Sunday, February 6, 2011

‘சோற்றுக்கணக்கு‘ குறித்து...

இணையத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து நான் படித்துவரும் ஒரு பதிவரின் பதிவு வழியாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்ற சிறுகதையைப்பற்றி தெரியவந்தது. நேற்றே நம் பதிவரின் பதிவைப்பபடித்ததும் இந்தக்கதையை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதிற்க்குள் வந்தது.

நேற்று ஜெயமோகனின் தளத்துக்குச்செல்லும் நேரம் கிடைத்தது, அப்படியே நுனிப்புல் மேய்ந்து விட்டு அவரைப்பற்றிய சொந்தப்பக்கத்தை மட்டும் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். எங்கள் ஊர்ப்பக்கம் உள்ளவர் என்று தெரிந்தது, அதுவும் வெளிவந்ததற்க்கு ஒருகாரணமாக இருக்கலாம்.

நம்ம உள்ளூர்காரர்தானே என்ற ஒரு மலிந்த பார்வையும் தமிழர்களுக்கு உண்டுதானே? வெளிநாட்டுப்பொருளுக்கு இருக்கும் மரியாதை, மதிப்பை எந்த உள்ளூர் பொருளுக்கு கொடுக்கிறோம் நாம்? மேலும் நானும் எழுத்தாளர்தான், எனக்கும் வேலை இருக்கிறது(?) என்ற நினைப்பாகவும் இருக்கலாம். நான் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று என்னை சொல்லிக்கொள்வதில்லை, என்றாலும் என் பொழுதை போக்க எழுதுபவன் தானே.

எனக்கு சிறுகதைகள் பற்றிய ஆர்வம் அற்றுப்போய்விட்டதென்று தான் நினைக்கிறேன். இணையத்தில் இப்போது தமிழ் படிப்பதற்க்கு முன்பு இணையத்தில் வெறும் பத்திரிகைகள் படித்த அனுபவம் தான் எனக்கு அதிகம். வெகு சின்னவயதில் குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் படித்த அனுபவம் தான். கொஞ்சம் வளர்ந்தபின் பள்ளி விடுமுறைகளில் பக்கத்து அக்கா வீட்டில் ஓசியில் கிடைத்த கடல்புறா படித்த அனுபவமும் உண்டுதான். கல்லூரி சென்றதுமுதல் சினிமாவிற்கும் சைட்அடிப்பதற்குமே நேரம் சரியாக இருந்தது, இப்படி சிறுகதைகள் நாவல்கள் பக்கமே போனதில்லை.

பணம் தேடவேண்டிய வயது வந்தபோது பணத்தின் பின்னால் ஓடவும், அதுகுறித்த தேடலிலுமே காலம் கழிந்துவிட்டது, என் குற்றம் தானா தெரியவில்லை.

சரி, சோற்றுக்கணக்கு பற்றி சொல்லவருகிறேன், இன்றும் அலுவல் விட்டு வந்ததும் ஒரு ஆர்வமும் இல்லாமல் பொட்டிதட்ட உட்கார்ந்தேன், வரும் வழியிலேயே கம்ப்யூட்டருக்கு செலவழிக்கும் நேரத்தை இனி குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையிலேயே வீட்டுக்கு வந்தேன். கழிந்த இரண்டு மூன்று நாட்களாய் ரொம்ப உழைத்துவிட்டேனோ என்று நினைப்பில் வந்த ஒரு உளைச்சல் என்று சொல்லலாம்.

சரி இந்த கதையை படிக்கலாம் என்று ஒரு ஆர்வமே இல்லாமல் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கதை ஒரு கட்டுரை வடிவில் ஆரம்பித்தது, அந்தக்கதையின் ஆழக்கருத்தை மெள்ள விளக்கிவிட்டு கட்டுரை வடிவிலிருந்து ஒரு கட்டத்தில் கதைக்குள் ஜெட் வேகத்தில் நுழைந்து உணர்வுப்பூர்வமாய் உள்ளே இழுத்து வைத்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்று சொல்லலாமா அல்லது குறுங்கதையா? எனக்கு கதை என்பதே உணர்வற்றுப் போய்விட்ட நிலையில் இது சிறுகதைக்கும் கொஞ்சம் அதிகம் அல்லது குறுங்கதைக்கும் கொஞ்சம் சின்னதாக என்அளவில் நினைக்கிறேன்.

