Monday, March 28, 2011

விடுமுறை..

நண்பர்களே..

உடன் இருந்த ஒரு நண்பரை ஹார்ட் அட்டாக்கிற்க்கு பலி கொடுத்துவிட்டு சோகத்தில் இருப்பதால், நான் எழுத வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வரும் இரண்டாம் தியதி (02.04.2011) என் குடும்பத்தினர் இங்கே துபாய் வந்து விடுவர், பள்ளி விடுமுறையை கழிப்பதற்க்காக. நானும் அதை மிக எதிர்பார்த்திருக்கிறேன்.. இப்போது நண்பரை இழந்த சோகத்திலிருந்து விடுபட...

அலுவலகத்திலும் வேலை நெருக்கடி அதிகம், வருடக்கடைசி என்பதால் (அக்கவுண்டிங் இயர் எண்ட்).. அனேகமாய் ஏப்ரில் கடைசியில் அலுவல் நெருக்கடிகள் முடியும், மே மாதம் என் பதிவுகளை மீண்டும் துவங்க முடியும் என எண்ணுகிறேன்.

இது வரை தொடர் வருகை புரிந்து ஆதரவழித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நெருங்கிய நண்பர்கள் கைபேசி வழியாக கால் பண்ணி தேட ஆரம்பித்துவிட்டதால் இதனை எழுத வந்தேன். கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் உடன் வசித்த நண்பரை இழப்பது மிக துயரம், வேறு ஏழுதுவதற்கு இப்போதைக்கு ஏதுமில்லை.. வருகிறேன், இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு சமயம் சந்திப்போம். மீண்டும் நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, March 23, 2011

டும், டும், டும்..
ரகு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தார், நான் மண்டை காய்ந்து போய் இருந்தேன்.. நிமிடத்திற்கு நிமிடம் என் பிரஷர் ஏறிக்கொண்டிருந்த சமயம் அது. ரகுவின் மகள் கல்யாணம் குறித்த கவலை அவரை விட எனக்குத்தான் அதிகம்.

ரகுவின் மகள் கல்யாணம் பற்றி நினைத்து அவரது நண்பனாகிய நான் ஏன் உழன்று கொண்டிருந்தேன். பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டது, மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்து விட்டது, பணப்பிரச்னை இல்லை.. என்பதையும் சொல்ல வேண்டும்.. வேறு என்ன அவ்வளவு பிரச்னை என்று நீங்கள் மண்டை காயலாம்.. அதற்குத்தான் இந்த கதை, தொடரவும்!

அதுக்கு முன்னால ரகுவை பற்றி கொஞ்சம் முன்னுரை கதையின் போக்குக்கு மிக அவசியமாய் இருப்பதால் கொஞ்சம், வாங்க பழகலாம். அப்டியே கதைக்குள்ள நுழைஞ்சிரலாம் கவலை வேண்டாம்.

ரகு இப்போது 50 வயது ஆசாமி. இளமையிலேயே துபாய் வந்துவிட்ட துபாய் வாசி.. ஆரம்ப காலங்களில் சிறு வேலையில் சேர்ந்து பின்னர் படிப்படியாய் உயர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் இப்போதெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையும் ஊர் சென்று வரும்போது மட்டும் குடும்பஸ்தன் மற்றபடி என்னை போன்று துபாயில பேச்சுலரு.

ரகுவுக்கு ஒரு மகள் மட்டும், மனைவி 15 ஆண்டுக்கு முன் விவாகரத்து வாங்கி விட்டார்.. இருவரும் மகளின் நலனுக்காக வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. மகள் இப்போது ஊரில் அம்மாவிடம். ரகு வருடத்துக்கிரு முறை ஊருக்கு சென்று மகளுடன் பொழுதை கழித்து வருவார். மகள் இப்போது டாக்டருக்கு படித்து கடைசி வருடம் பரீச்சையை எழுதிக்கொண்டிருக்கிறார்..

என்ன காரணத்தால் விவாகரத்து என்று தெரிந்து கொள்ள உங்களைப்போல் எனக்கும் ஆசை தான், என்ன செய்வது மனுஷன் அது குறித்து பேச்சு வந்தாலே மூட் அவுட் ஆகி விடுவதால் சத்தியமா எனக்கு தெரியாது.. பின்னர் தெரிய வந்தால் அவசியம் சொல்கிறேன்.

ரகுவின் சமூகத்தை சேர்ந்த ஒரு துபாய் நண்பர் அமெரிக்காவில் வேலை செய்யும் தன் மகனுக்கு இவர் மகளை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டதில் ஆரம்பித்தது இந்த கதையின் ஆரம்பம். அந்த பையன் ஒரு முறை துபாய் வந்தபோது ரகு பார்த்து பழகி இவருக்கும் பிடித்து விட்டது.

இருவரும் முதலில் பையனுக்கு போட்டோவை காண்பித்து சம்மதமா என்று கேட்டு, பையனும் விரும்பி உடனே பெண் மொபைல் நம்பர் வேண்டும் என்று கேட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதிரடியாய் ஆரம்பம் ஆனது..

ரகு மனைவியிடம் நேரில் இதை விளக்க முடியாது, இவர் சம்பந்தப்பட்டது தெரிந்தாலே மனைவி மறுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது அவருக்கு, இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகி விட்டதாம். மகள் விஷயத்தில் இவர் வடக்கு என்றால் அவர் தெற்கு என்பதே வழக்கம். இதை நன்கு உணர்ந்திருந்ததால் ரகுவின் டெல்லி நண்பரை வைத்து அவரின் நண்பர் தான் அமெரிக்க மாப்பிள்ளையின் அப்பா என்பது போல் ஒரு திரைக்கதை உருவாக்கி கல்யாணம் வரை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கதைவசனம் எல்லாம் ரெடியாக்கி ஒரு வெற்றிக்கதையாக்கிய (கல்யணமாக்கிய) வெற்றி இயக்குனர் அடியேன் தான்.. எல்லாம் பக்கா பிளான். ம்ம்ம், பிச்சு புடுவம்ல பிச்சு....

ரகுவின் டெல்லி நண்பருக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்து கதையில் அறிமுகம் செய்யப்பட்டார். கதைப்படி அவர் இதற்காகவே ஊர் சென்று தற்செயலாய் மம்மியை பார்ப்பது போல் பார்த்து வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இடையில் சாணக்கியத்தனமாய் இந்த வரண் குறித்து பேசிவிட வசனம் எழுதிக்கொடுக்கப்பட்டது.

சும்மா சொல்லக்கூடாது, சொல்லிக்கொடுத்தது போல் கெஸ்ட் ரோலில் அசத்தி விட்டார். எல்லாம் பேசி விட்டு கடைசியில் கிளம்புவதற்கு முன் ஏதோ ஞாபகம் வந்தது போல் அவருடைய(?) நண்பரின் அமெரிக்க மகன் குறித்தும், அவனுக்கு வரண் பார்க்க வேண்டும் என்றும் உங்கள் மகளை பேசிமுடித்தால் என்ன என்று கேட்டு, யோசித்து சொன்னால் அவர்களை வரண் பார்க்க வரச்சொல்வதாய் ஒரு பிட்டை போட்டு விட்டு சென்றுவிட்டார்.

மம்மிக்கு முதலில் ஒரு தயக்கம் நாம் சொன்னால் இந்த மனுஷன் சம்மதிப்பானோ?? என்று ரகுவை குறித்து. என்ன இருந்தாலும் ரகு மகளின் தந்தை அல்லவா? என்று யோசிக்க ஆரம்பித்து விரைவிலேயே நான் எதிர்பார்த்தது போல் ஆணவம் தலைக்கேறி என் மகள், நான் தான் முடிவெடுக்க வேண்டும், அவரை கேட்க அவசியம் இல்லை.. மகளிடம் கேட்கலாம் அவள் சரியென்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மகள் வந்ததும் இது குறித்து கேட்டிருக்கிறார்.

மகளிடம் இது குறித்து ரகு ஏற்கெனவே சொல்லி நம் கதையை ஏற்கெனவே அவுட் ஆக்கி விட்டதால், திட்டம் அனைத்தும் தெரிந்த மகள், இப்படியாவது இவர்கள் சேர்கிறார்களா பார்க்கலாம் என்று, ம்ம்ம், பார்க்கலாம் என்றதும் மம்மிக்கு அடுத்து என்ன செய்வது என்ற கவலை ஆரம்பித்தது. பையன் போட்டோ வாங்கலாம் பார்த்து மகளுக்கு பிடித்து ஜாதகமும் பொருந்தியிருந்தால் பின்னர் ரகு குறித்து கவலைப்படலாம் என்று அடுத்த நாளே டெல்லி நண்பருக்கு போன் வந்தது, கதைப்படி வரவேண்டும், நாம யாரு?

பையன் போட்டோவும், ஜாதகமும் கேட்டு கால் வந்ததும், ஏற்கெனவே ரகுவினால் பொருத்தம் பார்க்கப் பட்டு ஜாதகம் பொருந்திய பின்பே நம் கதை ரெடியாகி இருந்ததால் நோ ப்ராப்ளம். நண்பர் ஊரிலேயே இருந்ததால் அடுத்த நாளே போட்டோ மற்றும் ஜாதகம் கொடுக்கப்பட்டது.

ஜாதகம் நல்ல பொருத்தம், மகளுக்கு பையனை பிடித்து விட்டது எனக்கு டென்ஷனும் கூடவே. ரகு சிக்கன் சாப்பிட்டுக்கொண்டு பல் குத்திக்கொண்டிருந்த போது ஊரிலிருந்து போன் வந்தது. நண்பர் பேசினார், ஆல் ஓகே.. அப்புறம் என்ன?

கல்யாணத்தை பொருத்த வரை ரகுவின்/அப்பாவின் முக்கியத்துவம் குறித்து மம்மிக்கு புரியும் படி எடுத்துரைக்கப்பட்டது, டெல்லி நண்பர் நான் வேண்டுமானால் இப்படி பேசிப்பார்க்கவா என்று நம் திட்டப்படி கேட்கவும், மம்மியிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்தது. அதாவது பெண் பார்க்க வரும்போது ரகு துபாயில் இருந்து வேலை அதிகம் என்பதால் வரமுடியாது ஆனால் திருமணத்திற்கு வருவார் என்பது போல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிடலாம், பையனுக்கு பெண்ணை பிடித்து பெண்ணுக்கும் பையனை பிடித்தால் பின்னர் ரகுவை திருமணத்திற்கு அழைத்து வர டெல்லி பொருப்பேற்றுக்கொண்டது நம் திட்டப்படி!

மாப்பிள்ளை மற்றும் அவர் அப்பா அம்மா தவிர அவர் உறவினர் யாருக்கும் என் திட்டம் தெரியாது என்பதும் இந்த கதையை படிப்பவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தும் கூடுதல் செய்தி!

பெண் பார்த்து பேசி முடித்து கல்யாணத்திற்கு குறித்திருந்த நாளும் வந்தது. ரகு திட்டப்படி கல்யாணத்தன்று காலை பெண் அழைப்பிற்கு முன் பதினைந்து வருடத்திற்கு பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தார், பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி, மம்மியின் முகத்தில் பெருமிதம் அவர் நினைத்தபடி கதை நடக்கிறதாம்.. டயலாக் உதவிக்காக உடனிருந்த எனக்கு இன்னும் டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது..

பெண் அழைப்பு முடிந்து நல்லபடியாய் பெண் கழுத்தில் தாலி ஏறியது. ஆக நம் திரைக்கதை, டைரக்ஷ்ன் எல்லாம் நல்லபடியாய் முடிந்து ‘டும், டும், டும்‘ வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

ஆள உடுரா சாமி ன்னு தாலி ஏறியதும் எனக்கு வந்த ஒரு மூச்சு இருக்கிறதே, நிம்மதிப்பெருமூச்சு.. செம ரிலாக்ஸ், வாழ்க்கையில் இதற்குமுன் அதை அனுபவித்ததில்லை!

என்ன எனக்கு ஒரு சிறு வருத்தம், நான் பிரிந்தவர் கூடிட விரும்பி கொஞ்சம் அதிகமாய் வசனம், திரைக்கதை ரெடி பண்ணி வைத்திருந்தேன். அதற்கு வேலை இருக்கவில்லை. எல்லாம் எடிட் ஆகி விட்டது?

ரகுவும், மம்மியும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும், புன்னகைத்ததும் தான் நடந்தது, கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே சமாளித்து விட்டார்கள், நான் ஆர்வத்துடன் பார்க்க, பார்க்க?? ம்ம், காலம் இனி அவர்களை சேர்த்துவைக்கக்கூடும்.

அன்புடன், வசந்தா நடேசன்.

படங்கள் கூகிளில் திருடப்பட்டது, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்ளாக!

மதிமுக முத்து

கடலுக்குள் முக்குழித்து
முத்துக்கள் எடுத்து வந்தேன்.
எடுத்து வந்த அத்தனையும்
என்ன சொல்ல? சொத்தை முத்து!

கெட்டதென் விதியென்று
சுற்று முற்றும் தேடிப்பார்த்தால்..
ஒற்றை முத்து நல்முத்து,
கண்களுக்கு நல்விருந்தாய்.

ஆசையுடன் அள்ளி அதை
ஆதரித்து வைத்திருந்தேன்.
கழுத்தினிலே கோர்த்திடலாம்,
கைவளையில் பதித்திடலாம்,

மோதிரத்தில் பதித்து வைத்து,
விரல்களுக்கு அளித்திடலாம்!
காலம் அது கனிந்து வர
காத்திருந்தேன் தேர்ந்தெடுக்க.

