நான் மணிமேடைல பஞ்சு கடை வச்சிருக்கன் சார். இப்பலாம் யாவாரம் ரொம்ப மோசம், எவன் இப்ப பஞ்சு மெத்தை வாங்கறான், ஒரு காலத்துல நாமதான் ராசா, கல்யாண சீசன்ல நம்ப கடைல நிக்க எடம் இருக்காது, என்னாத்த சொல்ரது. இது எங்க ஐயா யாவாரம் செஞ்ச கடை. தலகீழா அவரும் நின்னு பாத்தாரு, என்னை படிக்கவச்சிரலமுன்னு, நமக்கு ஏரணுமே. ஒம்பதாப்பு படிச்சு தோத்தஉடனேயே போதும்டா உன் படிப்புன்னு இந்த கடைல கொண்டந்து போட்டாரு, அன்னைலருந்து இந்த யாவாரம் தான் நமக்கு.
வழக்கம் போல கடைய தொரந்து வச்சிக்கிட்டு பாத்துகிட்டுருக்கேன்.. எல்லா பயலும் குர்லானு, குட்நைட்டுனு மெத்தை வாங்க ஸாரிபாலசுக்கு ஓடுரானுகள தவிர நம்ம கடைய எட்டிக்கூட பாக்கமாட்டுக்கானுங்க.
இது போதாதுன்னு இப்ப எதோ எம் எல் எம் மாம், அநியாயத்துக்கு மெடிக்கல்பெட்டுன்னு 25000க்கு விக்கிறான் சார், அதவாங்கி படுக்கானுங்க. இலவம்பஞ்சு மெத்தைய 700ரூவாய்க்கு நாம கூப்ட்டு குடுத்தாலும் வாங்கமாட்டான் போலருக்கு.
ஏதோ மணவாளக்குறிச்சி, மண்டேமார்க்கெட்டுன்னு சின்னசின்ன சுத்துபத்து ஊர்க்காரங்க வந்து நம்மட்ட தலகாணி மட்டும் மொத்தமா வாங்கிட்டு அப்பப்ப ஒண்ணு ரெண்டு மெத்தை வாங்கிட்டு போரானுங்க, அதுல தட்டு, தடுமாரி நம்ம பொளப்பு ஓடிக்கிட்டிருக்கு.
ஒரு பய நேத்து வந்து வெல கேட்டுட்டு போனான், பஞ்சு மெத்தை வேணுமாம், தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கானாம், ரெண்டு தலயாணி, பெட்ஷீட்டு எல்லாம் செட்டு 900 ரூவா சொன்னேன், நாளைக்கு வாரேன்னுட்டு போனான். வாரானோ இல்ல வராவழிய போரானோன்னு பாத்துகிட்டிருந்தா, நம்ம கடைல கணக்கு எழுதுர பய நாராசன் வந்து ஏறுனான் கடைல.
இவன் என்ன வயித்தெரிச்சலைக்கொட்டிக்க வந்திருக்கானோ, ஒதவாக்கரை. பொண்டாட்டிக்கு பேங்குல வேலை, இந்த பயல ஒரு தூசுக்கு மதிக்கமாட்டா அவ. இவனுக்கு நம்ம கடைல மாசம் 150ரூவா சம்பளம். ஆடிட்டராபீஸ்ல எதாவது குடுப்பாகளா இருக்கும். மாசத்துக்கு ஒருநா வந்து என்னவோ எழுதிக்கிட்டு போவான். இவன் என்ன எழுதுரான்னு யாருக்கு தெரியும், வருசக்கடைசில புக்ல சீல் வச்சி வாங்கிட்டு வந்துருவான், அவகளும் சீலு வெக்கமுன்னால பாப்பாகளா என்னான்னு தெரியலை. கொஞ்சம் லூசுப்பய போல இருப்பான் பாக்கதுக்கு.
