Wednesday, March 16, 2011

காளீஸ்வரன் கதை.. [4]

ஒரு நாள் அலுவல் முடிந்து அறைக்கு வந்தபோது காளீஸ்வரன் படு சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கேட்டபோது வேலை போய்விட்டதாகவும், டிக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு வாரத்தில் ஊருக்கு போக ரெடியாகுமாறு கம்பெனியில் சொல்லிவிட்டதாக சொன்னான்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. அது நான் வந்து ஒரு 6 மாதம் ஆன புதிது.. இங்குள்ள நடைமுறைகள் அப்போது நிறைய தெரிந்திருக்கவில்லை. பின்னர் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். காளீஸ்வரன் வந்து ஒரு இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் ஆகியிருக்கும். இது வரை ஊருக்கு போகவில்லை, ஊர் விட்டு வந்ததிலிருந்து. வீட்டிற்கு மூத்த பிள்ளை. ஒரு முறையோ இரண்டு முறையோ ஊர் போகும் பிறரிடம் அவனுடைய தங்கைக்கும், தம்பிக்கும், அப்பா, அம்மாவிற்கும் கொஞ்சம் நகைகளும், வாட்ச், ஸ்ப்ரே போன்ற சமாச்சாரங்களும் கொஞ்சம் சாக்லேட்களும் அவ்வப்போது கொஞ்சம் பணமும் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறான்.

நிறைய யோசித்து ‘கல்லிவல்லி‘ ஆகி விடுவது என்று முடிவெடுத்தான். கல்லிவல்லி அல்லது கல்லிவெல்லி என்றால் இங்கு தங்கி வேலை பார்ப்பதற்கான விசா எதுவும் இல்லாமல் என்ன வேலை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இது போல் தங்கி இருப்பவர்களை கல்லிவெல்லிகள் என்பார்கள்.

நம் ஊரில் காந்தி பிறந்த நாள் மற்றும் அண்ணா பிறந்த நாள் போன்ற சமயங்களில் சிறைகளில் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து அனுப்புவது போல் இங்கும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாப்பு என்று ஒன்று கொடுப்பார்கள் அப்போது இந்தியா செல்லலாம் சிறைக்கு போகாமல். நடுவில் மாட்டிக்கொண்டால் சிறை தண்டனை, தண்டனை முடிந்து யாராவது நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்தால் சிறையிலிருந்து நேரே ஏர்போர்ட் கொண்டு ப்ளைட் ஏற்றி அனுப்பி விடுவார்கள். தண்டனையை வேண்டும் என்றே அதிகம் விளக்காமல் விட்டிருக்கிறேன் ம்ம்ம், அதெல்லாம் வேண்டாம் இங்கு.

பொதுமாப்பிற்கு காத்திருக்க வேண்டும்.. காளீஸ்வரன் இந்த நிலைக்கு துணிவாக முடிவெடுத்ததற்கு தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம், வீட்டுக்கடன் என்று ஏதாவது இருக்கும், அது ஏழை இந்தியர்களின் சோகம். அங்கு எல்லோரும் ஒன்றும் ராசா அல்லவே.

பின்னர் ஒருநாள் அவன் அலுவலகம் சென்று கிடைக்கவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்து விமான நிலையம் அழைத்துப்போய் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து எக்ஸிட் ஆகிறானா என்று பி.ஆர்.ஓ கவனித்துக்கொண்டிருக்கும் போது அவன் கண்ணைத்தப்பி வெளியே வந்து விட்டான், இது எல்லாம் நம் மக்களுக்கு சர்வ சாதாரணம். பி.ஆர்.ஓ கண்ணில் காணாத உடன் சரி பயபுள்ளை உள்ள போயிடிச்சி என்று போய் விடுவான்.

இப்படி ஆள் வெளியேறாமல் உள்தங்கிவிட்டால் ஸ்பான்சர் பாடு திண்டாட்டம், அதை விளக்கி அவன் புகைப்படத்துடன் ‘காணவில்லை‘ என்று இங்குள்ள ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முடித்து விட்டு அவன் வேலையை பார்ப்பான்.

காளீஸ்வரன் இப்படி கல்லிவெல்லியாய் வேலையை தொடங்கினான், முன்பு சொன்னது போல் இவனுக்கு திறமை இருந்ததால் எங்கும் வேலை கிடைத்தது, என்ன... அரசு அலுவலகங்கள், மற்றும் free zone பகுதிகளுக்குள் சென்று வேலை செய்ய முடியாது.. எப்போதும் லேபர் அலுவலகத்திலிருந்து செக்கிங் வருகிறானா என்று கவனத்துடன் வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

நல்ல வேலை செய்து பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து அவன் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் வைத்து காண்ட்ராக்ட் எடுக்கும் அளவுக்கு சென்று விட்டான், கையில் பணம் புரள ஆரம்பித்தது. அந்த மலையாளி இவனை வைத்து வேலை வாங்கி அவன் அதிகம் எடுத்துக்கொண்டு இவனுக்கும் இவன் திருப்திக்கு கொடுத்து நல்லபடியாய் நடந்தது, மலையாளிக்கு கம்பெனி இருந்தது ஆனால் வேலை தெரியாது.. இவனுக்கு வேலை தெரியும் ஆனால் விசா கிடையாது.. அவன் ஆட்களை வைத்து இவன் வேலை வாங்கி நல்ல சம்பாதித்தான்.

அந்த மலையாளிக்கு இவனை காலையில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும், பில்கள் பாஸ் பண்ணி வாங்குவதற்காக வேலை செய்த இடங்களுக்கு அலைய வேண்டும், பின்னர் மாலையில் இவனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவேண்டும், இதுதான் வேலை. எப்போதும் ட்ராயிங் பார்த்து கொட்டேஷன் போடுவது, ஆட்களை வேலை வாங்குவதும் இவன் வேலை. அப்போதே இந்த வசதிகளுக்காக ரூமில் ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தான். மலையாளிக்கு வேறு வழியில்லை என்பதால் இவனை அட்ஜஸ்ட் பண்ணி போய்க் கொண்டிருந்தான்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தான் துபாயில் வேலை செய்யும் நம் நண்பர்கள் எந்த பாதையில் செல்லக் கூடாது என்று நான் சொல்ல நினைத்தேனோ அந்த பாதையில் காளீஸ்வரன் செல்ல ஆரம்பித்தான், அது என்ன பாதை அது அவனை எங்கு வரை கொண்டு சென்று விட்டது என்பது இன்னொரு நாள்.

அன்புடன், வசந்தா நடேசன்.

காளீஸ்வரன் கதை..[1] [2] [3]

3 comments:

 1. இது தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதோ? காளீஸ்வரனின் முயற்சியும், சமயோசிதமான வியாபார உத்திகளையும் கதையில் பகிர்ந்துள்ளீர்கள். கொஞ்சம் சுவாரஸியம் கூட்டி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. உண்மையில் இந்த சமாச்சாரங்கள் எல்லாம்
  தங்கள் பதிவின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறேன்
  தெளிவாகச் சொல்லிப்போகும் அபரித ஆற்றல்
  உங்களிடம் உள்ளது
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தெரியாத தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete