ஒரு காலத்தில், ஒரு 200 அல்லது 250 ஆண்டுகளுக்குமுன் ஒரு ராஜா இருந்தானாம், அவனுக்கு ஒரே ஒரு ராணி, மற்றும் பிரபலமான ஒரு மந்திரி பிரதானி.
மந்திரி எப்போதும் ரொம்ப மகிழ்ச்சியாய் இருப்பாராம், அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை எல்லாம் நன்மைக்கே என்பது. ஆனால் ராஜா ஏனோ அந்த அளவுக்கு சந்தோஷமாய் தான் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
காலப்போக்கில், அது, இது என்றில்லாமல் என்ன எழவென்றாலும் எல்லாம் நன்மைக்கே என்றால் மனுஷனுக்கு கோபம் வருமா, வராதா?? ராஜாவுக்கும் வந்து தொலைத்தது, சரி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
நீ எப்படி இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாய் என்று மந்திரியை வரவழைத்து மிரட்டி கேட்டாயிற்று, ம்ம்ம், ப்ரயோஜனம் இல்லை..
ராஜாவுக்கு கோபம் வந்தது. எந்நேரமும் ஏதாவது ப்ரச்னை.. ஆதரவை வாபஸ் வாங்கிருவேன் என்று இந்த காலத்தில் இருப்பது போல் என்ன எழவாவது அப்பவும் இருந்து தொலைத்திருக்கும்?? நாமல்லாம் இப்ப 250 வருஷத்துக்கு இங்கிட்டு இருக்கோம், நமக்கு என்ன தெரியும் என்பது நியாயமானதே.. மனிதன் அன்றும் மனிதன் தானே?
ஆனாலும் ராஜா விடவில்லை, தன் கையிலிருக்கும் சி.பி.ஐ யை ஏவி இப்போது நோண்டி நொங்கெடுப்பது போல் அப்போது மந்திரியை கண்காணித்து சேதி சொல்ல பத்து இருபது ஆட்கள் நியமிக்கப்பட்டனர்..
ரெக்கார்ட் பண்ணி வக்கணையாய் கேட்டுத்தொலைக்க செல்போன் கருமமெல்லாம் அப்போது இல்லையாதலால் ஒற்றர்கள் இருபது பேரும் மந்திரியை பின்தொடர்ந்து கண்காணித்தார்கள். இரண்டு மூன்று நாட்களிலேயே மன்னனுக்கு தகவல் வந்தது, எல்லாம் மந்திரி தினமும் சொல்லும் மந்திரத்தால் தானென்று..
ராஜா நினைத்தான், இந்த பய ஆனாலும் நம்மட்ட மரைச்சுட்டானே என்று மனம் நொந்து, நட்ட நடு ராத்திரியில் மந்திரியை மீண்டும் அழைத்து, நீ தினமும் சொல்லும் மந்திரத்தை எனக்கு இப்போதே சொல்லிக்கொடுக்க வேண்டும், நாளை காலையில் நான் அதை சொல்லி நாளைமுதல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றான்.. உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்றான்..
மந்திரிக்கு இரண்டாம் தாரமாக மன்னன் மகளை கேட்டு மணந்து கொள்ள மனதுக்குள் ஆசை இருந்தாலும், அந்த மந்திரம் ஒரு சாதாரண பூஜை மந்திரம், தினமும் சொல்வது.. தினமும் நாம் சூரியனை பார்த்ததும் சொல்லும்
உலகத்தை காத்திடும் சூரியனே,
உன்னதம் தந்திடு சூரியனே..
உள்ளொளி வீசுவாய் சூரியனே..
உயர்வுரச் செய்வாய் சூரியனே
தன்னொளி மிகுவாய் சூரியனே,
தவறுகள் பொருப்பாய் சூரியனே..
என்பது போல் ஒரு சாதராண மந்திரம், இதனால் ஒன்றும் உதவாது என்று தெரிந்ததால் ராசா மகளை தியாகம் செய்து, அப்படி ஒன்றும் இல்லை என்று உருதியாய் சொன்னான். மேலும் மந்திரிக்கு எந்த மந்திரத்தை யார் யார் எப்போது சொன்னால் பலன் கிடைக்கும் என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த படியால் நாம் ஏதோ சொல்லப்போக நாளையே ஏதேனும் நடந்து வேறு மன்னன் வந்து இந்த நாட்டை பிடித்துவிட்டால் நம் தலை மிஞ்சாது என்று அமைதியாய் இருந்தான்.