பம்பரமாய் அது சுழன்று
ட்சுனாமியாய் சுற்றியது.
முடிந்து போன முன் ஜென்மத்தில்
ஜெயித்து வந்த கூட்டத்தில்
போர்வாளாய் இருந்ததுவாம்!

பெருமைக்கு மாவிடித்து,
புலி, எலியென்று...
சிங்கத்திடம் கதைசொல்லி
சீரழிந்து போனதுவோ!

என் செய்வேன், ஐயய்யோ!
ஆதரித்து அரவணைத்து
தோள் கொடுக்க முனைகையிலே
ஆர்பரித்த கடலுக்குள்
தவறியது விழுந்ததுவோ?

இருக்கும் இடம் நினைத்து
அவர் இஷ்டப்படி வாழ்ந்திராமல்
தன்னிலை பெரிதென்று
தண்ணீரில் மூழ்கியதோ?

தன்மானம் பெரிதென்று
தனித்து போட்டியிட்டு
வெற்றியென்ன, தோல்வியென்ன..
வீரம் தேவை தானே?

தமிழகம் பெருமை கொள்ள
தமிழர்கள் பெருமை போற்ற
அடுத்தவர் நலமாய் வாழ
ஆவலாய் விளைந்த முத்தே!

வந்திடல் வேண்டும் இங்கு,
தந்திடல் வேண்டும் வாக்கு.
புறக்கணிப்பு வேண்டாம் முத்தே,
கனிந்தழைக்கின்றோம் வாராய்!

மனம் கனத்து அழைக்கின்றோம் வா!


அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- நான் மதிமுக அனுதாபி இல்லை.. மக்கள் கூட்டணி நாமல்லாம்.. மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி. (மக்களுடனும், ஜெயலலிதா அம்மாவுடனும் அல்ல..) ஹே, இவன் தே.மு.தி.க/அ.தி.மு.க ன்னு நினைச்சுராதீங்க?? அப்புறம் நான் மஞ்ச துண்டை தலையில் போட்டபடி போகவேண்டியது தான். ம்ம்ம், இவன் திமுக வா?? அந்த அழுகின மாம்பழத்தை எடுத்து தலைல போடுறா.. அப்டீன்னு வராதீங்க, நான் அப்புறம் அறுவா, சுத்தின்னு எடுத்துருவேன். நீங்க அப்புறம் தாமரைக்குழத்தில் போய் விழ வேண்டியது தான்!

மண்டை காஞ்சி நான் எந்த கட்சி என்று நினைத்து எதையும் மனதில் வைத்து யாரும் கும்மிடாதீங்கோ, நான் ஒரு நடுநிலை வாக்காளன்.. அப்டீன்னு சொல்ல வந்தேன். வைகோ தனித்து நின்றிருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் இந்த முறை என் வாக்கு, (புலிகளை பற்றியும், ஸ்டெர்லைட் பற்றியும் அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாய் பிறந்து வந்தது போல் அதிமுக மற்றும் திமுக வை எதிர்த்தும் தமிழக மக்கள் பிரச்னைகளை வைத்தும் மாத்திரம் பிரச்சாரம் செய்தால்!) ம்ம்ம்ம்... பாவம், வைகோவின் இப்போதைய நிலையை நினைக்கும் போது இப்படி ஒரு கவிதை(?) சிக்கியது.. என்ன செய்ய? அப்படியே நம்ம தஞ்சாவூர் கல்வெட்டுல குறித்து வைத்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு தெரியவேண்டும் அல்லவா??

Wednesday, March 16, 2011

காளீஸ்வரன் கதை.. [4]

ஒரு நாள் அலுவல் முடிந்து அறைக்கு வந்தபோது காளீஸ்வரன் படு சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கேட்டபோது வேலை போய்விட்டதாகவும், டிக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு வாரத்தில் ஊருக்கு போக ரெடியாகுமாறு கம்பெனியில் சொல்லிவிட்டதாக சொன்னான்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. அது நான் வந்து ஒரு 6 மாதம் ஆன புதிது.. இங்குள்ள நடைமுறைகள் அப்போது நிறைய தெரிந்திருக்கவில்லை. பின்னர் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். காளீஸ்வரன் வந்து ஒரு இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் ஆகியிருக்கும். இது வரை ஊருக்கு போகவில்லை, ஊர் விட்டு வந்ததிலிருந்து. வீட்டிற்கு மூத்த பிள்ளை. ஒரு முறையோ இரண்டு முறையோ ஊர் போகும் பிறரிடம் அவனுடைய தங்கைக்கும், தம்பிக்கும், அப்பா, அம்மாவிற்கும் கொஞ்சம் நகைகளும், வாட்ச், ஸ்ப்ரே போன்ற சமாச்சாரங்களும் கொஞ்சம் சாக்லேட்களும் அவ்வப்போது கொஞ்சம் பணமும் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறான்.

நிறைய யோசித்து ‘கல்லிவல்லி‘ ஆகி விடுவது என்று முடிவெடுத்தான். கல்லிவல்லி அல்லது கல்லிவெல்லி என்றால் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கான விசா எதுவும் இல்லாமல் என்ன வேலை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது போல் தங்கி இருப்பவர்களை கல்லிவெல்லிகள் என்பார்கள்.

நம் ஊரில் காந்தி பிறந்த நாள் மற்றும் அண்ணா பிறந்த நாள் போன்ற சமயங்களில் சிறைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்புவது போல் இங்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாப்பு என்று ஒன்று கொடுப்பார்கள் அப்போது இந்தியா செல்லலாம் சிறைக்கு போகாமல். நடுவில் மாட்டிக்கொண்டால் சிறை தண்டனை, தண்டனை முடிந்து யாராவது நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்தால் சிறையிலிருந்து நேரே ஏர்போர்ட் கொண்டு ப்ளைட் ஏற்றி அனுப்பி விடுவார்கள். தண்டனையை வேண்டும் என்றே அதிகம் விளக்காமல் விட்டிருக்கிறேன் ம்ம்ம், அதெல்லாம் வேண்டாம் இங்கு.

பொதுமாப்பிற்கு காத்திருக்க வேண்டும்.. காளீஸ்வரன் இந்த நிலைக்கு துணிவாக முடிவெடுத்ததற்கு தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம், வீட்டுக்கடன் என்று ஏதாவது இருக்கும், அது ஏழை இந்தியர்களின் சோகம். அங்கு எல்லோரும் ஒன்றும் ராசா அல்லவே.

பின்னர் ஒருநாள் அவன் அலுவலகம் சென்று கிடைக்கவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து விமான நிலையம் அழைத்துப்போய் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து எக்ஸிட் ஆகிறானா என்று பி.ஆர்.ஓ கவனித்துக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணைத்தப்பி வெளியே வந்து விட்டான், இது எல்லாம் நம் மக்களுக்கு சர்வ சாதாரணம். பி.ஆர்.ஓ கண்ணில் காணாத உடன் சரி பயபுள்ளை உள்ள போயிடிச்சி என்று போய் விடுவான்.

இப்படி ஆள் வெளியேறாமல் உள்தங்கிவிட்டால் ஸ்பான்சர் பாடு திண்டாட்டம், அதை விளக்கி அவன் புகைப்படத்துடன் ‘காணவில்லை‘ என்று இங்குள்ள ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முடித்து விட்டு அவன் வேலையை பார்ப்பான்.

காளீஸ்வரன் இப்படி கல்லிவெல்லியாய் வேலையை தொடங்கினான், முன்பு சொன்னது போல் இவனுக்கு திறமை இருந்ததால் எங்கும் வேலை கிடைத்தது, என்ன... அரசு அலுவலகங்கள், மற்றும் free zone பகுதிகளுக்குள் சென்று வேலை செய்ய முடியாது.. எப்போதும் லேபர் அலுவலகத்திலிருந்து செக்கிங் வருகிறானா என்று கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

நல்ல வேலை செய்து பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து அவன் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் வைத்து காண்ட்ராக்ட் எடுக்கும் அளவுக்கு சென்று விட்டான், கையில் பணம் புரள ஆரம்பித்தது. அந்த மலையாளி இவனை வைத்து வேலை வாங்கி அவன் அதிகம் எடுத்துக்கொண்டு இவனுக்கும் இவன் திருப்திக்கு கொடுத்து நல்லபடியாய் நடந்தது, மலையாளிக்கு கம்பெனி இருந்தது ஆனால் வேலை தெரியாது.. இவனுக்கு வேலை தெரியும் ஆனால் விசா கிடையாது.. அவன் ஆட்களை வைத்து இவன் வேலை வாங்கி நல்ல சம்பாதித்தான்.

அந்த மலையாளிக்கு இவனை காலையில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும், பில்கள் பாஸ் பண்ணி வாங்குவதற்காக வேலை செய்த இடங்களுக்கு அலைய வேண்டும், பின்னர் மாலையில் இவனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவேண்டும், இதுதான் வேலை. எப்போதும் ட்ராயிங் பார்த்து கொட்டேஷன் போடுவது, ஆட்களை வேலை வாங்குவதும் இவன் வேலை. அப்போதே இந்த வசதிகளுக்காக ரூமில் ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தான். மலையாளிக்கு வேறு வழியில்லை என்பதால் இவனை அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருந்தான்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தான் துபாயில் வேலை செய்யும் நம் நண்பர்கள் எந்த பாதையில் செல்லக் கூடாது என்று நான் சொல்ல நினைத்தேனோ அந்த பாதையில் காளீஸ்வரன் செல்ல ஆரம்பித்தான், அது என்ன பாதை அது அவனை எங்கு வரை கொண்டு சென்று விட்டது என்பது இன்னொரு நாள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [2] [3]

Monday, March 14, 2011

குழந்தை தொழிலாளர்கள்!

இன்று சன் டிவியில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் மனதை பாதித்ததால் அதை பற்றிய ஒரு பதிவு இங்கே. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மேலே தொடரவேண்டாம், சன் டிவியை விட நான் அதிகம் சொல்லப்போவதில்லை.. இது என் பாணியில், என் பார்வையில். (நம்ம கடைக்கு வார ஒரு முப்பது கஷ்டமருக்காக??)

நம் சமூகம் இன்னும் எத்தனை விஷயங்களில் மறுமலர்ச்சி அடையவேண்டியதிருக்கிறது என்பதை நினைத்தால் ஒரு வித திகைப்பே மிஞ்சுகிறது.. இத்தனைக்கும் இதை தடுக்க பல சட்டங்களும் பல அரசு அதிகாரிகளும் இதற்க்காக நம் நாட்டில் வேலை செய்கிறார்கள்.

சிவகாசி போன்ற தொழில்வழம் மிக்க நகரங்களில் இந்த அதிகாரிகள் கொஞ்சம் வேலை பார்த்து சில வற்றை கண்டு தடுத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. பிற நகரங்களில் இவர்களுக்கு வியாபார நிறுவனங்களை மிரட்டி காசு வாங்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலும்!

ஆனாலும் இன்று நான் பார்த்தது தொழில் சார்ந்ததில்லை.. சொல்லப்போனால் பல வருடங்களுக்கு முன் இது போல் ஒரு சம்பவம் நம் தமிழ்நாட்டிலும் நடந்தது நினைவு இருக்கிறது.. பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று பார்த்தது, தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பதினாலு வயதுக்கும் குறைந்த பருவம் கொண்ட சிறுமிகளை கேரளாவுக்கு வேலை செய்ய அனுப்பியிருக்கிறார்கள், ஒரு ஏழை தாயும், தகப்பனும். பள்ளியில் படித்தவர்களின் படிப்பையும் நிறுத்தி. மிக குறைந்த அளவு பணம் வாங்கிக்கொண்டு. பண ஆசையா?? இல்லை, படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை என்னுடன் கேரளாவுக்கு வேலைக்கு அனுப்பி வை, மாதம் நல்ல சம்பளம் தருவார்கள் என்று வற்புருத்தி தாயின் அண்ணன் முறையிலான ஒருவரே அழைத்துச்சென்றிருக்கிறார்.. அழைத்துச்சென்றவருக்கும் அவர் மலையாளி பெண் பார்ட்டனுருக்கும் இதில் கிடைத்தது 15000 ரூபாய்கள்.

அங்கே போனதிலிருந்தே ஒரு குழந்தையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கி, சிகரட் சூடு, அடுப்பிலிருந்து எரியும் நெருப்பை வைத்து சூடு போட்ட காயங்கள் இத்யாதி, இத்யாதி... முடிவில் குழந்தை 15 நாட்களிலேயே கொடுமை தாங்காமல் இறந்து விட்டது.

இன்று அந்த மலையாளி தம்பதியை கைதுபண்ணியிருக்கிறார்கள், எல்லாம் நடக்கிறது, தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம், நான் சொல்ல வந்தது இனி என்ன நடக்க வேண்டும், எப்படி இதை தடுப்பது என்பதை பற்றி சிறிது அலசவே.

கேட்ட இன்னொரு அதிர்ச்சி தகவல், கேரளத்தில் இதுபோல் கிட்டதட்ட 5000 குழந்தைகள் வேலை செய்கிறார்களாம், இதற்கான நெட்ஒர்க் பல வருடங்களாய் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ஒரு வேனில் பல குழந்தைகளை அடைத்து வைத்து கொண்டு போய் வேண்டியவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தன்னார்வ தொண்டர் பேசினார். என்ன கொடுமை சார் இது??

