வயதில் எங்கே குருவி நெசமாலுமே குடி வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் தான். நீண்ட நாட்களாக, ஒரு அஞ்சாப்பு அல்லது ஆறாப்பு படிப்பது வரை ஐயா இந்த ஸ்டைல் தான். பின்னர் ஒரு சுப தினத்தில் இனி குருவிக்கூடு சரிவராது என்று வெறுமனே இடது உச்சி எடுத்து பணித்து சீவிக்கொள்ள ஆரம்பித்தேன்.

பின்னர் வந்தது பாருங்கள் ஹேர் ஸ்டைலில் ஒரு புரட்சி.. ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் வந்து எல்லா இளைஞர்களை பாடாய் படுத்தியது மறக்க முடியாதது. பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஸ்டைலாக இது இருந்தது.. வணங்காத முடியையும் ஹீட்டர் போட்டு ஒரு அளவுக்கு வளைத்து முக்கால் காதை மூடிக்கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்தார்கள் என்று நினைக்கிறேன்..

சினிமா உலகிலும் இந்த ஸ்டைல் பிரபலம். ஒரு தலை ராகம் சுதாகர், கமல ஹாசன் என்று எல்லோருக்குமே ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் தான் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு. இடையிலேயே சுதாகர் எல்லாம் காணாமல் போனது வேறு கதை.

என்னுடைய அப்பா அப்போது முடி வெட்டிக்கொள்ளும் கடையில் தான் நானும் அப்போது முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது என் வீட்டில் எழுதாத சட்டம். கொஞ்சம் வளர்ந்ததும் இந்த சட்டத்தை மாற்ற நிறைய போராடியிருக்கிறேன். இப்போது ரோடுக்கொரு ஏ.சி சலூன் வந்து விட்ட நிலையில் நான் ஊருக்கு சென்றால் என் பையன் வெட்டிக்கொள்ளும் கடையில் நானும் முடி வெட்டிக்கொள்கிறேன், காலம் எவ்வளவு மாறியிருக்கிறது!

நானும் ஸ்டெப் கட்டிங் வெட்டிக்கொள்வதற்காக நிறைய சலூன்களை அப்போது மாற்றியிருக்கிறேன். நம் ஊர் சலூன்களில் ஹீட்டர் முதலிய அட்வான்ஸ் கருவிகள்(!) அறிமுகம் ஆனது அந்த காலம் தான். ஹீட்டர் போட்டுக்கொண்டால் முடி கொட்டி விடும், சீக்கிரம் நரைத்துவிடும் என்று பெருசுகளிடம் இருந்து மிரட்டல்களும் வருவதுண்டு.

பத்தாப்பு, பதினொண்ணாப்பு படிக்கும் போது யாருக்கு அதைப் பற்றி கவலை?? கலங்காமல் மாறி, மாறி ஹீட்டர் போட்டு பணிய வைத்த தலை என்னுடையது!

தெருவுக்கு தெரு அப்பாயிண்ட்மென்ட் எடுத்து/கொடுத்து சைட் அடித்த காலம் அது, இவள் செட்டாவாளா? அவள் செட்டாவாளா என்று அலைவோம். அப்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இவ்வ்வ்வளவு சோஷியலாய் இல்லை என்பது ஒரு குறைதான்.

கடைக்கண் பார்வைக்காக உயிரையே விட துணிந்திருந்த நம்மை முடி கொட்டிவிடும், நரை வந்துவிடும் என்பதெல்லாம் மிரள வைக்கவில்லை. முடிவெட்டிக்கொள்வதற்காக வடசேரியிலிருந்து செட்டிகுளம் ஜங்ஷன் வரை சைக்கிளை அளுத்திக்கொண்டு போயிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பின்னர் வந்தது தான் இப்போதைய டிஸ்கோ கட்டிங்.. கார்த்திக், கமல் ஹாசன் எல்லாம் இந்த ஸ்டைலுக்கு முதலிலேயே மாறி விட்டார்கள். என்னுடைய நண்பன் ஒருவன் அவன்தான் நாகர்கோவிலிலேயே முதன் முதலாக இந்த ஸ்டைல் வைத்துக்கொண்டதாக இந்த பேச்சு வரும்போதெல்லாம் அப்போது பீற்றிக்கொள்வான்.

நான் இன்றுவரை அதே டிஸ்கோவுடன் நிறுத்திக்கொண்டாலும், (ஆமா.. இப்ப மாத்திட்டா மட்டும் நாம சைட் அடிக்கவா போகப்போறோம்? இல்ல வீட்டம்மா தான் உட்ருமா??)

ஆனாலும் இப்போது வித விதமாய் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு பைக்கில் சுத்தும் என் பையனைக் கண்டு கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறேன்.

ம்ம், நாளை அவனுக்கு அசை போட இன்றைக்கு நிறையவே ஸ்டைல்கள் உள்ளன! நம் வாயிலேயே அந்த ஸ்டைல் பெயர்கள் நுழையவில்லை என்பது தான் நிஜம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Monday, September 26, 2011

உங்கள் ரோல்மாடல் யார்??