ராஜா அடம் பிடித்த கழுதையாய் அடம் பிடித்தான், இப்போது சொன்னால் தான் ஆயிற்று, இல்லை உம் தலையை இப்போதே வெட்டிவிடுவேன் என மிரட்டவும், இது என்னடா அக்கிரமம் என்று, உடனே ஒரு யுக்தி செய்தான்.. பக்கத்தில் இருந்த வீரர்களை பார்த்து, யாரங்கே, உடனே மன்னனை கைது செய்து தூக்கிலிடுங்கள் என்றான் செயலலிதா போல்..
போலீசார்.. ச்சே, வீரர்கள் மந்திரியையும் பார்க்கிறார்கள், மன்னனையும் பார்க்கிறார்கள் ஆனால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்கவில்லை.. மன்னனுக்கு இதற்குள் ப்ரஷர் ஏறி விட்டது.. தக்காளி, நான் மந்திரத்தை கேட்டால் நீ என்னை தூக்கிலிடுவாயா?? என்று உன்மத்தம் அடைந்து, டேய், இவனை இப்போதே தூக்கிலிடுங்கள் என்று உத்தரவிடவும் வீரர்கள் டக்கென்று மந்திரியை சூழ்ந்து கொண்டனர்.
ஐயோ, என்னை கொல்ராங்க, என்னை கொல்ராங்க என்று கத்தாமல் மந்திரி சிரித்துக்கொண்டிருந்தான், மன்னன், கொஞ்சம் அயர்ந்து போய், நப்பாசையுடன், ஏன் உமக்கு பயம் இல்லையா?? உன்னை இப்போது தூக்கிலிட கொண்டு செல்கிறார்கள் என்று கேட்கவும்.. மந்திரி மீண்டும் சிரித்துக்கொண்டே, வழக்கம் போல் எல்லாம் நன்மைக்கே மன்னா, நீங்கள் சொன்னதும், நான் சொன்னதும் ஒரே வார்த்தைதான், நான் உங்களை தூக்கிலிடச்சொன்னேன் வீரர்களிடம், வீரர்கள் அசையவில்லை.. ஆனால் நீங்கள் சொன்னதும் இதோ நான் கைவிலங்குடன்.. எல்லாம் நன்மைக்கே.. என்றான்.
மன்னனுக்கு ஏதும் விளங்கவில்லை, எல்லாம் நன்மைக்கே என்றவுடன் மன்னனுக்கு இன்னும் வெறி தலைக்கு ஏறி, இவனை கொண்டுசெல்லுங்கள் என்றான். பின் சிறிது யோசித்து மீண்டும் வீரர்களை அழைத்து, மந்திரி எப்படியும் ஜெயிலுக்குள் மிரண்டு வழிக்கு வருவான் என்று கொஞ்சம் நப்பாசையுடன், அடுத்து நான் சொல்லும் போது இவனுக்கு தூக்கு என்று அனுப்பி வைத்தான்.
சில நாள் கழிந்தன, ராஜாவுக்கு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது, நல்ல ஒரு மாம்பழத்தை வரவழைத்து அதை ஆசையுடன் தன் கையாலேயே அரிந்து சாப்பிடவேண்டுமென்று கத்தியால் வெட்டிக்கொண்டிருந்தான்.. இதற்குமுன் எல்லாமே வேலையாட்கள்தான், ராசா என்றால் சும்மாவா?? எல்லாம் தான் கிடைக்கும்.
ஆனாலும் நடப்பது எல்லாமே நம் கையில் இல்லை அல்லவா?? தக்காளி, மாம்பழம் வெட்டும் போது தெரியாமல் தன் சுண்டு விரலின் நுனி பாகத்தையும் துண்டாக வெட்டி விட அதுவும் மாம்பழ துண்டங்களோடு துண்டாய் விழுந்து மன்னன் துடித்தான்.. நம் கஷ்டம் தீரவே தீராதா என்று மீண்டும் சினம் கொண்டான் மந்திரி மீது.. சரி மந்திரி என்ன செய்கிறான் என்று வீரர்களை அனுப்பி பார்த்தால் மந்திரி வீரர்களிடம் விஷயத்தை கேட்டபிறகும் எல்லாம் நன்மைக்கே என்று வழக்கம் போல் சொன்னதை அப்படியே வந்து சொல்லவும் மன்னன் இன்னும் கடுப்பானான்..
சில வாரங்களுக்கு பின் ராஜா கடைக்குட்டி மகள் வேட்டைக்கு போகவேண்டும் என்று மன்னனை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.. மன்னனும் அரசவையை விட்டு வெளியே சென்று வெகுகாலம் ஆகிவிட்டதால், சரி செல்லலாம் என்று வீரர்களை ஒரு வேட்டைக்கு ரெடியாகச் சொன்னான். எல்லாம் தயாராகி, படை, அம்பு, துப்பாக்கி, பட்டாளம் எல்லாம் அதிர் வேட்டு முழங்க வேட்டைக்கு சென்றனர்..
வேட்டையின் போது ராஜாவின் கடைக்குட்டி மகள் ஒரு துப்பாக்கியுடன் தான் வேட்டையாடிய சிறுத்தையுடன் இருந்தபோது எடுத்த போட்டோ தான் இது..
ம்ம்ம்ம், ராஜாவின் குட்டி மகள் ஒரு சிறுத்தையுடன் போதும் என்று உட்கார்ந்தாலும், ராஜாவுக்கு அடங்கவில்லை, குதிரை மற்றும் வீரர்கள் சூழ மீண்டும் வேட்டை துவங்கியது.. நேரம் செல்லச்செல்ல ராஜாவுக்கு ரொம்ப ஆர்வக்கோளாராகி ஒரு மானைத்துரத்திக்கொண்டு தனியே நீண்ட தூரம் செல்ல நேர்ந்தது.. ஒரு கட்டத்தில் நரமாமிசம் சாப்பிடும் ஒரு நரர் கூட்டம் இடையே சென்று தனியே அகப்பட்டுக்கொண்டார்..
நான் தான் ராசா.. என எவ்வளவோ மன்றாடியும் விடாமல், இங்கு எங்களுக்கு ராசா வேற இருக்கார் வாங்கன்னு கையை பின்னால் கட்டி ராசவை கொண்டுசென்றனர்.. அங்கிருந்த நரர்களின் ராசவுக்கு நம்ம ராசாவை கண்டதும் நாக்கில் எச்சில் ஊரியது.. தக்காளி, இவனை தலையை அறுத்து சாமிக்கு உடனே படைச்சிட்டு இவன் இதயத்தை ருசி பாக்கணும்னு ஆசை அடக்கமுடியாமல் வந்து தொலைத்தது.. சரி, நடைமுறைகள் இருக்கிறதே என்று மதகுருவை வரவழைத்தான் பூஜைகளை நடத்த..
மதகுரு நம் நித்தி போல் நீண்ட முடியுடன் புன்னகையுடன் வந்தார், அவரும் பாவம் மனித இதயம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?? வந்து, ம்ம், ஆரம்பமாகட்டும் எல்லாம் எனவும், கவுண்டமணியை காந்தக்கண்ணழகிகள் ரெடி பண்ணியது போல் எல்லாம் நடந்தது..
ராஜா முழித்துக்கொண்டிருந்தான்.. என்ன செய்வது என தெரியவில்லை.. கடைசியில் ஸ்டார்ட், மியூசிக் என்று சொல்லும் தருணத்தில்.. குருஜி பலியை சோதிக்கத்துவங்கினான்.. கை விரல்களை பார்த்ததும் மதகுருவின் முகம் தொங்கிவிட்டது. அய்யோ என்று ஆசை, தோசை, அப்பளம், வடை கதையாய் ஆகிவிட்டதே என்று நர ராசவிடம் சொன்னான், இது குறைபலி, இவன் விரல்கள் முழுமையாய் இல்லை.. நம் தெய்வம் ஏற்றுக்கொள்ளாது என்று.
நர ராசா, ஆஹா.. என்று சொல்லிவிட்டு, மதநம்பிக்கையை மீறி எதுவும் செய்யமுடியாது என்று மன்னனை விடுதலை செய்து கைது செய்த இடத்திலேயே கொண்டு விடச்சொன்னான்.. மன்னனுக்கு அப்போதுதான் மூச்சு வந்தது.. தலை தப்பிச்சுடா சாமி ன்னு வந்து தன் கூட்டத்துடன் சேர்ந்தான்..