சரி, இனி என்ன பண்ணலாம் என்று என் பார்வையில்.. (சன் டிவியில் சொல்லாதது!!)

தமிழகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உடனே கொண்டுவரவேண்டும், பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்கள் மூலம் இது சாத்தியமாகலாம், அஃப்கோர்ஸ் அரசு தான் இதில் தலையிடவேண்டும். இப்போது இதற்காக இருக்கும் அரசு அலுவலர்களுக்கு இது குறித்த விழிப்பணர்வு பயிற்ச்சி வகுப்புகள் எடுத்து கொஞ்சம் வேலை செய்ய சொல்லலாம்.

பள்ளிகளில் படிக்கும் பதினைந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் படிப்பை திடுதிப்பென்று நிப்பாட்டினாலோ அல்லது அடுத்த வருடம் படிப்பை தொடராவிட்டாலோ அது குறித்து பள்ளிகள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் இது குறித்து விசாரித்து ஒரு அறிக்கை தயாராக்க வேண்டும். இதுவும் அரசின் கைகளில்.. சட்டமாக்கப்பட வேண்டும். பின்னாளில் காணாமல் போன குழந்தைகள் என்றால் நேராக தொழிலாளர் துறைக்கு மக்கள் நடக்கும் நிலை வரவேண்டும்.

சரி எல்லாம் அரசிற்கே விட்டால் பொதுஜனத்திற்கு என்ன வேலை?? நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் விழிப்பணர்வு தேவை மக்களே!! நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் இது குறித்து உடனே குழந்தைகளின் பெற்றோரை அழைத்து விசாரிக்கலாம் நம் அரசு விழித்துக்கொள்ளும் வரை.

நீங்கள் ஒரு வாடிக்கையாளராக எங்காவது குழந்தை தொழிலாளர்களைக்கண்டால் உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம்.

முக்கியமாக உங்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் பார்வையிலோ ஏதும் இது போல் கொடுமை நடக்கிறது அல்லது குழந்தை காணாமல் போகிறது என்றால் உடனே உடனே இது குறித்து தொழிலாளர் துறைக்கு ஒரு புகார் அனுப்பலாம். அட்லீஸ்ட் காவல் நிலையத்துக்கு ஒரு அனானி கால் பண்ணியாவது சொல்லுங்கள் பொதுஜனமே!

இது குறித்து பல விவாதங்களும், விழிப்புணர்சியும் பரவலாக வேண்டும் என்பதே என் ஆசை..

அன்புடன், வசந்தா நடேசன்.

Thursday, March 10, 2011

எல்லாம் நன்மைக்கே..

ஒரு காலத்தில், ஒரு 200 அல்லது 250 ஆண்டுகளுக்குமுன் ஒரு ராஜா இருந்தானாம், அவனுக்கு ஒரே ஒரு ராணி, மற்றும் பிரபலமான ஒரு மந்திரி பிரதானி.

மந்திரி எப்போதும் ரொம்ப மகிழ்ச்சியாய் இருப்பாராம், அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை எல்லாம் நன்மைக்கே என்பது. ஆனால் ராஜா ஏனோ அந்த அளவுக்கு சந்தோஷமாய் தான் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தான்.

காலப்போக்கில், அது, இது என்றில்லாமல் என்ன எழவென்றாலும் எல்லாம் நன்மைக்கே என்றால் மனுஷனுக்கு கோபம் வருமா, வராதா?? ராஜாவுக்கும் வந்து தொலைத்தது, சரி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

நீ எப்படி இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாய் என்று மந்திரியை வரவழைத்து மிரட்டி கேட்டாயிற்று, ம்ம்ம், ப்ரயோஜனம் இல்லை..

ராஜாவுக்கு கோபம் வந்தது. எந்நேரமும் ஏதாவது ப்ரச்னை.. ஆதரவை வாபஸ் வாங்கிருவேன் என்று இந்த காலத்தில் இருப்பது போல் என்ன எழவாவது அப்பவும் இருந்து தொலைத்திருக்கும்?? நாமல்லாம் இப்ப 250 வருஷத்துக்கு இங்கிட்டு இருக்கோம், நமக்கு என்ன தெரியும் என்பது நியாயமானதே.. மனிதன் அன்றும் மனிதன் தானே?

ஆனாலும் ராஜா விடவில்லை, தன் கையிலிருக்கும் சி.பி.ஐ யை ஏவி இப்போது நோண்டி நொங்கெடுப்பது போல் அப்போது மந்திரியை கண்காணித்து சேதி சொல்ல பத்து இருபது ஆட்கள் நியமிக்கப்பட்டனர்..

ரெக்கார்ட் பண்ணி வக்கணையாய் கேட்டுத்தொலைக்க செல்போன் கருமமெல்லாம் அப்போது இல்லையாதலால் ஒற்றர்கள் இருபது பேரும் மந்திரியை பின்தொடர்ந்து கண்காணித்தார்கள். இரண்டு மூன்று நாட்களிலேயே மன்னனுக்கு தகவல் வந்தது, எல்லாம் மந்திரி தினமும் சொல்லும் மந்திரத்தால் தானென்று..

ராஜா நினைத்தான், இந்த பய ஆனாலும் நம்மட்ட மரைச்சுட்டானே என்று மனம் நொந்து, நட்ட நடு ராத்திரியில் மந்திரியை மீண்டும் அழைத்து, நீ தினமும் சொல்லும் மந்திரத்தை எனக்கு இப்போதே சொல்லிக்கொடுக்க வேண்டும், நாளை காலையில் நான் அதை சொல்லி நாளைமுதல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றான்.. உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்றான்..

மந்திரிக்கு இரண்டாம் தாரமாக மன்னன் மகளை கேட்டு மணந்து கொள்ள மனதுக்குள் ஆசை இருந்தாலும், அந்த மந்திரம் ஒரு சாதாரண பூஜை மந்திரம், தினமும் சொல்வது.. தினமும் நாம் சூரியனை பார்த்ததும் சொல்லும்

உலகத்தை காத்திடும் சூரியனே,
உன்னதம் தந்திடு சூரியனே..
உள்ளொளி வீசுவாய் சூரியனே..
உயர்வுரச் செய்வாய் சூரியனே
தன்னொளி மிகுவாய் சூரியனே,
தவறுகள் பொருப்பாய் சூரியனே..

என்பது போல் ஒரு சாதராண மந்திரம், இதனால் ஒன்றும் உதவாது என்று தெரிந்ததால் ராசா மகளை தியாகம் செய்து, அப்படி ஒன்றும் இல்லை என்று உருதியாய் சொன்னான். மேலும் மந்திரிக்கு எந்த மந்திரத்தை யார் யார் எப்போது சொன்னால் பலன் கிடைக்கும் என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த படியால் நாம் ஏதோ சொல்லப்போக நாளையே ஏதேனும் நடந்து வேறு மன்னன் வந்து இந்த நாட்டை பிடித்துவிட்டால் நம் தலை மிஞ்சாது என்று அமைதியாய் இருந்தான்.

ராஜா அடம் பிடித்த கழுதையாய் அடம் பிடித்தான், இப்போது சொன்னால் தான் ஆயிற்று, இல்லை உம் தலையை இப்போதே வெட்டிவிடுவேன் என மிரட்டவும், இது என்னடா அக்கிரமம் என்று, உடனே ஒரு யுக்தி செய்தான்.. பக்கத்தில் இருந்த வீரர்களை பார்த்து, யாரங்கே, உடனே மன்னனை கைது செய்து தூக்கிலிடுங்கள் என்றான் செயலலிதா போல்..

போலீசார்.. ச்சே, வீரர்கள் மந்திரியையும் பார்க்கிறார்கள், மன்னனையும் பார்க்கிறார்கள் ஆனால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்கவில்லை.. மன்னனுக்கு இதற்குள் ப்ரஷர் ஏறி விட்டது.. தக்காளி, நான் மந்திரத்தை கேட்டால் நீ என்னை தூக்கிலிடுவாயா?? என்று உன்மத்தம் அடைந்து, டேய், இவனை இப்போதே தூக்கிலிடுங்கள் என்று உத்தரவிடவும் வீரர்கள் டக்கென்று மந்திரியை சூழ்ந்து கொண்டனர்.

ஐயோ, என்னை கொல்ராங்க, என்னை கொல்ராங்க என்று கத்தாமல் மந்திரி சிரித்துக்கொண்டிருந்தான், மன்னன், கொஞ்சம் அயர்ந்து போய், நப்பாசையுடன், ஏன் உமக்கு பயம் இல்லையா?? உன்னை இப்போது தூக்கிலிட கொண்டு செல்கிறார்கள் என்று கேட்கவும்.. மந்திரி மீண்டும் சிரித்துக்கொண்டே, வழக்கம் போல் எல்லாம் நன்மைக்கே மன்னா, நீங்கள் சொன்னதும், நான் சொன்னதும் ஒரே வார்த்தைதான், நான் உங்களை தூக்கிலிடச்சொன்னேன் வீரர்களிடம், வீரர்கள் அசையவில்லை.. ஆனால் நீங்கள் சொன்னதும் இதோ நான் கைவிலங்குடன்.. எல்லாம் நன்மைக்கே.. என்றான்.

மன்னனுக்கு ஏதும் விளங்கவில்லை, எல்லாம் நன்மைக்கே என்றவுடன் மன்னனுக்கு இன்னும் வெறி தலைக்கு ஏறி, இவனை கொண்டுசெல்லுங்கள் என்றான். பின் சிறிது யோசித்து மீண்டும் வீரர்களை அழைத்து, மந்திரி எப்படியும் ஜெயிலுக்குள் மிரண்டு வழிக்கு வருவான் என்று கொஞ்சம் நப்பாசையுடன், அடுத்து நான் சொல்லும் போது இவனுக்கு தூக்கு என்று அனுப்பி வைத்தான்.

சில நாள் கழிந்தன, ராஜாவுக்கு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது, நல்ல ஒரு மாம்பழத்தை வரவழைத்து அதை ஆசையுடன் தன் கையாலேயே அரிந்து சாப்பிடவேண்டுமென்று கத்தியால் வெட்டிக்கொண்டிருந்தான்.. இதற்குமுன் எல்லாமே வேலையாட்கள்தான், ராசா என்றால் சும்மாவா?? எல்லாம் தான் கிடைக்கும்.

ஆனாலும் நடப்பது எல்லாமே நம் கையில் இல்லை அல்லவா?? தக்காளி, மாம்பழம் வெட்டும் போது தெரியாமல் தன் சுண்டு விரலின் நுனி பாகத்தையும் துண்டாக வெட்டி விட அதுவும் மாம்பழ துண்டங்களோடு துண்டாய் விழுந்து மன்னன் துடித்தான்.. நம் கஷ்டம் தீரவே தீராதா என்று மீண்டும் சினம் கொண்டான் மந்திரி மீது.. சரி மந்திரி என்ன செய்கிறான் என்று வீரர்களை அனுப்பி பார்த்தால் மந்திரி வீரர்களிடம் விஷயத்தை கேட்டபிறகும் எல்லாம் நன்மைக்கே என்று வழக்கம் போல் சொன்னதை அப்படியே வந்து சொல்லவும் மன்னன் இன்னும் கடுப்பானான்..

சில வாரங்களுக்கு பின் ராஜா கடைக்குட்டி மகள் வேட்டைக்கு போகவேண்டும் என்று மன்னனை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.. மன்னனும் அரசவையை விட்டு வெளியே சென்று வெகுகாலம் ஆகிவிட்டதால், சரி செல்லலாம் என்று வீரர்களை ஒரு வேட்டைக்கு ரெடியாகச் சொன்னான். எல்லாம் தயாராகி, படை, அம்பு, துப்பாக்கி, பட்டாளம் எல்லாம் அதிர் வேட்டு முழங்க வேட்டைக்கு சென்றனர்..

வேட்டையின் போது ராஜாவின் கடைக்குட்டி மகள் ஒரு துப்பாக்கியுடன் தான் வேட்டையாடிய சிறுத்தையுடன் இருந்தபோது எடுத்த போட்டோ தான் இது..ம்ம்ம்ம், ராஜாவின் குட்டி மகள் ஒரு சிறுத்தையுடன் போதும் என்று உட்கார்ந்தாலும், ராஜாவுக்கு அடங்கவில்லை, குதிரை மற்றும் வீரர்கள் சூழ மீண்டும் வேட்டை துவங்கியது.. நேரம் செல்லச்செல்ல ராஜாவுக்கு ரொம்ப ஆர்வக்கோளாராகி ஒரு மானைத்துரத்திக்கொண்டு தனியே நீண்ட தூரம் செல்ல நேர்ந்தது.. ஒரு கட்டத்தில் நரமாமிசம் சாப்பிடும் ஒரு நரர் கூட்டம் இடையே சென்று தனியே அகப்பட்டுக்கொண்டார்..

நான் தான் ராசா.. என எவ்வளவோ மன்றாடியும் விடாமல், இங்கு எங்களுக்கு ராசா வேற இருக்கார் வாங்கன்னு கையை பின்னால் கட்டி ராசவை கொண்டுசென்றனர்.. அங்கிருந்த நரர்களின் ராசவுக்கு நம்ம ராசாவை கண்டதும் நாக்கில் எச்சில் ஊரியது.. தக்காளி, இவனை தலையை அறுத்து சாமிக்கு உடனே படைச்சிட்டு இவன் இதயத்தை ருசி பாக்கணும்னு ஆசை அடக்கமுடியாமல் வந்து தொலைத்தது.. சரி, நடைமுறைகள் இருக்கிறதே என்று மதகுருவை வரவழைத்தான் பூஜைகளை நடத்த..