நண்பர்களே, உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.. உங்கள் ரோல்மாடல் யார் என்பதை ஒரு சிம்பிள் கணக்கின் மூலமாக மிக சுலபமாக கண்டுபிடிக்கவும் இப்போது அமெரிக்காவில் ஒரு ஃ.பார்முலா கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ம்ம்ம், எல்லாம் காலம் செய்த கோலம், என்னத்த சொல்ல?

நானும் போட்டுப்பார்த்தேன், என் ரோல்மாடலாக பில் கேட்ஸ் வந்தார்! என்ன துல்லியமான கணக்கென்று ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுலபமாக நான் சொல்லஇருக்கும் இந்த மனக்கணக்கை போட்டுப்பாருங்கள், நீங்களே கண்டுபிடித்துவிடலாம் உங்கள் ரோல்மாடல் யார் என்பதை.

எச்சரிக்கை
எந்த காரணம் கொண்டும் ஸ்க்ரோல் டௌன் பண்ணக்கூடாது. மீறி செய்தால், ராத்திரி பல துர் சொப்பனங்கள் வரக்கூடும் என்பது இந்த கணக்கின் விதி.. விதியை மீறுபவர்கள் சங்கத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவார்கள் என்பதையும் அன்புடன் தெரிவிப்பது இப்போது என் கடமையாகிறது.

முதலில் 1 முதல் 8 க்குள் உங்கள் லக்கி நம்பர் ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும். ஒம்போது என்று சுருளிராஜன் போல் சொல்லக்கூடாது, விதி அனுமதிக்காது, கணக்கு தப்பானால் நிர்வாகம் பொருப்பாகாது

சரி, இப்போது உங்கள் லக்கி நம்பரை 3ல் பெருக்குங்கள்.

பெருக்கி வந்த விடையுடன், 3 ஐ கூட்டவும்.

மீண்டும் ஒருமுறை மேலே கண்டுபிடித்த விடையை 3ல் பெருக்கவும்.

இப்போது உங்களுக்கு சர்வ நிச்சயமாய் ஒரு இரண்டு இலக்க எண் கிடைத்திருக்கும். (உதாரணத்திற்கு 75 என்று வைத்துக்கொள்வோம்.)

நீங்கள் கண்டுபிடித்த இரண்டு இலக்க எண்ணைக் கூட்டவும். (உதாரணம் 7 + 5 = 12)

இப்போது ஸ்க்ரோல் டௌன் செய்து, உங்கள் லக்கி நம்பரை வைத்து நீங்கள் கண்டுபிடித்த எண்ணுக்குரிய நபர், உங்கள் ரோல்மாடல் யார் என்று கண்டுபிடிக்கவும்.1) மகாத்மா காந்தி


2) ஜவகர்லால் நேரு


3) மன்மோகன் சிங்


4) சோனியா காந்தி


5) சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்


6) பத்மஸ்ரீ கமல்ஹாசன்


7) டாக்டரு விஜய்


8) தல அஜீத்


9) வசந்தா நடேசன்


10) தலாய் லாமா


11) பில் கேட்ஸ்


12) மதர் தெரஸா


எனக்குத்தெரியும், முதலிலேயே தெரியும்... அப்படி பார்க்காதீர்கள், வெட்கமாக இருக்கிறது.. நான் பதிவுலகிற்கு வந்து இந்த சிறிது காலத்திலேயே இந்த அளவுக்கு வேல்டு பேமஸ் ஆவேன் என்று முன்பு நினைத்ததில்லை. நீங்களும் முயற்சி செய்யுங்கள், ஒரு நாள் நிச்சயம் என்னைப்போல் வரமுடியும், வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- தயவு செய்து வேறு வேறு நம்பர்களை தேர்வு செய்து பெருக்கி, கூட்டுவதை நிருத்தவும், எந்த நம்பரை தேர்வு செய்தாலும் நான்தான் உங்கள் ரோல் மாடல்???? அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன், உலகம் நின்றுவிடவா போகிறது??? நான் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டேன்!!!!!! சின்னபுள்ள தனமால்ல இருக்கு??

அன்புடன், வசந்தா நடேசன்.

Sunday, September 25, 2011

பாத்து யோசி!

உலகில் எல்லாவற்றுக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? ஏன் வயதான ஆண்களுக்கு (கிழவர்களுக்கு?) இளம்பெண்களின் மீதும், இளைஞர்களுக்கு வயதான பெண்களின் (ஆண்ட்டிகளின்) மேலும் ஆசை (அதாங்க..) வருகிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இது எதன் எதிர்வினை?

வீட்டில் சும்மா டீவி யில் பழைய பாட்டுக்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதில் ஓர் எண்ணம் வந்தது. எண்ணத்தில் வந்ததை எழுத்தில் வடிப்பது நம் கடமை என்பதால் நீண்ட நாட்களுக்குப்பின் பெட்டிதட்ட உட்கார்ந்துவிட்டேன்.. (ம்ம்ம், நாங்கல்லாம் உக்காந்து யோசிப்போம்ல???)