எனக்கு இந்த ஆடிட்டர் ஆபீஸ் ஆளுங்களைக்கண்டாலே கொலநடுக்கம் இப்ப. எப்ப பாரு அவ்னுகளுக்கு அவ்ளோ எடு, இவ்னுகளுக்கு இவ்ளோ எடுன்னு ஒரே புடுங்கல் தான். கவர்ண்மெண்ட்ல வேலபாக்ற ஐய்யாமார்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்குரானா இல்லையான்னே தெரியல, எப்ப பாரு எங்க புடுங்கலாம்னு தான் அலையராய்ங்க, நாராசனுக்கு ஓனர்மாதிரி ஆளெல்லாம் இந்த ஐயாமார்களுக்கு ஏஜென்ட்டு. தீவாளின்னு வந்துட்டா புக்கு போட்டுட்டு அலையுரானுகன்னா பாருங்களேன். இவன் இப்ப என்ன ஏங்கிட்ட புடுங்கதுக்கு வந்திருக்கானோ? பொங்கலுக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டானுகளா? யாவரம் இருக்க இருப்புல ப்பயமாட்டுலா இருக்கு இப்ப.
ஒருவாட்டி இப்டித்தான் ஆந்திரால இருந்து கொஞ்சம் விலை மலிவா இருக்கேன்னு கொஞ்சம் கொள்முதல் பண்ணினேன், அதை கரூர் செக்போஸ்ட்ல புடிச்சி வச்சிகிட்டு இவனுக பண்ணுன வில்லங்கத்த நெனச்சா வயிறு எரியுது. அது போல எதாவது மாட்டிக்கிட்டா இப்பவும்?
எதுக்கு வந்தான்னு தெரியாம என்னடே என்ன விசேசம்னேன். பய மொகம் பொதையல் கிடைச்ச மாதி இருந்தாலும் நம்ம கடப்பயல பாத்து மலங்க மலங்க முழிச்சிட்டு இருந்தான்.
சொல்லுடே, இரண்டு நாள் முன்னால தான நம்ம கணக்கை எழுதிட்டு போன? இப்ப என்ன விசேசம்?
சொல்லுகென் பொருங்கணேன்னுட்டு, நம்ம கடைபயல்ட்ட மக்கா இந்த கடைல 2 டீ வாங்கிட்டு வாமக்கான்னான்.
நாங்க டீல்லாம் குடிச்சாச்சுப்பா, நீ வேணா அந்நா எஸ்ப்பி ஆபிசுக்கிட்ட போயி குடிச்சுட்டு வான்னுட்டு, தலகாணி தச்சுக்கிட்டிருந்த கடைபயல்ட்ட நீ வேலைய பாருடான்னேன், இவரு பெரிய ஆபிஸரு, டீ ஒண்ணுதான் கொற லூசுப்பயலுக்கு.
எணேன், நான் காசுக்குடுக்குரணேன், டேய் இந்தாடா நீ ஒண்ணு குடிச்சிட்டு எங்களுக்கு 2 வாங்கிட்டு.. ஒண்ணும் அவசரமில்ல மெதுவா வான்னு 100ரூவா தாளை எடுத்து நீட்டுனான். கடைப்பய என் மூஞ்சிய பாத்தான்.
இந்த பயலுக்கு பயித்தியம் புடிச்சுப்போச்சா? என்ன எழவுன்னுட்டு நானும், லேய் போய் சீக்கரம் குடிச்சுட்டு டக்குன்னு 2 டீ வாங்கிட்டு வாலன்னேன். வேலய மெனக்கெடுத்த வந்துருக்கானா?
பய போனதுக்கப்புறம் என்கிட்ட எணேன், உங்களை நம்பலமாணேன்னான்.
இந்த பய எதுக்கு என்னய நம்பணும்னுட்டு நானும் என்னடே என்ன பிரச்னை, என்ன எதுக்கு நீ நம்பப்போற? பணம்லாம் ஒண்ணும் ஏங்கிட்ட இல்லப்பா என்றேன் உஷாராய் ஏதோ பணம் கிணம் கேக்கப்போரானோன்னு.
பணம்லாம் ஒண்ணும் வோண்டாணேன், எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, நான் ஒங்களுக்கு பணம் தாரேன்னான்.
நீ எனக்கு தரப்போரியா? இந்தபயலுக்கு என்னாச்சுன்னு எனக்கு ஒரு எழவும் புரியலை. லாட்டரி, கீட்டரி அடிச்சிருச்சா? இல்ல பொண்டாட்டிகாரி பேங்க கொள்ளையடிச்சி கொண்டாந்து குடுத்துட்டாளா? நம்ம கஷ்டகாலத்த பாத்து கடவுளு இவன் மூலமா கண்ண தொரக்குரானோ? ஒண்ணும் புரியல எனக்கு. அவனையே பாத்துட்டுருந்தேன்.