மதகுரு நம் நித்தி போல் நீண்ட முடியுடன் புன்னகையுடன் வந்தார், அவரும் பாவம் மனித இதயம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?? வந்து, ம்ம், ஆரம்பமாகட்டும் எல்லாம் எனவும், கவுண்டமணியை காந்தக்கண்ணழகிகள் ரெடி பண்ணியது போல் எல்லாம் நடந்தது..

ராஜா முழித்துக்கொண்டிருந்தான்.. என்ன செய்வது என தெரியவில்லை.. கடைசியில் ஸ்டார்ட், மியூசிக் என்று சொல்லும் தருணத்தில்.. குருஜி பலியை சோதிக்கத்துவங்கினான்.. கை விரல்களை பார்த்ததும் மதகுருவின் முகம் தொங்கிவிட்டது. அய்யோ என்று ஆசை, தோசை, அப்பளம், வடை கதையாய் ஆகிவிட்டதே என்று நர ராசவிடம் சொன்னான், இது குறைபலி, இவன் விரல்கள் முழுமையாய் இல்லை.. நம் தெய்வம் ஏற்றுக்கொள்ளாது என்று.

நர ராசா, ஆஹா.. என்று சொல்லிவிட்டு, மதநம்பிக்கையை மீறி எதுவும் செய்யமுடியாது என்று மன்னனை விடுதலை செய்து கைது செய்த இடத்திலேயே கொண்டு விடச்சொன்னான்.. மன்னனுக்கு அப்போதுதான் மூச்சு வந்தது.. தலை தப்பிச்சுடா சாமி ன்னு வந்து தன் கூட்டத்துடன் சேர்ந்தான்..

அப்போதுதான் அவன் மனதில் கேள்விகள் வந்தது.. இந்தபய மந்திரி நம்ம விரல் போனதை கேட்ட உடன் எல்லாம் நன்மைக்கே என்றானே, நமக்கு மாம்பழம் வெட்டும்போது விரல் துண்டானாலும் இப்ப உயிர் தப்பியது அதனால்தான்.. இவன் சொன்னதுல எதாச்சும் அர்த்தம் இருக்குமோ என்று யோசிக்க துவங்கினான்..

சரி என்று மந்திரியை வரவழைத்து விபரம் கேட்டான், எனக்கு விரல் துண்டு போனது, நீ தெரிந்தோ, தெரியாமலோ எல்லாம் நன்மைக்கே என்றாய், எனக்கு உண்மையிலேயே அது நன்மைக்கு என்று இப்போது தெரிந்ததால் உனக்கு விடுதலை என்றான்.. மந்திரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நன்றி மன்னா, நன்றி மன்னா என்று கால்களில் விழுந்தான்..

கைபிடித்து எழுப்பி விட்டு சரி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம், அதை விளக்கி விட்டு செல் என சொல்லவும் மந்திரி என்ன எழவுடா இது என்று மீண்டும் ஜெயிலுக்கு செல்ல ஆயத்தமானான்.

மன்னன் அவனை நிறுத்தி, எல்லாம் நன்மைக்கே என்றாய் நான் உயிர் தப்பினேன்.. அதனால் உனக்கு என்ன நன்மை?? நீ ஜெயிலிலல்லவா இருந்தாய் இத்தனை நாளும் என்றான்..

மந்திரி சிரித்துக்கொண்டு சொன்னான், என்னை சிறையில் அடைக்கவில்லையென்றால் நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன்,நான் வழக்கமாய் வேட்டையின் போது உங்களை விட்டு அகலுவதில்லை.. அதனால் நானும் உங்களுடன் சேர்ந்து நரர்களிடம் மாட்டியிருப்பேன்.. நீங்கள் குறைபலி தப்பிவிட்டீர்கள், எனக்கு குறையேதும் இல்லாத முழு உடம்பு, நான் மாட்டியிருப்பேன்.. அப்ப எல்லாம் நன்மைக்கே அல்லவா என்றான்..

மன்னன் ஷாக்காகி மந்திரிக்கு நிறைய பொன்னும், பொருளும் பரிசளித்து அனுப்பினான்..

நன்றி, அவ்ளவ்தான்..

அன்புடன், வசந்தா நடேசன்..

டிஸ்கி :- இது சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு நீதிக்கதை.. நான் இதற்குமுன் இதை கேட்டதில்லை.. சரி, நம்மை போல் வேறு யாராவது இருந்தால் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக.. என்று ஒரு புது முயற்சி.. போரடித்தால் சொல்லுங்கள், வேற டிரை பண்ணுவோம்.. நோ வொரீஸ்..

Wednesday, March 9, 2011

இவைகள் பேசிக்கொண்டால்..!!

சூரியன் :- தலை தப்பிச்சுதுடா சாமி.. கருத்தமேகக்கூட்டம் என்னமா சுத்துனதுக?? மழையா கொட்டி நம்ம தன்மானத்தை உடைச்சுருவானுகளோன்னு பாத்தேன், நல்லவேளை கவுந்து அடிச்சு உழுந்தாலும் மீண்டும் உச்சிக்கி வந்துட்டம்ல, ஏதோ 63 நாயன்மாருக புண்ணியத்தால இனி நல்லா வறுத்தெடுக்கலாம் பயபுள்ளைகளா..

கை1 :- மானம்போச்சி, மானம் போச்சி.. சூரியனை நம்பாதே.. சூரியனை நம்பாதே.. வேற வழி இல்ல, இப்ப நம்பலாம்... ஆனா நம்பக்கூடாது.

கை2 :- போடாங்ங்ங்ங்க.. நானே நடுநடுங்கி ஒன்னுக்கு ஊத்திட்ருந்தேன், ஏதோ கனவுமாதி இருக்கு, இனி சூரியன் வாழ்க.. சூரியன் வாழ்கன்னு கத்தணும் போல இருக்கு..

கை3 :- இலை போட்டு சாப்டலாம்னு நெனைச்சேன், இப்படி பிச்சையெடுக்க உட்டானுவளே??

கை4 :- இனி எளைஞர்கள் ஆச்சி, எளைங்ஙர்கள் ஆச்சினு சொல்லித்தான் பாக்கலாம், கிழட்டுபயக கேட்டா தானே??

மாம்பழம் :- வடை எனக்குத்தான், வடை எனக்குத்தான். தக்காளி இனி கிடைக்கிய எல்லாத்தையும் சாப்ட்டு ஏப்பம் விட்டாதான் நிம்மதி, மது நாட்டுக்கு, வீட்டுக்கு, ஒடம்புக்கு நல்லது, நல்லது, நல்ல்ல்ல்லது.

இலை :- ம்ம்ம், இதுக்கு இத்தனை நாள் என்னை காய உடணுமா?? சரி, இனி புது அடிமைய வைச்சு பொழப்பை பாக்கவேண்டியதுதான்.

பம்பரம் :- நானும் சுத்திகிட்டுதான் இருக்கேன், என்ன செய்ய?? இலை போடமாட்டேங்றாளே?? இன்னிக்கு போடறேன்னாய்ங்க, வவுறு வேற பசிக்குது.. இனி இலங்கைல போய் சுத்தலாமான்னு பாக்கணும். ராசபக்சே விடுவானா?? தக்காளி, ஒரு காலம் வரும், நான் சூரியனுக்கு நடு மண்டையிலயே சுத்துறேன் பாரு.

அருவா, சுத்தி :- டேய் சுத்தி தூக்ன கையால இப்ப கத்தி தூக்க வைச்சுடாதீங்க, இப்ப இலை போடணும் எனக்கு..

இலை :- ம்ம், சத்தம், மூச். யாரு அங்க, இதுகள ஒரு ஹோட்டல்ல ரூம்ல போட்டு இன்னும் ரெண்டு நாளைக்கு அடைச்சி வையி.. நானே வயிரெறிஞ்சிட்டு இருக்கேன், இதுல இதுக வேற..

பம்பரம், அருவா/சுத்தி :- ச்சொம்மா, ச்சொம்மா.. நீங்க எப்ப வேணா இலை போடுங்க, நாங்க இங்கதான் இருப்போம். ஏன் டென்சன் ஆவுறிங்க??

தாமரை :- எல்லா இடமும் எல்லா நாளும் பூசை எங்களுக்குத்தான், நான் வந்து இலை போடவா??

வாக்காளர்கள் :- ஒரு முடிவுக்கு வந்து தொலைங்கய்யா?? வாங்க சீக்கிரம், எத்தனை நாளைக்கு டிவி, கேஸ்சுன்னு படம் போடுவீங்க?? புது பட ரிலீஸ் எப்ப??


அப்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- நகைச்சுவைக்காகவே, ஆட்டோலாம் வேண்டாம். சத்தியமா யாரையும்/எதையும் மனதில் வைத்து எழுதவில்லை.. நம்புங்க.

Tuesday, March 8, 2011

வெற்றிக்கூட்டணி..!


திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி துளிர்த்து விட்ட இத்தருணத்தில் கீழ் வரும் சுட்டியை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்..

கனிமொழி + ராஜா + மீரா ராடியாஇந்த மூவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது இனி தன் பொன்னான ஓட்டுகளை வழங்கி மகிழ இருக்கும் நம் வாக்காளப் பெருமக்களுக்கு மிக அவசியம் என கருதுவதால் ஒரு முகமறியா நண்பர் எழுதியதை அவரிடம் பெர்மிஷன் வாங்காமலேயே இங்கே சுட்ட வேண்டியதாகிவிட்டது..

மிகத்தெளிவாக இருக்கிறது... ஆங்கில உரையாடல்.. அப்படியே டைப் அடித்திருக்கிறார்கள்.. (இது மாறனின் உள்குத்தோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு) ஆடியோ லிங்கும் உள்ளது, அப்படியே கொஞ்சிக்கொஞ்சி பேசும் அழகை கேட்டும் ரசிக்கலாம், நேரம் இருப்போர்.

நான் முன்பு இந்த லிங்கை தேடியபோது கிடைக்கவில்லை.. நிறையபேர் என்னைப்போல் கஷ்டப்பட்டிருக்கக்கூடும், கஷ்டப்பட்டு மிஸ் பண்ணியிருக்கவும் கூடும்.. அப்படி இருந்தால் இதை படித்து நம் தலைவர்களின் லட்சணங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதை படித்துவிட்டு நேரா போயி இரட்டைஇலை, பம்பரம், கம்யூனிஸ்ட் மற்றும் விஜயகாந்த் வெற்றிக்கூட்டணி(??) க்கு உங்க பொன்னான வாக்குகளை தாரை வார்த்து விடவேண்டாம், சுயேச்சையாக இருந்தாலும் ஒரு நல்ல நபருக்கு சிந்தித்து வாக்களியுங்கள்.. அப்படி ஒரு அரசியல் மாற்றம் நம் ஊரில் நடந்தால் தான் உண்டு இப்போது இருக்கும் அரசியல்வியாதிகள் திருந்த வேண்டும் என்றால்..

சிலருக்கு சுயேச்சைகளுக்கு வாக்களித்தால் வாக்கு ஏதோ வீணாகிவிடும் என்ற ஒரு உணர்வு உண்டு(?), ஏதோ இவுங்க வாக்கெல்லாம் இது வரை சரியா பயன்படுத்தப்பட்டது போல்!

எங்கெங்கு காணினும் சுயேச்சையடா என்று இருந்தால், பயபுள்ளைகள் தலைல கைவைத்து மலங்க, மலங்க விழிப்பதையும், நடக்கப்போகும் குதிரைபேரத்தை ஒரு நிமிஷம் நினைத்துப்பார்த்து சிரித்துக்கொண்டே கீழே சென்று சுட்டுங்கள்!

ஒரு நாள் ஏதேச்சையாக தேடிய போது கூகில் அளித்த தகவல்கள் இங்கே..

கனிமொழியும், வைஷ்ணவி கார்ப் சீஃப் நீரா ராடியாவும்

ராஜாவும், நீரா ராடியாவும்

விர் சங்வியும் நீரா ராடியாவும்

இந்த லிங்குகளை வழங்கிய நண்பரின் பதிவு..

கனிமொழி + ராஜா தேடினேன், கிடைக்கலீங்கண்ணா!!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :- துபாய்க்கெல்லாம் ஆட்டோ அனுப்புவாங்கன்னு நினைக்கிறீங்க??

படம் உதவி தினமலர்.. நன்றி தினமலர்.

Monday, March 7, 2011

மனசாட்சி!!

வழக்கமாய் வேலைக்கு போவதை தவிற வெளியே செல்லாத மனோ அன்று மாதம்தோரும் தவறாமல் செய்யவேண்டிய வங்கிபணிகளுக்காக அலுப்புடன் வெளியே கிளம்பினான்.. டிவியில் இந்தியா, அயர்லாந்து மேட்ச் நடந்து கொண்டிருந்தது.. அயர்லாந்தின் மிக குறைந்த ஸ்கோரை இந்தியா சேஸ் செய்து கொண்டிருந்தது..

வெளியே சென்று வங்கி பணிகளை இன்று முடிக்காவிட்டால் தாரளமாய் லேட்பேமன்ட் கட்டணம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் என்பதால் கடுப்புடன் வெளியே கிளம்ப வேண்டிய கட்டாயம்.

நேராக சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மணி எக்ஸேஞ்ச் நோக்கி நடக்கையில் வழியில் இருந்த நைட்கிளப்பை கடக்கும் போது பழைய நினைவுகள் மனோவின் மனதில் வந்து சென்றது, ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் அந்த கிளப்பில் சர்வ் செய்த அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது!