நடுத்தர வயதில் இருக்கும் எனக்கு ஏனோ இந்த யோசனை வந்து தொலைத்தது, யோசனை நீண்டபோது வந்த எண்ணங்கள் தான் மேலே வருபவை.. நினைத்தாலே இனிக்கும் தினமும் பார்ப்பதாலும், பத்திரிகைகள் அடிக்கடி படித்ததாலும் தெரிந்தோ, தெரியாமலோ இப்படி ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.. தவறென்றால் மன்னிக்கவும்.

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் வெகு ஆர்வமாய் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கிறார்கள், எம்.ஜி.ஆர் மற்றும் மஞ்சுளா நடித்த ஒரு பழைய பாட்டை இப்போது பார்த்தாலும் எனக்கு பற்றிக்கொண்டு வரும். தற்போதைய முதல்வருடன் நடித்த சில படங்களையும், பிற நடிகைகளையும் இந்த பட்டியலில் சேர்த்து உங்க வைத்தெரிச்சலை கொட்டிக்காம நம்ம சிவாஜி சாருக்கு வருவோம்.. இவர் ஸ்ரீப்ரியாவுடன் நடித்த சில பல படங்களும் அப்படியே, இது அந்த வேகத்தில் ராதா, அம்பிகா வரை தொடர்ந்தது.

இதை யெல்லாம் பார்த்து, ரசித்த இப்போது நாற்பது, ஐம்பது வயதை கழித்த நம் வெகுஜனம் அக்காலத்து அவரவர் ஹீரோக்கள் பாணியில் இப்போது இளசுகளின் மேல் விபரீதமாய் ஆசை வந்து பஸ், கூட்ட நெரிசல் என்று கண்ட இடத்திலும் ரவுசு பண்ணுகிறார்களோ?

மனதளவில் தன் ஆதர்ஷ ஹீரோக்களை நினைத்துக்கொண்டு இன்று இளசுகளை பக்கத்தில் பார்த்ததும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு இப்படி கண்றாவியாய் நடந்து கொள்கிறார்களோ என்னவோ?

சரி, ஆண்டிகளின் மேல் ஏன் இளைஞர்களுக்கு ஆசை?? இது எதன் எதிர்வினை என்று யோசிக்கையில் இப்படித்தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் சினிமாவில் நடன நடிகைகள் என்று தனியாக நடிகைகள் இருந்தனர். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து ஆரம்பித்தால் அது டிஸ்கோ சாந்தி, விசித்திரா என்று சுருங்கி இப்போது பாபிலோனாவில் முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன். கவர்ச்சி ஆட்ட நடிகைகளின் வயதை கணக்கில் எடுத்தால் அவர்கள் அனைவருமே பீக்கில் இருந்தபோது குறைந்தது வயது 22க்கு மேல்தான் இருக்கும்.

இப்போதெல்லாம் கவர்ச்சி ஆட்டத்திற்கென்று தனியே நடிகைகள் இல்லை, சில முன்னணி நடிகைகள் எப்போதாவது ஏதோ ஒரு படத்தில் குத்தாட்டத்திற்கு வந்தாலும் அது பழைய மாலினிகளின் ஆட்டத்திற்கோ சில்க் ஸ்மிதாவின் ஆட்டத்திற்கோ ஈடு இணை ஆக முடியாது, குறைந்த பட்சம் ஆடை விஷயத்தில்.

தற்போதைய இந்த கவர்ச்சி ஆட்ட வறட்சியால் இந்த பழைய ஆட்டத்தை இப்போதும் பார்க்கும் 22க்கு குறைந்த இளைஞர்களுக்கும் சரி, சராசரி 20 வயதுக்கு மேலான தற்போதைய நடிகைகளின் நடிப்பை பார்க்கும் 18க்கும் கீழான இளசுகளுக்கும் சரி, தன்னை விட மூத்த நடிகைகளின் மேல் ஒரு கிக் இருக்கத்தான் செய்யும், சத்தியமா எனக்கு கிடையாது, தயவுசெய்து நம்புங்கள்.

இப்படி குறைந்த வயது இளசுகள் தங்களை விட வயதில் மூத்த இதுபோல் நடிகைகளின் ஆட்டத்தால் கவரப்பட்டு மனதளவில் இப்படி ஆண்டிகளின் மேல் ஆசையாய் எதிர்வினையாகி விட்டதோ?? கவர்ச்சியாய் ஆடை உடுத்திக்கொண்டு வரும் சாதாரண பெண்களை பார்த்ததும் மனதளவில் தூண்டப்பட்டு ஆண்ட்டிகளை கண்டதும் ஆட்டம் கண்டு விடுகிறார்களோ??

ம்ம்ம், என்ன கண்றாவியோ, நான் சினிமாவையோ, முன்னாள் ஹீரோ, ஹீரோயின்களையோ அவமதிப்பதற்காக இப்படி எழுதவில்லை, நானும் ஒரு காலத்தில் இதே ஹீரோக்களை போற்றி முதல் காட்சிக்கு ஓடியவன் தான், ஏதோ மனதில் தோன்றி விட்டது, எழுதிவிட்டேன், தவறென்றால் மன்னிக்கவும், மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்கப்பூ…

அன்புடன், வசந்தா நடேசன்.