திரும்பவும் கேட்டான், எணேன், உங்களை நம்பலாமான்னு.
நம்பு மக்கா, நான் என்னைக்கி ஒனக்கு துரோகம் பண்ணிருக்கேன்? சும்மா நம்பிச்சொல்லுன்னேன் வரத பாத்துக்கலாம்னு.
இது ஒரு டீல்ணேன், நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னா, ஒங்ளுக்கும் லாவம், எனக்கும் லாவம்னான்.
பயபுள்ளய சன் டிவில டீலா நோடீலா விளாட கூப்ட்ருக்கானோ? கூட போக ஆள் தேடரான் போலருக்கு. அங்க போனாலும் அதிகம் போனா 50 லட்சம் ஜெயிக்கலாம், இவன் 1 லட்சமாவது ஜெயிப்பானா? ஜெயிச்சா நமக்கு அம்பதாயிரமாவது தருவானா? இவன நம்பி போலாமான்னு யோசிச்சிட்டே, சொல்லு நாராசா, லாவம் சம்பாதிக்க தான நான் கடை வச்சிருக்கேன். எனக்கும் பாதி தருவேன்னா சொல்லு, டீலு. ஆனா போர வார செலவுல்லாம் ஒன்னோடதுதான்னேன். எனக்கிட்ட ஒரு பைசா இல்ல என்றேன் கொஞ்சம் ஜாக்ரதையா.
பாதில்லாம் ரொம்ப ஓவர்ணேன், அம்பதாயிரத்த விட ரொம்ப அதிகம் தாரேன்னான்.
நானோ வாடகை கொடுக்கக்கூட பைசா இல்லாம இருக்கேன், இந்த பய அம்பதாயிரத்துக்கு மேலா தாரேன்ரான். ஆடிட்டராபிஸ்ல வேல பாத்து பாத்து பயலுக்கு அறிவு கூடிருச்சோ?
சரி நான் உனக்கு என்ன பண்ணணும்னேன்.
கொஞ்சம் என் கூடமாட ஒத்தாசையா இருந்தீங்கன்னா போதும், அப்புறம் உங்க கடை போன் நம்பர நான் ஒரு மாசம் கால் ரிஸீவ் பண்ண மாத்ரம் யூஸ் பண்ணுவேன், நீங்க இதுக்கு சம்மதிச்சா போதும்னான்.
இது மட்டும் போதுமா? நான் எதுலயாவது கையெழுத்து எதாவது போடணுமா? இதுவே வாடகைக்கட, அதுலாம் நம்ளால முடியாது பாத்துக்கோன்னேன் கொஞ்சம் உஷாரா.
அதெல்லாம் வேண்டாண்ணே, என்னன்னாலும் நீங்க கொஞ்சம் பெரிய ஆளு, கொஞ்சம் எனக்கு ஐடியா கொடுங்க, கூடமாட ஒத்தாசையா இருங்க அதுவே போதும்னான்.
பய நம்மள பெரியாளுன்னு வேர சொல்ரான், சரிடா டீல் ஒத்துக்கிறேன். ஆமா இதுல்லாம் ஒன் பொண்டாட்டிக்கு தெரியுமா?
அவ ஒரு ராட்சசிணேன், உங்களுக்கு தான் தெரியுமே, அவ கண்ணுமுன்னால நாம பெரியாளா வந்து காணிக்கணும், அவ என் காலடில விழுந்துகிடக்கப்போரா பாருங்க. நம்ம கஷ்ட காலம் எல்லாம் முடியப்போகுது என்றான் ரொம்ப நம்பிக்கையாய்.
அதற்க்கிடையில் கடைபையன் டீயுடன் வரவும் குடித்துவிட்டு நாளைக்கி வாரண்ணேண்ணுட்டு போயிருக்கான். அந்தப்பய சொன்னமாதிரி நம்ம விடிவு காலம் வந்திருச்சி, கடவுள் கண்ண தொரந்துட்டான்னு நானும் சாப்பிட வீட்டுக்கு கிளம்பினேன்.
நமக்கும் நேரமாகிவிட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம், இனி நாளை சொல்கிறேனே.
அன்புடன்
வசந்தா நடேசன்.
No comments:
Post a Comment