அப்போதுதான் அவன் மனதில் கேள்விகள் வந்தது.. இந்தபய மந்திரி நம்ம விரல் போனதை கேட்ட உடன் எல்லாம் நன்மைக்கே என்றானே, நமக்கு மாம்பழம் வெட்டும்போது விரல் துண்டானாலும் இப்ப உயிர் தப்பியது அதனால்தான்.. இவன் சொன்னதுல எதாச்சும் அர்த்தம் இருக்குமோ என்று யோசிக்க துவங்கினான்..
சரி என்று மந்திரியை வரவழைத்து விபரம் கேட்டான், எனக்கு விரல் துண்டு போனது, நீ தெரிந்தோ, தெரியாமலோ எல்லாம் நன்மைக்கே என்றாய், எனக்கு உண்மையிலேயே அது நன்மைக்கு என்று இப்போது தெரிந்ததால் உனக்கு விடுதலை என்றான்.. மந்திரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நன்றி மன்னா, நன்றி மன்னா என்று கால்களில் விழுந்தான்..
கைபிடித்து எழுப்பி விட்டு சரி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம், அதை விளக்கி விட்டு செல் என சொல்லவும் மந்திரி என்ன எழவுடா இது என்று மீண்டும் ஜெயிலுக்கு செல்ல ஆயத்தமானான்.
மன்னன் அவனை நிறுத்தி, எல்லாம் நன்மைக்கே என்றாய் நான் உயிர் தப்பினேன்.. அதனால் உனக்கு என்ன நன்மை?? நீ ஜெயிலிலல்லவா இருந்தாய் இத்தனை நாளும் என்றான்..
மந்திரி சிரித்துக்கொண்டு சொன்னான், என்னை சிறையில் அடைக்கவில்லையென்றால் நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன்,நான் வழக்கமாய் வேட்டையின் போது உங்களை விட்டு அகலுவதில்லை.. அதனால் நானும் உங்களுடன் சேர்ந்து நரர்களிடம் மாட்டியிருப்பேன்.. நீங்கள் குறைபலி தப்பிவிட்டீர்கள், எனக்கு குறையேதும் இல்லாத முழு உடம்பு, நான் மாட்டியிருப்பேன்.. அப்ப எல்லாம் நன்மைக்கே அல்லவா என்றான்..
மன்னன் ஷாக்காகி மந்திரிக்கு நிறைய பொன்னும், பொருளும் பரிசளித்து அனுப்பினான்..
நன்றி, அவ்ளவ்தான்..
அன்புடன், வசந்தா நடேசன்..
டிஸ்கி :- இது சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு நீதிக்கதை.. நான் இதற்குமுன் இதை கேட்டதில்லை.. சரி, நம்மை போல் வேறு யாராவது இருந்தால் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக.. என்று ஒரு புது முயற்சி.. போரடித்தால் சொல்லுங்கள், வேற டிரை பண்ணுவோம்.. நோ வொரீஸ்..
good.நிறைய எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கருத்தாழமிக்க கதை
ReplyDeleteநன்றாகவும் சொல்லிப் போகிறிர்கள்
தொடர வாழ்த்துக்கள்
அப்பாடா இப்பிடி கதை கேட்டு எவ்வளவு நாளாச்சு....!!!!
ReplyDeleteநல்ல ஒரு ராஜாக்கள் சினிமா பார்த்த எபெக்டு...
ReplyDeleteருக்மணி பாட்டிதான் இப்படி கதை எழுதுகிறார்கள்....
ReplyDeleteஇப்போ நீங்களும்..
சூப்பர்....
//தன் கையிலிருக்கும் சி.பி.ஐ யை ஏவி இப்போது நோண்டி நொங்கெடுப்பது போல் அப்போது மந்திரியை கண்காணித்து சேதி சொல்ல பத்து இருபது ஆட்கள் நியமிக்கப்பட்டனர்..
ReplyDelete//
அட அட ராஜா கதையில அழகா இப்போதைய நிலவரத்தை அள்ளி விட்டுடீங்களே...
//என்று ஒரு புது முயற்சி.. போரடித்தால் சொல்லுங்கள், வேற டிரை பண்ணுவோம்.. நோ வொரீஸ்..//
ReplyDeleteநல்ல முயற்சி. சுவாரஸியமும் கூட..
ஆனால் பதிவின் நீளம் குறைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
இந்த கதையை நான் எனது 7 வது வயதில் கேட்டேன். இதன் உண்மையை எனது 13வது வயதில் உணர்ந்தேன். அன்று முதல் இந்த வார்த்தையை என் துன்ப காலங்களில் சொல்லிகொள்வேன்.
ReplyDelete