Sunday, December 19, 2010

அயல்நாட்டு அகதிகள்

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
Happy New Year, Happy Pongal என்று மனம் முழுக்க சோகத்தோடு
கைபேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்!

இங்கே கண்ணே மணியே என்று காதலியை
நெஞ்சுருகி கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை!
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல்
கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது.

தொலைதூரக்காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்றே எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும், உடல்நலக்குறையென்றாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகுமுன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை, எங்கள் வியர்வையின் வாசம்
வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள்
கலப்பை பிடிக்கவில்லை என்றாலும் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லாபூச்சிகள்.

திரைகடலோடியும் திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன, விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர்வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! !

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழிலென்று பெருமிதப்பட்டோம்,
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா
முதலீடு செய்திருக்கின்றோம்!
இப்போது தான் புரியத்தொடங்கியது,
சேர்ந்தே நரைக்கவும் தொடங்கியது!

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை! !
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது…
யாருக்காக! எதற்க்காக! ! ஏன்! ! !

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு, குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல் கண் முன்னே.

நாங்கள் சுமக்கும் சிலுவை, எங்களால்
எங்கள் முதுகில் அறையப்பட்டவை, எங்களுக்குத்தெரியும்
உழைக்க கைகள் வேண்டும் என்று.

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சிணுங்கல், அம்மாவின் அரவணைப்பு
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை
இப்படி எத்தனையோ இழந்தோம்.

எல்லாவற்றையும் இழந்த நாங்கள், இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்?
இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை
இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் நம்மூர்
Ricshaw Man கூட Rich Man தான்.

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்
அயல்நாட்டு அகதிகளாய்!

வா. அருள் குமார்.

==========================================================

மேலுள்ள கவிதை திரு.அருள்குமார் என்ற முகம் தெரியாத நண்பரால் எழுதப்பட்டது. ஈமெயில் மூலம் யாரோ ஒரு அகதி அனுப்பி எனக்கும் வாசிக்கக்கிடைத்தது. நானும் ஒரு அகதி என்பதால் அவரிடம் அனுமதி வாங்க வழியில்லாமல் அப்படியே கொடுத்துள்ளேன்.

முன்பே இது வலைத்தளத்தில் இருந்தால், தயைகூர்ந்து மன்னிக்கவும், நான் புதுசுங்க.

அரபு நாடுகளில் வசிப்பவர்களிடம் பொதுவாகவே இது போல் புலம்பல்கள் சகஜம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் இது போல் புலம்புவதாக தெரியவில்லை. அதிக சம்பள வித்தியாசம் காரணமாக இருக்கலாம். (ஒரு பொறாமை தான்!)

அதுபோல் இங்கு வசிப்பவர்கள் அனேகமாக வருடந்தோறும் ஊருக்குச்சென்று விடுவார்கள், சொல்லப்போனால் எப்படா ஊருக்குப்போவோம்னு காத்திருப்பார்கள். ஆனால் பிற தேசங்களில் வசிப்பவர்கள் அப்படி செல்வதாக தெரியவில்லை. அதுவும் கல்யாணம் முடிந்து விட்டால் அனேகமாக அங்கேயே தங்கிவிடுவதாக கேள்வி. மனைவியுடன் தான். (வயிற்றெரிச்சல் தான் சார்!)

சரி, எல்லாம் விதிப்படி தான் நடக்கும், பொழப்ப பாக்கலாம் வாங்க.

அன்புடன்,

அகதி வசந்தா நடேசன்.

No comments:

Post a Comment