ம்ம்ம், என்று மனதை நேராக்கி மீண்டும் யூஏயி எக்ஸ்சேஞ்ச் போய் கிரடிட் கார்டுகளுக்கான பணத்தை அடைத்துவிட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்காக அடுத்த எக்ஸ்சேஞ்ச் நோக்கி நடந்து கொண்டிருந்தான், மீண்டும் அந்த நைட்கிளப் கடக்கவேண்டிய மற்றொரு சந்தர்ப்பம். மனதில் வந்த சலனத்தை அடக்கி கொண்டு நேராக போகவேண்டிய எக்ஸ்சேஞ்ச் போய் ஊருக்கான பணத்தை அனுப்பி விட்டு திரும்பி வீட்டிற்கு நடக்கையில் மீண்டும் சலனம் எட்டிப்பார்த்தது.

வீட்டிலும் நண்பர்கள் யாரும் இல்லாததால் மனம் இந்தமுறை வெற்றிபெற்றது. வீட்டிற்கு சென்று தனியே பார்ப்பதை விட இங்கே நாலுபேரோடு சேந்துபாக்கலாமே என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தாயிற்று. மனசாட்சி மீண்டும் கொடூரமாய், அதுமட்டும் தான் காரணமா?? என்று கேட்டுமுடிக்கும் போது மனோவின் கால்கள் கிளப்புக்குள் நுழைந்து சீட் தேடிக்கொண்டிருந்தது.

ஏனோ கிளப்பில் எதிர்பார்த்த கூட்டமில்லை, நல்ல வசதியான சீட் கிடைத்தது.. டிவி முன்பே வசதியான சீட் பிடித்து அமர்ந்துகொண்டு, மனசாட்சி, அடேய் கிராதகா.. என்று அலரும்போதே சர்வர், அதேபெண்.. வந்து சிரித்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறீர்கள்?? என்பது போல் ஒரு பார்வை பார்த்தது. அவளுக்கு இவனை ஞாபகம் இல்லை.. அதுவும் நல்லதற்கே என்று நினைத்துகொண்டே ‘ஒன் பைன் ஹனிக்கேன்‘ என்றான். அங்கு எத்தனையோ வருவார்கள், செல்வார்கள்.. இவனை ஞாபகம் வைப்பதற்கு இவன் ஷேக் மகமூத் அல்லவே.

சிரித்துக்கொண்டே டிவியில் மேட்சை கவனிக்க ஆரம்பித்தான். ஹனிக்கேன் உடன் பாப்கார்ன் மற்றும் வறுகடலை அடக்கம் டேபிளுக்கு வந்தது. அந்த பெண் இன்னும் கொஞ்சம் செழிப்பாயிருந்தாள்.. சரி, நல்லாயிருக்கட்டும் என்று அங்கிருந்த அவளையும், மற்ற சர்வர்களையும் ரசித்துக்கொண்டே மேட்ச்சும் ஓடிக்கொண்டிருந்தது.

இது நடந்து கொண்டிருக்கும்போதே மண்டை காய்ந்து போயிருக்கும் உங்களுக்கு நான் இதுவரை உங்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்வதுதான் முறை..

மனோ துபாயில் வசிக்கும் ஒரு சேல்ஸ்மேன்.. சேல்ஸ்மேன் என்றாலே சம்பளம், கமிஷன் இத்யாதி, இத்யாதி எல்லாம் இருக்கும் இங்கே, அவரவர் திறமையை பொருத்து. மனோ ஒரு திறமையான சேல்ஸ்மேன், அலுவலக உதவியாளனாய் சேர்ந்து வாழ்கையின் உயரங்களுக்கு சென்றவன். ரொம்ப கட்டுப்பாடான ஜென்டில்மேன்.. நைட்கிளப் போனால் ஜென்டில்மேன் அல்ல என்று யாராவது சொன்னால், எஸ், யுவர் ஆனர், இவன் முன்பு ஜென்டில்மேன் அல்ல.
ஆனால் இப்போது சென்று இரண்டு வருடங்களுக்கு பின் இப்போதுதான் செல்வதால் ஒரு அரைகுறை குஞ்சுமோன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். மனோவிற்கு அதை பற்றி கவலையில்லை.

துபாயின் நைட்கிளப் சமாச்சாரங்கள் ரொம்ப பிரபலம், அந்த அந்த மாநில மக்களை கவர்வதற்காக அந்த அந்த மாநில மொழிகள் பேசும் பெண்களை வைத்து நைட்கிளப்புகள் மற்றும் டேன்ஸ்கிளப்புகள் இங்கே சர்வ சாதரணம். எல்லாவற்றையும் நடத்துவது 75 சதவீதம் மலையாளியாய் தானிருப்பான். இதில் ரெண்டு வகை, ஒன்று சும்மா அழகழகான பெண்கள் உங்களுக்கு வேண்டியதை அழகாய் கருத்துடன் உங்களுக்கு பரிபாருவார்கள், மது, சாப்பாடு எல்லாம்.. மனைவிகள் கூட அப்படி பரிமாரியிருக்க மாட்டார்கள், அவ்வளவு அன்பாய் கவனித்து கொள்வார்கள்.

இன்னொன்று டேன்ஸ்கிளப் என்று சொல்லப்படும், கிளப்பின் நடுவே ஒரு மேடையில் நடன அழகிகள் உங்களுக்கு பிடித்த பாட்டுகளுக்கு டேன்ஸ் ஆடுவார்கள். கிட்டே போகவோ, தொடவோ அனுமதி இல்லை.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்.. உங்களுக்கு பிடித்த பாட்டுக்கு, உங்களுக்கு பிடித்த ஆள் ஆடவைக்கலாம்.

மலையாளிக்கு தெரியும், உங்களுக்கு என்ன தேவையென்று கனகச்சிதமாய்.. அதை நேக்கா கொடுத்து காசு பார்த்துக்கொண்டிருப்பான்.. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளி பெண்கள், மற்றும் சில நார்த் இன்டியன் பெண்களும் இருப்பார்கள்.. உங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய.

மனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு தனிமரமாய் இங்குவந்து தவிக்கும் ஆண்களுக்கு இது சொர்க்கமாய் இருக்கும்.. இது குறித்து தனிபதிவே எழுதலாம் என்பதால் இங்கே விடுகிறேன், இதுபற்றி இதற்குமுன் யாராவது எழுதியிருந்தாலோ, இல்லை நீங்கள் படித்திருந்தாலோ கமென்டில் சொல்லுங்கள், எனக்கு எழுதும் வேலை மிச்சமாகும்(??)

மனோ கதைக்கு வருவோம், பாவம் பையன், திருப்தியாய் சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது என்று ரெண்டு ஆப்பமும், ஒரு சில்லி சிக்கனும் சாப்பிடலாம் கொஞ்சம் பீருடன் என்று வந்தவன், இரண்டு பைனும், ஒரு கேனும் குடித்துவிட்டு, வயிரு பெருத்து, மனசாட்சிக்கு பதில் சொல்வதற்காக, ரெண்டு ஆப்பமும் சில்லிசிக்கனும் வாங்கிவைத்துக் கொண்டு கண்ணாமுழி திருக விழித்துக்கொண்டிருந்தான். இந்தியா ஜெயித்துவிட்டது உற்சாக கைதட்டல் அதிர.

இதற்கிடையில் அந்த பெண்ணுடன் தமிழில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நெருங்கியிருந்தான்.. கடைசியில் ஒருவழியாய் பெருத்த வயிருடன் போதும், விட்டுரலாம்னு பில் கேட்கும் போது அந்த பெண் அருகில் வந்து ரொம்ப சோகமாய், எங்களுக்கு இங்கே டிப்பு மட்டும்தான்.. சம்பளம் கிடையாது என்று சொன்னாள்..

மனோ, ஏன் வேலை பாக்குற, உட்டு தொலைச்சிட்டு வேற தேடவேண்டியது தானே??

ம்ம்ம், கேன்சல் அடிக்கப்போறேன்.. ஊருக்கு போறேன் என்றாள்..

எந்த ஊரு என்று மனோ கேட்கவும், இலங்கை.. கண்டி பக்கம் என்றாள்.

ஓ.. இப்பம் எப்படி நிலைமை..

இப்ப பரவாயில்லை.

பிரபாகரனுக்கு அப்புறம் பரவாயில்லையா??

இல்லை.. அவர் இருக்கும் போது பிரச்சனையாக இருந்தது.. இப்ப அதிகம் பிரச்சனை இல்ல, ஊருக்கு போகலாம் என்றாள்.

சரி என்று சொல்லிவிட்டு மனோ 20 திர்ஹம் டிப்ஸ் கொடுத்தான், ஏதோ தமிழ் என்று சொல்கிறாளே என்று, கொடுத்துவிட்டு நடையை கட்டவும், கௌம்புறிகளா?? இனி எப்பம்??

ம்ம்ம், பாக்கலாம்..

பய பெருத்த வயிருடன், வீங்கி, வீங்கி நடக்கும் போதே அவளுக்கு தெரிந்திருக்கவேண்டும் இனி இவன் எப்போது வருவான்னு அவனுக்கே தெரியாதென்று..

மனோவிற்கு இன்னொரு முறை நேரம் கிடைத்து அந்த வழியாக செல்லநேர்ந்தால், மீண்டும் ஒன்றிரண்டு வருடத்திற்குபின் போகலாம், கிடைக்குமா?? பார்ப்போம்..

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி:- இது சத்தியமாய் துபாயில் வசிக்கும் மனோதான், அவனைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப வேண்டி, விரும்பி கேட்டதால்தான் எழுதினேன், இப்டி எழுதுவேன்னு பய நினைச்சிருக்க மாட்டான்!!

Sunday, March 6, 2011

முட்டாபசங்க சார்!!

பாத்துட்டு சும்மா சிரிங்க சார்..

விலைமதிக்கமுடியாத அறிவுச்சுடர்கள்??அன்புடன், வசந்தா நடேசன்.

Saturday, March 5, 2011

ஆணவம்..

இது என் நண்பரை பற்றிய கதை..

1972ல் நம் கோவை மாநகரில் ஒரு நாளைக்கு ரூபாய் 2.50 என்று வேலை செய்ய ஆரம்பித்து, வாழ்கையில் பல பகுதியை பார்த்து முன்னேறி வந்த ஒரு சாதாரண தமிழனின் கதை..

திறமை மட்டும் போதாது, வேலையிலிருந்த திறமையால் அந்த ஆணவம் வந்தது என்றாலும் ஆணவம் ஒரு மனிதனை எங்கு வரை கொண்டு செல்லும் என்பதற்கு இவர் வாழ்க்கையை தவிற வேறு உதாரணம் கண்டுபிடிப்பது கடினம்.

வெல்டிங் என்றால் இவர் அடிப்பதுதான் என்று அப்போதே இருந்தவர்.. இவர் வெல்டிங் என்றால் பெரிய பெரிய கம்பெனிகள் கூட ஒன்றும் சொல்லாமல் அந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளுமாம். வெறும் டிராயிங் மட்டும் கொடுத்து விட்டால்போதும், வேலை முடிந்திருக்கும்.

என்னைவிட 10 வயது அதிகம் அவருக்கு, என்றால் அவர் வயது அப்போது 16 இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை முழுவதும் வெல்டிங், வெல்டிங் என்று வாழ்க்கையை அற்பணித்தவர்.. ஒரு தேர்ந்த பிரபல வெல்டர் இன்று.

வாழ்கையின் அடிமட்டத்திலிருந்து மேலேறி வந்தவர், 1982ல் அவர் சம்பளம், ஒரு நாளைக்கு ரூபாய் 12.86 பைசா என்றால் அவருடைய உழைப்பின் வலிமை புரிகிறதா?? இளமையின் உக்கிரத்தை... வாழ்வின் வக்கிரத்தை என்னென்று சொல்ல??

இளம் ரத்தம், நம் நண்பர் அந்த காலத்தில் அந்த வேலையை (எவரெஸ்ட் இஞ்சினியரிங், கோவை) ஆணவத்துடன் தொலைத்தவர், காரணம் கேளுங்கள், அவரின் பின்னே அதே கம்பெனியில் சேர்ந்தவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12.87?? ஆனால் நிர்வாகம் இவருக்கு அதே சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டது. நம் நண்பர், கேட்டிருக்கிறார், ஏன் என்னை விட அவனுக்கு ஒரு பைசா அதிகம்?? எனக்கும் அதையே கொடு, வேலை செய்கிறேன், இல்லை வேண்டாம்.. என்று தினமும் கம்பெனிக்கு செல்வார் ஆனால் வேலை செய்ய மாட்டார், இவருடைய பஞ்சை அடித்து இவரின் ஹெல்பர்கள் வேலை செய்வர்.. பொருப்பு இவருக்குத்தான்.

அதை பார்க்கும் சூப்பர்வைசர்கள், ஏன், நீ வேலை செய்யவில்லையென இவரை கேட்கவும் முடியாது.. ஒரு கட்டத்தில் அந்த வேலையே விட்டு விட்டு வெளிநாடுகளில் வேலை செய்ய வர ஆரம்பித்து கஷ்டப்பட்டு அவரின் ஐம்பதாவது வயது வரை பல கஷ்டப்பட்டு, 50 வயதில் இங்குள்ள அரசு துரையொன்றில் வேலைக்கு சேர்ந்தவர்.. இங்கு அரசு துரையில் ஐம்பது வயதுக்கு மேலுள்ள ஒரு முஸ்லீமுக்கு வேலை கிடைப்பது கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் இருந்தால் சாத்தியம் தான், ஆனால் இவர் ஒரு ஹிந்து?? அவருக்கு வேலை கிடைத்தது அவரின் திறமையால்.. ம்ம்ம், திறமை??