கதையை இங்கே விளக்கப்போவதில்லை, அது என் நோக்கமும் அல்ல, ஆனால் இதன் முடிவில் அதன் சுட்டியை வைப்பேன் கண்டிப்பாய் நீங்கள் சென்று அதை படிக்க வேண்டும் என்பதற்க்காக.

ஒரு சின்ன முன்னுரை மட்டும் இங்கே. இது ஒருகாலத்தில் ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் நம்மிடையே கலந்து கட்டி இருந்த நம் மக்களின் வறுமையையும், அவர்களின் வாழ்க்கை முறையும் பற்றியது.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் அதை தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன், கதையில் வரும் கொடும் வறுமை கடவுள் புண்ணியத்தால் இன்று நம்மிடையே இல்லை.

அதுவும் பொழுது போக பொட்டி வாங்கி வைத்து தட்டும் நம்மில் பலர் இதைப்பற்றி அறிந்திருக்கவே வழியில்லை. நல்லது தான், ஆனாலும் நாம் கடந்துவந்த பாதையை மறக்கலாகாது என்ற ஒரு கொள்கை விரும்பியோ, விரும்பாமலோ என்னிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.

நான் என் பதிவிற்கு வருகைகளைக்கூட்டவோ அல்லது திருவாளர் ஜெயமோகனுக்கு ஜால்ரா தட்டும் எண்ணத்திலோ இதை எழுதியிருக்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம், மன்னிக்கவும். அவரின் தமிழை ரசித்து, இந்த வகை எழுத்துக்கள் இன்னும் சந்தையில் இருக்கின்றன என்பதை தமிழ் வளர மக்களிடம் பரப்பலாமே என்ற ஒரு நல்லெண்ணமே.

அவர் கதையில் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு பதில் எழுதிப்போட்டிருக்கமுடியும், ஆனால் இதை அப்படியே அங்கே விடுவதை விட இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். மேலும் இந்த வகை சிறுகதைகள் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இன்னும் ஒருசிலர் பெறட்டுமே என்ற எண்ணமே.

உண்மையில் அந்த கதையில் வரும் பாத்திரம் விளக்கிய உணர்வுகள் இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது, நான் அந்த அளவு வறுமையை சந்தித்தவனில்லை எனினும் என் அந்த கால வறுமைக்கும் இதற்க்கும் ரொம்ப தூரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்கள் உணர்வுகளை பிழியப்போகும் அதன் சுட்டி இங்கே சோற்றுக்கணக்கு!

எனக்கு இங்கே கருத்துக்களை ஏதும் சொல்லாமல் நீங்களும் கதையை படித்துவிட்டு உங்கள் பதிவில் எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்.

அன்புடன், வசந்தா நடேசன்.

6 comments:

 1. //அவர் கதையில் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு பதில் எழுதிப்போட்டிருக்கமுடியும், ஆனால் இதை அப்படியே அங்கே விடுவதை விட இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். //

  உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது...அருமை அருமை...

  ReplyDelete
 2. தாம் பெற்ற இன்பம் எம்மையும் படவைக்கும் தங்களுக்கு நன்றி.
  அழுவாச்சி கதையோ ?

  ReplyDelete
 3. எனது இன்றைய பதிவில் உங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே...

  ReplyDelete
 4. kathaiyai padikkavaikkum ungal ezhuththu arumai nanba.

  ReplyDelete
 5. அனைவரின் வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி, சோற்றுக்கணக்கை படிக்கத்தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

  //Philosophy Prabhakaran said.....// ரெக்கமண்டேஷனுக்கு நன்றி தலைவா..

  ReplyDelete
 6. //இப்படி ஒரு பதிவாக விட்டால் அது இன்னும் கொஞ்சம் அதிகம் புதிய வாசகர்களை அவருக்கு
  கொடுக்ககூடும் என்ற எண்ணமே காரணம். //
  Nice!

  ReplyDelete