திறமை மட்டுமல்ல, அவர் அவரது ஆணவத்தை விட்டொழித்து, என்னால் இனி முடியாது, உன் கருணையிருந்தால் மனது வை என்று பல வெளிநாட்டு கஷ்டங்களுக்குப்பின் கடவுளை சரணடைந்தபோது..

இன்று அவரின் 55 வது வயதில், நன்றாக இருக்கிறார்.. சொந்த வீடு, வசதி, வாழ்கை என்ற பல நிறைவேறியிருக்கின்றன.. ஆனால் இன்று அவர் நினைத்து பார்ப்பது அவர் திறமையை அல்ல.. கடவுளை.

இன்று அவர் சொல்லும் ஒரே வார்த்தை தன் திறமையை பற்றிய ஆணவம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது, அதிலும் மேலானது கடவுள் கருணை.., அதற்கு வேண்டிக்கொள்ளுங்கள், அதற்கு முயற்சி செய்யுங்கள்.. என்பது தான்.

ஏதேனும் புரிந்ததா?? இல்லையேல் இன்னொரு நாள் இன்னும் விளக்குகிறேன், நண்பர் பற்றி..

அன்புடன், வசந்தா நடேசன்.

Friday, March 4, 2011

சேம்சங் போற்றுதும்..

2009 ஏப்ரலில் ஒரு 32" எல்சிடி வாங்கினேன், இங்கே ரூமில் பார்ப்பதற்காக. எல்சிடி விலைகள் அப்போது குறைந்திருந்தது இங்கே, 1699க்கு சேம்சங். 2 வருடம் வாரண்டி என்றார்கள், மண்டைய மண்டைய ஆட்டிட்டு வாங்கி வைத்தாகிவிட்டது. அது இத்தனை நாளும் ப்ரச்னை இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

பின்னர் வீட்டுக்கு வந்த பல நண்பர்கள், சேம்சங்?? வேற வாங்கிருக்கலாமே என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள். மொபைல் பொருத்தவரை நான் எப்போதும் நோக்கியா வாங்குவதே வழக்கம், படு யூசர் ப்ரெண்லி என்பதால், ஆனால் சேம்சங் மொபைல் வாங்கி முன்பே நொந்த கதையும் கைவசம் உண்டு. சேம்சங் மாத்ரம் வாங்கிராதடா.. ன்னு அன்பாய் சொன்னவர்கள் கொஞ்சம் அதிகம் தான்.

ம்ம்ம்ம், என் போதாதவேளை, விலை மலிவாக இருக்கிறதே என்று வாங்கி தொலைத்து விட்டேன். சென்ற வருடம் வரை நல்லாத்தான் சென்றது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கருப்பு லைன் மேலே வர ஆரம்பித்தது, கொஞ்சம் இறைச்சலும் வர ஆரம்பித்தது சில நாட்களிலேயே.. ' பெப்ருவரியில் அப்படியே டிவியின் மேல்பகுதி கால்பங்கு கருப்படித்து விட்டது.

அசராமல் அதிலும் பார்த்துக்கொண்டிருந்தேன், நம் வீட்டிற்கு வரும் ஒரு நண்பர் தாங்கமுடியாமல், தூக்குங்க சர்வீஸ் குடுத்துருவம் என்று ஒரு நாள் வலுக்கட்டாயமாய் காரில் வைத்து எடுத்து சென்று சேம்சங் சர்வீஸ் செய்யும் ஈராஸ் கொண்டு கொடுத்தாகிவிட்டது, அவர்கள் சீரியல் நம்பர் பார்த்து ஏப்ரல் வரை வாரண்டி உள்ளது, பில் கொண்டு வந்தால் சர்வீஸ் இலவசம் என்றார்கள், வாங்கிய கடையில் சென்று பில் காப்பி வாங்கினாலும் போதும் கொண்டு வாருங்கள் என்றார்கள்.

வீட்டில் பில் இல்லை.. அந்த நல்ல பழக்கம்லாம் நமக்கு ஏது?? ஷராப் டி ஜி யில் கேட்டால் நாங்கள் இப்போது தான் சிஸ்டம் எல்லாம் மாற்றியிருக்கிறோம், முயற்சி செய்கிறோம் என்று முயன்றுவிட்டு சாரி என்றார்கள். சரி, 600, 700 போயிற்று என்று பில் கிடைக்கவில்லை, சர்வீஸ் செய்யுங்கள் நான் பணம் கொடுத்துவிடுகிறேன் என்றேன், வேல்டுகப் கிரிக்கெட் ஆரம்பித்து பார்க்க முடியாமல் ஸ்கோர்கார்ட் மட்டும் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.

பின்னர் சேம்சங்கிற்கும், ஈரோஸிற்கும் தினமும் போன் பண்ணி கேட்டுக்கொண்டிருந்தேன் என்ன பிரச்னை, எப்ப டிவியை கொடுப்பீங்கன்னு. நம் நல்ல நேரத்துக்கு என் டீவியில் ஏதோ தீர்க்கமுடியாத ப்ரச்னை போல்இருக்கிறது?? நான் காசு குடுக்குறண்டா, சரி பண்ணி குடுடா ன்னு பிரஷர் போடப்போட சாம்சங் பின் வாங்கிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் சேம்சங் ஒரு முடிவெடுத்து, அந்த டிவியின் இப்போதைய விலை 1300, சரி நாங்கள் அதை கொடுத்து விடுகிறோம், எங்கள் ஷோரூம் சென்று ஏதேனும் புது சேம்சங் டிவி வாங்கிக்கொள்ளுங்கள், 1300 கழித்துவிட்டு மீதி பணம் கொடுத்து வாங்கிச்செல்லுங்கள் என்றதும் ஆஹா சேம்சங் வாழ்க, சேம்சங் வாழ்க என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்று மாடல் சூஸ் பண்ணினேன், எல் ஈ டி வாங்கிரலாமா?? இல்ல 42" ப்ளாஸ்மா வாங்கிரலாமா?? ன்னு தேடிக்கொண்டிருக்கும் போதே நண்பருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்..

சேம்சங்ல திரும்பவும் மாட்டவச்சுட்டானுங்களா?? ன்னு கேட்டுட்டே, எல்ஈடீ, கில்ஈடீ?? ல்லாம் வேண்டாம், ஒரு 50 அல்லது 100 குடுத்து ஏதாச்சும் வாங்குங்க?? எல்ஈடீல்லாம் அப்பறம் வேற நல்ல ப்ரான்ட்ல வாங்கலாம் எனவும் எனக்கும் சரி எனப்பட்டது.

நான் வைத்திருந்த அதே 32", ஆனால் 4 சீரிஸ் ஒன்று 1399 என்றார்கள், அதையே செலக்ட் பண்ணி ஈரோஸிடம் சொன்னால், சரிங்க சார் வந்து 99 கொடுத்துவிட்டு எடுத்து செல்லுங்கள் என்றார்கள்.

சென்ற சனிக்கிழமை சென்று எடுத்துவந்து ஆனந்தமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன் இப்போது, டெலிவரி கொடுத்த பிலிப்பைனியிடம், கொஞ்சம் பேராசையாய், அப்பம் இன்னிலிருந்து இதுக்கு இன்னும் 2 வருஷம் வாரண்டி?? என்றேன். அவள், நோ.. நோ.. இதுக்கு ஒன் இயர் மட்டும்தான் என்றாள் கொஞ்சம் மிரண்டு.

சரி, சரி, தேங்யூ என்று எடுத்து வந்தேன். சேம்சங் வாழ்க.. கவனிக்க வேண்டியவை..

1) வாரண்டி காலம் முடிய மட்டும் பில்லை தொலைத்துவிடாதீர்கள், என் விஷயத்தில் வேறு வழியில்லாமல் கொடுத்து விட்டார்கள்.. அந்த ஸ்பேர் இப்போது அவர்களிடம் ஸ்டாக் இல்லை.. நான் காசு குடுக்குறேன், டீவி குடுன்னு ப்ரஷர் போட்டதால்.. சரி போய்தொலை என்று கொடுத்து விட்டார்கள், அந்த ஸ்பேர் இருந்திருந்தால், 800 குடுக்குறியா, சரி பண்றேன் என்றிருப்பார்கள்.. டிவி விலையே இப்போது 1300 தான்.

2) ஒரு பொருள் வாங்கியதும் அந்த பில்லை ஸ்கேன் பண்ணி உங்கள் ஈமெயிலில் ஒரு நியூ போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள், அது பிற்காலத்தில் உதவக்கூடும். எப்போதும், எல்லோரும் நல்லவனா இருக்கமாட்டாய்ங்கன்னா!!

வாழ்க்கை என்பதே படிப்பினை தானே!!

அன்புடன், வசந்தா நடேசன்.

Thursday, March 3, 2011

பாகிஸ்தான் புலம்பல்

பாகிஸ்தான் மற்றும் கனடாவுக்குமான மேட்சை பார்க்கிறீர்களா?? இப்போது?? உடனே பாருங்கள். பாக் இப்போது முதலில் மட்டையடித்து(இதெல்லாம் ரொம்ப ஓவரோ??)140/4.. அடப்பாவிகளா?? அதுக்குள்ள 140/5!! ம்ம்ம்.

நான் சொல்ல வந்தது விளையாடிக்கொண்டிருந்த மிஸ்பா மற்றும் அக்மல் இருவரும் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு ஆடுவது போல் இருந்தது.. போல் என்ன? புலம்பிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்கள்..

என்ன புலம்பியிருப்பார்கள்??

1) கனடாகார பயபுள்ளைங்க எப்டி போடுறானுக பார்றா??
2) இந்த இந்தியாகாரனுகளை கனடா டீம்ல ஏண்டா எடுத்தீங்க??
3) நேற்று அயர்லாண்ட் இங்லாண்டை போட்டது போல் இன்னைக்கி நம்மள போட்டுருவானுகளோ?

நீங்களும் புலம்பலாம்??

அன்புடன், வசந்தா நடேசன்..

டீம் வொர்க் [2]

டீம் வொர்க் என்று ஆரம்பிக்கும் போது இதை தொடராக எழுதும் உத்தேசம் இல்லை.. சும்மா ஒரு சுயசொறிதல் பாணியில் ஆரம்பித்ததுதான், ஆனால் கடைசியில் அதில் எனக்கு கொஞ்சம் அதிகம் சொல்லஇருப்பது போல் தோன்றி தொலைத்து விட்டது.. நல்லதுக்கா, கெட்டதுக்கா?? தெரியாது. ம்ம்ம்.

துபாயில் உள்ள ஒரு சிறு வெற்றிகரமான நிறுவனத்தின் ஒரு சிறு அங்கம் என்பதை தவிர வேறு தகுதிகள் ஏதும் எனக்கில்லை! ஊரில் சில பல தொழில்கள் செய்ததுண்டு, அங்குள்ள நடைமுறைகளுக்கும் இங்குள்ள நடைமுறைகளுக்குமுள்ள சில வியாபார வித்தியாசங்கள் மனதில் உருத்தியதால், சரி சொல்லி வைப்போம், யாருக்காவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்ற நினைப்பில் மட்டுமே தொடருகிறேன்..

டீம் வொர்க்கின் வெற்றி என்பது புது விஷயமல்ல, இப்போது நம் தேசத்திலும் கண்கூடு, இருந்தாலும் அந்த நிலை சில அல்லது பல பெரிய நிறுவனங்களில் மட்டுமே தான் இருக்கிறது. பல சிறு நிறுவனங்கள் இப்போதும் அதைப்பற்றி நினைப்பதில்லை என்பது ஒரு குறைதான். இந்த ஒரு சின்ன விஷயம் கோயிங்கன்சேர்ன் என்ற நிலையிலிருந்து எங்களை எப்படி மீட்டுவந்தது என்பதுதான் கதை.

ஆடிட்டிங் தொடர்புடையவர்கள் முன்பே இந்த வார்த்தை பதத்தை கேட்டிருக்கக் கூடும், கோயிங்கன்சேன் என்றால் கம்பெனி முடிஞ்சி போச்சி என்று அர்த்தம், அதாவது தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என்பது போல், நஷ்ட்டம் அதிகம் ஆகிவிட்டது ஆனாலும் ஓனர் நினைத்தால் தொடரலாம் என்பது போல் எங்கள் நிறுவனத்தின் அப்போதைய ஆடிட்டர்கள் கே.பி.எம்.ஜி ஒரு ரிப்போர்ட் கொடுத்தார்கள் நான் சேர்ந்து ஒரு 3 மாதத்தில் கொடுத்த ஆடிட் ரிப்போர்ட் அது.

அப்படி ஒரு ரிப்போர்ட்டை ஏன் கொடுத்தார்கள், அதை ஏன் ஓனர் சம்மதித்தார் என்பதெல்லாம் பெரிய கதை.. உங்களுக்கு தேவையும் இல்லை.. முடிந்தால் இன்னொருநான் அதையும் எழுதுகிறேன்.

சுருக்கமாய் சொல்வதென்றால், எங்கள் கம்பெனி ஐரோப்பாவிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மிடில் ஈஸ்ட் அங்கமாக இருந்தது அப்போது, அவர்கள் அங்கே தயாரிக்கும் பொருள்கள் மற்றும் சில சேம் லைன் புராடக்ட்களை மிடில் ஈஸ்ட்டில் மார்க்கெட்டிங் செய்வது. ஐரோப்பாவிலுள்ள ஒரு மல்டி மில்லினேயரின் சிறு துளி வடிவம் எங்கள் அப்போதைய கம்பெனி.. அங்குள்ள பெருங்குழுமத்தை ஒருநாள் அவர்கள் விற்றுவிடுவது என்று முடிவெடுத்தபோது இந்த மிடில் ஈஸ்ட் சிறு துளியை மட்டும் இப்போதைய முதலாளி விலைக்கு வாங்கிக்கொண்டு இங்கு வந்துவிட்டான். ஐரோப்பாவில் மைனஸ் நாலு டிகிரியில் நடுங்கும் ஐரோப்பியர்கள் சந்தோஷமாக இங்கே வருவார்கள் என்றாலும் இவர் வந்தது நாங்கள் விற்ற பொருட்களின் மேலிருந்த நம்பிக்கை மற்றும் இந்த பகுதியை பற்றி முன்பே அறிந்திருந்ததால்.

சொல்லப்போனால் இதை ஒரு லக்கி சான்ஸ் என்றுதான் சொல்லவேண்டும், பெருங்குழுமம் இதைவைத்து என்னசெய்வது என்று நினைக்கையில் அங்கே இருந்த ஒருவர் இதை வந்த விலைக்கு சல்லிசாய் வாங்கிக்கொள்வது எல்லோருக்கும் எப்போதும் அமையாது..

இங்கே வந்தது முதல் நிர்வாகமே மாறியது.. அப்போது ஒரு இந்தியனின் நிர்வாகத்தில் இருந்தது, அப்படியே தலைகீழ் மாற்றம் நான் சேர்ந்த ஆறாவது மாதத்தில்..

முதலில் இங்கே என்னை மலைக்க வைத்தது எல்லோரையும் அழைத்து மீட்டிங், மீட்டிங் என்று அடிக்கடி காய்ச்சுவது. கம்பெனியில் இருந்த எல்லோரையும் அழைத்து வாரம் ஒருமுறை ஒரு மீட்டிங் இருக்கும், நான் கணக்கு மற்றும் நிர்வாகத்தில் இருந்ததால் எனக்கு தினமும் மீட்டிங் இருக்கும். டீம் ஒர்க்கின் தொடக்கம் அங்குதான் ஆரம்பம்.

மீட்டிங்கில் பேசுவது அனேகமாய் ஒரே விஷயங்கள், சென்ற வாரம் என்னென்ன செய்தாய்? எவ்வளவு செய்தாய், வரும் வாரம் என்னென்ன செய்யப்போகிறாய், அதற்க்கு என்னென்ன வேண்டும். ஒரே விஷயமாய் இருந்தாலும் வாராவாரம் இது வேறு வேறு ரகமாய் இருக்கும். நாங்கள் அப்போது இந்த மீட்டிங்கிற்கு தேர்ந்தெடுத்தது ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள நிறுவனங்களின் வாரத்தின் முதல் நாள் அது.

நான் மீட்டிங்கிற்கு முன் அதற்கான எல்லாம் ரெடி பண்ண வேண்டும். என்னென்ன செய்தார்கள், யார் யார் செய்தார்கள், அவரவர் டார்கெட் என்ன? இன்னும் மீதி என்ன? இப்படி எல்லாம் என் கையிலோ அல்லது தலையிலோ ரெடியாய் இருக்கவேண்டும்.

டார்கெட் என்றால் என்ன? அது சிறு நிறுவனங்களுக்கும் அவசியமா?? பி.இ.பி?? இவை எல்லாம் இன்னொரு நாளில்.

அன்புடன், வசந்தா நடேசன்.

Wednesday, March 2, 2011

தோசையுடன் முட்டைகறி..

இன்னைக்கி வைச்ச தலைப்பே வேற, இது மேட்ச் இல்லையே என்பவர்கள் என்ன நடந்தது என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னை கேட்டால் சமைப்பது தான் உலகில் மிக கஷ்டமான வேலை என்பேன், நம் ஊர் பெண்களை இதற்க்காகவாவது கொஞ்சம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே கொஞ்சம் பயந்து மதிப்பது போல் நடிக்கிறோம் தான், நான் சொல்வது என் நெஞ்சை தொட்டு.. (என்னா வில்லத்தனம்??) அஞ்சாமல், அசராமல் தினமும் இதை ஒரு கடமையாக செய்கிறார்கள் பாருங்கள், சல்யூட்!

சரி, இனி நம்ம கதை. தலைப்பை பார்த்தாலே இது எப்படி சரி வரும் என்று சிலருக்கு தோன்றலாம், நீங்களே சமைத்து நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. தக்காளி, இதன் அருமை புரியும்.

தனிமை கிடைத்ததும் கொஞ்சம் கெத்தாய் நான் எங்கே சமைப்பது, நமக்கு எவ்ளோவ் வேலை?? தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு?? இட்லி, தோசை, பூரி என்று அடுக்கும் போதே ஒரு வெருப்பு எட்டிப்பார்க்கும், என்ன கண்றாவிடா இதென்று.. மறுபக்கம், பிஸ்ஸா, பர்கர் என்று ஒரே நாளில் முகத்தில் அடித்தது..

எனக்கு சமையல் பண்ண தெரியும் இருந்தாலும் சமைக்காமலிருந்தேன் கொழுப்பெடுத்துப் போய்தான், நண்பர்கள் செய்வார்கள், சமீப காலமாய் நான் அப்படியே நோகாமல் நோம்பு கும்பிட்டுக் கொண்டு இருந்து தொலைத்துவிட்டேன், அதுவும் கம்ப்யூட்டர் வாங்கியதும் கொஞ்சம் தெம்பு அதிகம் ஆகிவிட்டது, முன்பு பொழுதுபோக்கிற்காவது சமையல் செய்தது போய்.

இப்போது யாரும் இல்லாத நிலையில், ஒருநாள் காலை அலுவல் பிரஷரில் கிட்டத்தட்ட மயக்கம் வரும்போல் இருந்ததால், சரி இது சரிப்படாது மக்ளே ன்னு முந்தாநாள்ல இருந்து மீண்டும் ஆரம்பம், சரி நம்ம வரலாற்றை கொஞ்சம் சொல்லிவைப்போம்னு தான் இன்று இவ்வளவும்.

முதல் நாள் சப்பாத்தியும் உருளைகறியும், பிரமாதம் போங்கள். சொந்த சமையலின் மகிமை இதுதான், நமக்கு பிடித்தது, நாம் நினைக்கும் போது, முழுமையாய் ரசித்து சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை பண்ணும் போதும் இரண்டுநாள் பத்து எண்ணம் வரும்படி செய்துகொள்வது என் வழக்கம். முதல் நாள் ஐந்து, மூன்று இரவுக்கு, இரண்டு அடுத்த நாள் ப்ரேக் ஃபாஸ்ட். அடுத்த நாள் அதே மாவை பிர்ட்ஜில் வைத்து மீண்டும் ஐந்து முந்தைய நாளில் மீதம் வைத்த இதே கறியுடன். மதியம் பாரிக் செட் ஒருநாள், இன்னொருநாள் சரவணபவன் மினி சாப்பாடு.

இன்று மூன்றாவது நாள், என்ன செய்வது என்று யோசிக்கையில் அன்னபூர்ணா இடியாப்பம் தான் முதலில் நினைவில் வந்தது. சட்னி வைக்க படிக்காமல் இருந்து தொலைத்துவிட்டேன், ரொம்ப ஈஸி, ஆனால் முதலில் இரண்டு, மூன்று முறை முயன்று என் மனைவி வைத்த டேஸ்ட் வராததால் நான் விட்டு விட்டேன், அறை நண்பன் ரொம்ப டேஸ்ட்டா வைப்பான்.. சரி என்று நான் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.

இன்று இடியாப்பம், ஆஹா சட்னி?? ஆபத்பாந்தவனாய் மாலை உடன் வந்த தஞ்சை நண்பன் முட்டைகறியை ஞாபகப்படுத்தினான்.. இடியாப்பம், முட்டை கறி ஆஹா சூப்பர்னு வந்து சேந்து பண்ணுன ஒரே தப்பு கடைக்கு போகாமல் அப்படியே டிவியில் இங்கிலாண்ட்/அயர்லாந்து பார்த்துக்கொண்டு இருந்தது தான். என்ன நடந்தது ஏன் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும், அயர்லாந்து ஜெயித்தது, தக்காளி, இந்தியாவுக்கு டை போட்டிங்கல்ல, அனுபவிங்கடான்னு சந்தோஷம் தாங்கலை.

பின்னர் போய் இடியாப்பம் தேடினால் மதினாவில் ‘எல்லாம் விற்றண்ணா, இனி நாள..‘ என்றார்கள், ஆஹா, என்று அப்படியே அருகில் பார்த்தேன், சிவ்ஸ்டார் தோசை மாவு?? சரி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இன்னைக்கி தோசையுடன் முட்டைகறி.

நாளை வீக் எண்ட், நண்பர்கள் வந்து கவனித்துக்கொள்வார்கள், கவலையில்லை.. ம்ம்ம், முடிந்த வரை சமாளிப்போம்!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :-பதிவின் நீளம் கருதி செய்முறை தவிர்த்துள்ளேன், வேண்டுமென்றால் பேச்சிலர் நண்பர்ளுக்கு உதவுவதற்க்காக நான் அதை இன்னொருபதிவில் விளக்க ரெடி.

Tuesday, March 1, 2011

காளீஸ்வரன் கதை.. [3]

திறமைகள் வாய்த்த காளீஸ்வரனுக்கும் கஷ்ட காலம் வந்தது.. வெளிநாடுகளை பொருத்தவரை, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத்தூக்கலாம், எந்த கம்பெனியை எப்போது வேண்டுமானாலும் மூடலாம், அவை அந்த அந்த முதலாளியின் மூடை பொருத்தது. அதுவும் அரபு நாடுகளில் இதுபோன்ற தருணங்கள் அதிகம் வரும். நல்ல நடக்கும் கம்பெனிகளில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வசதி மற்றும் வாய்ப்பு.

காளீஸ்வரன் திறமை உள்ளவன் தான், அவனுக்கு ஏன் என்ற கேள்வி வரலாம். அவன் வேலை பார்த்த நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிடுவது என்று அதன் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். ஏன், எதற்க்கு என்பதை அவனால் விளக்க முடியவில்லை.. பொதுவாய் இந்த நிலை எப்படி வரும் என்பதை நான் பார்த்த, கேள்விப்பட்ட வரை சொல்லிவிடுகிறேன்.

லோக்கல் நபர்களுடன் (ஹபிபிகள்) சேர்ந்தே இங்கே வெளிநாட்டவர்கள் தொழில் தொடங்கமுடியும். அவர்களுக்கு முதலீடு ஏதும் இல்லாமல் 51 சதவீதம் லாபத்தில் பங்கு, வெளிநாட்டவருக்கு 49 சதவீதம் தான். லாபத்தை கணக்கு பார்த்து யாரும் கொடுப்பது இல்லை, மாதம்தோரும் ஸ்பான்சர் பீஸ் என்று குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுவார்கள், பிடி, ஒழி என்று. இல்லையேல் ஃபிரீ சோன் என்று சொல்லப்படுவதில் ஸ்பான்சர் இல்லாமல் தொடங்கலாம், ஆனால் அங்கே எல்லாவற்றிர்க்கும் கட்டணம் அதிகம் (துபாயை பொருத்தவரை).

ஸ்பான்சர் நல்ல அமவுன்ட் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை நடத்தவும் அனுமதி கொடுத்துவிடுவான், கம்பெனியை நிர்வகித்து நடத்துபவனிடம். ஆனாலும் அந்த ஹபிபி தான் அந்த நிறுவனத்துக்கு முழுப்பொருப்பு, அவன் கையெழுத்து இல்லாமல் புது விசா, லைசன்ஸ் ரினீவல் ஏதும் செய்யமுடியாது. அதற்க்கு அரசாங்கத்துக்கு மேலும் பணம் கொடுத்து பெர்மிஷன் வாங்கவேண்டும். நிறைய பேர் இதை செய்வதில்லை..

நடத்தும் நம் நபர்கள் (முக்கியமாய் மலையாளிகள்) முடிந்த வரை லாபம் பார்ப்பார்கள், ஒரு நிலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடி விடுவார்கள், அவர்களை தேடிப்பிடிப்பது முடியாத காரியம், அவர்கள் இந்த கம்பெனியை வைத்து இன்னும் இரண்டு, மூன்று ஜென்மத்திற்கு சம்பாதித்திருப்பார்கள், பின் அநியாயமாய் நடையைக்கட்டிவிடுவார்கள்.. எல்லா நேஷனாலிட்டியும் இதில் அடக்கம், இருந்தாலும் நம்ம மலையாளிக்கு இதில் திறமை அதிகம் என்பதை இங்கே கண்கூடாக பார்க்கலாம். அரபி ஒதுங்கி விடுவான், எல்லாம் அவன் தான் பொருப்பு என்றாலும், அந்த பருப்பெல்லாம் இங்கே வேகாது, அவர்கள் நாடு இது, இங்கே சட்டங்களும் முதலாளிகளை சார்ந்தே இருக்கும்.

ஓனர் சமயத்தில் அப்பாவியாக இருப்பான், ஆனால் முக்கியமான தருணத்தில் கையில் சிக்கும் பெரும் பணத்தை ஆட்டைய போட்டுக்கொண்டு அதில் வேலைபார்க்கும் நபரே ஓடிவிடுவான், மன்னிக்கவும் இதிலும் மலையாளியின் திறமையை யாரும் மிஞ்சியதாய் தெரியவில்லை.. ஸ்பான்சரும், முதலாளியும் மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருப்பார்கள் என்ன செய்வது என்று, சில அரபிகளே இதில் ஆடிப்போனது உண்டு, அதனால் தான் இங்கு சட்டங்களும் பெரும்பாலும் அவர்கள் சார்ந்து இருக்கும். கம்பெனியே தடுமாறிவிடும் அளவுக்கு பெரும்பணம் என்றால், கம்பெனி திவாலாவதை தவிர வேறு வழி கிடையாது. வேலைபார்த்தவனுக்கு கிடைக்க வேண்டிய சேமிப்பு, Gratuity எல்லாம் கோவிந்தா தான்.

அடிப்படை தொளிலாளர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது, நாளை சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று மூடிய கதவுகளை தினம் சென்று பார்த்து வருவார்கள்.

இது போன்ற நிலைமைகளில் அந்த அரபியும், ஓனரும் தொழிலாளர்களின் நிலைமையை மனதில் வைத்து, அந்த கம்பெனியில் அதற்க்குமுன் சம்பாதித்த பணத்தை கணக்கு வைத்து, சரி ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்து தருகிறேன், செல்கிறாயா என்பார்கள், ஏனென்றால் பிளாக் மார்க் ஆகிவிட்டால் அந்த ஸ்பான்சர் நடத்தும் பிற நிறுவனங்களுக்கும் பல சிக்கல்கள் வந்துவிடும். சிலர் சில சொற்பத்தொகையையும் கொடுப்பார்கள், தொழிலாளர்களின் திறமை மற்றும் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு.

அதுபோல் ஒரு நிலை காளீஸ்வரனுக்கு வந்து தொலைத்தது.. இதில் காளீஸ்வரன் என்ன முடிவெடுத்தான், அதன் பின் என்ன நடந்தது என்பது இன்னொரு நாள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [2]

இலங்கை குறித்து...

ஒரு சென்சிட்டிவ் பதிவு..

சென்ற வாரத்திலேயே எழுதிவைத்ததை, ஆலோசித்துகொண்டிருந்தேன், வேண்டுமா வேண்டாமா என்று, இருந்தும் என் நிலை இதுதான் என்பதால் துணிந்துவிட்டேன்.

என்னை நிறைய அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போகக்கூடும்.. இதை படித்தால்.. நான் அவர்களுக்கு என்னை பிடிக்கவேண்டும் என்று எழுதவும் வரவில்லை.. என்னைப்பொருத்தவரை எனக்கும், என் தாய்நாட்டுக்கும், என் சகோதர, சகோதரிகளுக்கும் உண்டான நியாயங்களும், தர்மங்களும் மட்டுமே முக்கியம். நான் குறிப்பிடப்போவது இலங்கை தமிழர்கள் குறித்த என் நிலை பற்றி மட்டுமே. பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஒரு சொல் உண்டு நம் தமிழ் மரபிடையே.. இது அதுபோல் ஒரு மணி கட்டும் முயற்சி தான்.. இது குறித்து நிறைய விவாதங்கள், விஷயங்கள் இருந்தாலும் இந்த பார்வை நம்மில் குறைவே.

தமிழ், தமிழர்கள் நிலை என்பது அப்போதைக்கப்போதைய காலம் சார்ந்து இருக்கவேண்டும் என்பது என் கனவு. இன்னும் நாம் அந்த கால அரசவம்ச வாழ்க்கை போலவோ அல்லது வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலம் போலவோ இல்லை.. உலகம் மாறியிருக்கிறது. மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். நம் எண்ணங்களையும் நாம் காலத்திற்க்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும்.

கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய் என்ற பழைய மூன்று பொம்மை கதையும் மனதில் வராமலில்லை.

ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன் படையெடுத்து சென்றான், இலங்கையை கைப்பற்றினான் (கவனிக்கவும்), மலேஷியாவைக் கைபற்றினான்.. என்று பல உண்மைகள்/கதைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன.. என்னைப்பொருத்தவரை இது என்ன என்ன காலத்தில் நடந்தது, எப்படி நடந்தது என்பது தெரியாது.. நானும் உங்களைப்போல் கண்ணால் கண்டது இல்லை.. எல்லாம் யாராலோ, அல்லது எங்கேயோ எழுதிவைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

கடவுள் குறித்து எழுதிய பலவற்றையும் இப்போது கொஞ்சம் மறுத்து மற்ற நிலைகளில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் காலம் இது. ஆனால் இலங்கை தமிழர்களை நம் அரசியல் வாதிகள் இன்னும் விடுவதாய் இல்லை, என்ன செய்வது காலத்தின் கோலம்.

எழுத்து என்பது எழுதுபவன் கைபொம்மை. அதை எழுதியவனே அதில் நிபுணன்.. ஒத்துக்கொள்ள முடிகிறதா?? இல்லையென்றால் வேறு பதிவிற்க்கு இப்போதே சென்றுவிடுங்கள், யாரையும் காயப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல..

ஒரு வேளை உங்களை என் எழுத்து காயப்படுத்தக்கூடும், இருந்தாலும் இது என் அளவிலான நியாயங்களை சொல்லும் ஒரு முயற்சி தான், நாளை நானே இதிலிருந்து வேறுபடக்கூடும், ஒருவேளை நான் உறுதியாக நம்பினால் மட்டும்..

என்னைப்பொருத்தவரை இலங்கைத்தமிழர்களுக்கான ஒரே நிரந்தர தீர்வு (யாருடா இப்ப தீர்வு கேட்டாங்கன்னு சொல்லாதீங்க, நம் மீனவர் பிரச்னை, வரும் தமிழக தேர்தலை கலக்கப்போகும் இப்போதைய தலைபோகும் ப்ரச்னை எல்லாம் இதுதான் என்று நினைக்கிறேன்), அவர்களை தாய்தமிழகத்திற்க்கு மறுகுடியேற்றம் செய்வதுதான். தமிழர்களே அங்கே வாழ முடியவில்லையா?? இங்கே எங்களுடன் தமிழகம் வந்துவிடுங்கள்.. அவர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தந்து இங்குள்ள சக தமிழனுக்கு என்ன என்ன உரிமைகள் உண்டோ அதை அத்தனையும் பெற்றுத்தர தமிழர்கள் போராடவேண்டும்.. இதுவே அவர்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும்.

எப்படி இருந்தாலும் தமிழர்கள் பிற நாடுகளுக்கு பிழைக்க சென்றவர்கள் தான் என்பதை முதலில் நினைவில் கொள்ளவேண்டும்.. பிழைக்கமுடியவில்லையா, திரும்பி வந்து விடுங்கள் தாய்நாட்டுக்கு. ஏன் அடம் பிடிச்ச கழுதையாய் அங்கிருந்து செத்து மடிகிறீர்கள்?? நம் தமிழினம் நம் தமிழர்களுக்கு இந்த உரிமையை பெற்றுக்கொடுக்க போராடினால் நான் மகிழ்ச்சியடைவேன். நம்மைப்போல் அவர்களுக்கும் வாக்குரிமை, முக்கியமாக நீ இலங்கை தமிழன், நீ மலேசிய தமிழன் என்று பாகுபாடு பார்க்காமல் அவர்களுக்கு இந்த உரிமையை வழங்க, அவர்களுக்காக போராட எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ரெடி இப்போது?? எனக்கு பரிபூர்ண சம்மதம். உங்களுக்கு, உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

ஆனால் இதில் முக்கியமானது, இதற்க்கு பெரும்பாலான இலங்கை/மலேஷிய தமிழர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் நாடு இலங்கை அல்லது மலேஷியா?? சாதாரண கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், இந்தியாவும் இலங்கையும் ஆடுகிறது, ஒரு இலங்கை தமிழன் யாருக்கு சப்போர்ட் பண்ணுவான் என்று நினைக்கிறீர்கள்?? கண்ணால் இதற்க்கு முன் இதை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். அவர்களுக்கு அவர்கள் நாடு தான் பெரிது. இதை நான் குறை சொல்லவில்லை.. அவரவர்க்கு அவரவர் நாடு பெரிது.

சமீபத்திய பிரச்னைகளில் கூட, இலங்கை தமிழர்கள், அங்கிருந்து தவித்தபோது, மனிதாபிமானம் கொண்டு நாம் உதவிட நினைத்தது சரிதான், ஆனால் இதை நம்மவர்கள் அரசியலாக்கி அவரவர் அவரவர் வசதிக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்றோ எதையோ சொன்னவர்கள் நேற்று மாற்றிச்சொன்னார்கள், நேற்று அப்படி சொன்னவர்கள் நாளை யார் ஆளுங்கட்சி, யார் எதிர்கட்சி என்பது பொருத்து மாறிக்கொண்டிருப்பார்கள், நாமும் அதனுடன் தலையாட்டிக்கொண்டிருப்போம், அது தான் நடந்து வருகிறது.

அதனால் ஏன் தமிழ்நாட்டு தமிழர்களே, நீங்கள் ஏன் தவிக்கிறீர்கள்? மனிதாபிமானம், எனக்கும் இருக்கிறது, அதனால் தான், தமிழர்களே வாருங்கள் என சொல்லவேண்டும் என்கிறேன். இன்று அகதிகளாய் வந்து நம் மண்ணில் கஷ்டப்படும் சகோதரர்களுக்காக எத்தனை பேர் நம் நாட்டில் போராடியிருக்கிறார்கள்? அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் எத்தனையோ சினிமா எடுத்து நம் தமிழ் மக்கள் காசு சம்பாதித்துவிட்டார்கள் என்பேன் என்னைக்கேட்டால்??

மக்களே சிந்தியுங்கள், மாக்களாக இருக்காதீர்கள் என்று இன்னொரு பெரியாராகும் நினைப்பல்ல
எனக்கு.. காலத்திற்க்கு தகுந்தபடி நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் நிலை..

இது குறித்து நான் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழ் முஸ்லீம்கள், கொழும்பு தமிழர்கள்(??) என்று பலரிடம் பேசியதுண்டு. எனக்கு தெரிந்து நல்ல தமிழ்பெயர் கொண்ட ஒரு கொழும்பு தமிழர் தன்னை தமிழர் என்றே கூறிக்கொள்ளமாட்டார், ஏன் என்று நானும் கேட்டிருக்கிறேன், அதற்க்கு அவர் அம்மா ஒரு மலையாளியாம், அவருடே நாடு கேரளமாம். எப்படி கதை??

இவர்கள் நாம் சென்று அழைத்தாலும் வரப்போவதில்லை.. வரநினைப்பவர்கள் எல்லாம் ஒருவேளை அங்கிருக்கும் ஏழைத்தமிழர்கள் தான், அவர்களும் முழுமனதுடன் வருவார்களா என்பது இன்றும் கேள்விக்குறி தான், ஏனென்றால் நாடு அமைதியாகி விட்டால் கஷ்ட்டமோ, நஷ்ட்டமோ.. அவர்கள் அங்கு வாழ்வதையே விரும்புவதாகக்தான் நான் பேசியவரை எனக்கு தோன்றுகிறது.

இலங்கை அமைதியாகிவிட்டால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதை இன்னொரு சிங்கப்பூர் அளவுக்கு கொண்டு செல்லமுடியும் (அங்கு ஒரு நல்ல அரசியல்வாதி வந்தால்) என்ற நிலையில் தமிழர்கள் வரமாட்டார்கள் என்பது இன்னொரு நிலை.. சொல்லப்போனால் இலங்கையை இந்த கதிக்கு ஆக்கியதே நம் அரசியல் வாதிகள் தான். இலங்கை முன்னேறக்கூடாது என்பதற்க்காக.

அது சின்ன நாடு, ஏற்றுமதி, இறக்குமதி என்று ஆரம்பித்துவிட்டால் இந்தியாவில்/குறிப்பாய் தமிழகத்தில் நம் சிறுவியாபாரிகள் முதல்கொண்டு பல குறு நிறுவனங்கள் வரை போட்டுத்தாக்கி விடும் வல்லமை அவர்களுக்கு இருந்தது(ஏர்செல் மற்றும் ஸ்டெர்லிங்/சிவா கம்ப்யூட்ர்ஸ் தொடங்கியது யாருன்னு உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்), இப்போதும் உள்ளது. ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து துணிகள் மற்றும் பிற எலக்ட்ராணிக் சாதனங்கள் என்று எத்தனையோ இந்தியாவிற்க்கு வந்து இங்கு விற்க்கப்பட்டது இன்னும் என் நினைவில் உள்ளது. அங்கிருந்து இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தவர்களையும் எனக்குத் தெரியும்.

கொழும்பு கோடீசுவரர்கள் அமைதிக்காக அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்ப புரிகிறதா நம்ம பயபுள்ளைகள் எதற்க்கு இலங்கையை போட்டுத்தாக்கினார்கள் என்பது??

அனேகமாய் பொறாமைப்பட்டே இலங்கையில் அமைதியைக்காக்கிறேன் பேர்வழி என்று இந்தியா ஓரளவுக்கு உதவுவது போன்ற தோற்றத்தில் செய்த உதவிகளே இன்றைய இலங்கை நிலைக்கு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. மனிதர்களே திருந்துங்கள், மனதை திருத்துங்கள் என்று சொல்லமுயன்றுள்ளேன். நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.