Wednesday, March 23, 2011

டும், டும், டும்..












ரகு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தார், நான் மண்டை காய்ந்து போய் இருந்தேன்.. நிமிடத்திற்கு நிமிடம் என் பிரஷர் ஏறிக்கொண்டிருந்த சமயம் அது. ரகுவின் மகள் கல்யாணம் குறித்த கவலை அவரை விட எனக்குத்தான் அதிகம்.

ரகுவின் மகள் கல்யாணம் பற்றி நினைத்து அவரது நண்பனாகிய நான் ஏன் உழன்று கொண்டிருந்தேன். பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டது, மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்து விட்டது, பணப்பிரச்னை இல்லை.. என்பதையும் சொல்ல வேண்டும்.. வேறு என்ன அவ்வளவு பிரச்னை என்று நீங்கள் மண்டை காயலாம்.. அதற்குத்தான் இந்த கதை, தொடரவும்!

அதுக்கு முன்னால ரகுவை பற்றி கொஞ்சம் முன்னுரை கதையின் போக்குக்கு மிக அவசியமாய் இருப்பதால் கொஞ்சம், வாங்க பழகலாம். அப்டியே கதைக்குள்ள நுழைஞ்சிரலாம் கவலை வேண்டாம்.

ரகு இப்போது 50 வயது ஆசாமி. இளமையிலேயே துபாய் வந்துவிட்ட துபாய் வாசி.. ஆரம்ப காலங்களில் சிறு வேலையில் சேர்ந்து பின்னர் படிப்படியாய் உயர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் இப்போதெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையும் ஊர் சென்று வரும்போது மட்டும் குடும்பஸ்தன் மற்றபடி என்னை போன்று துபாயில பேச்சுலரு.

ரகுவுக்கு ஒரு மகள் மட்டும், மனைவி 15 ஆண்டுக்கு முன் விவாகரத்து வாங்கி விட்டார்.. இருவரும் மகளின் நலனுக்காக வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. மகள் இப்போது ஊரில் அம்மாவிடம். ரகு வருடத்துக்கிரு முறை ஊருக்கு சென்று மகளுடன் பொழுதை கழித்து வருவார். மகள் இப்போது டாக்டருக்கு படித்து கடைசி வருடம் பரீச்சையை எழுதிக்கொண்டிருக்கிறார்..

என்ன காரணத்தால் விவாகரத்து என்று தெரிந்து கொள்ள உங்களைப்போல் எனக்கும் ஆசை தான், என்ன செய்வது மனுஷன் அது குறித்து பேச்சு வந்தாலே மூட் அவுட் ஆகி விடுவதால் சத்தியமா எனக்கு தெரியாது.. பின்னர் தெரிய வந்தால் அவசியம் சொல்கிறேன்.

ரகுவின் சமூகத்தை சேர்ந்த ஒரு துபாய் நண்பர் அமெரிக்காவில் வேலை செய்யும் தன் மகனுக்கு இவர் மகளை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டதில் ஆரம்பித்தது இந்த கதையின் ஆரம்பம். அந்த பையன் ஒரு முறை துபாய் வந்தபோது ரகு பார்த்து பழகி இவருக்கும் பிடித்து விட்டது.

இருவரும் முதலில் பையனுக்கு போட்டோவை காண்பித்து சம்மதமா என்று கேட்டு, பையனும் விரும்பி உடனே பெண் மொபைல் நம்பர் வேண்டும் என்று கேட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதிரடியாய் ஆரம்பம் ஆனது..

ரகு மனைவியிடம் நேரில் இதை விளக்க முடியாது, இவர் சம்பந்தப்பட்டது தெரிந்தாலே மனைவி மறுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது அவருக்கு, இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகி விட்டதாம். மகள் விஷயத்தில் இவர் வடக்கு என்றால் அவர் தெற்கு என்பதே வழக்கம். இதை நன்கு உணர்ந்திருந்ததால் ரகுவின் டெல்லி நண்பரை வைத்து அவரின் நண்பர் தான் அமெரிக்க மாப்பிள்ளையின் அப்பா என்பது போல் ஒரு திரைக்கதை உருவாக்கி கல்யாணம் வரை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி கதைவசனம் எல்லாம் ரெடியாக்கி ஒரு வெற்றிக்கதையாக்கிய (கல்யணமாக்கிய) வெற்றி இயக்குனர் அடியேன் தான்.. எல்லாம் பக்கா பிளான். ம்ம்ம், பிச்சு புடுவம்ல பிச்சு....

ரகுவின் டெல்லி நண்பருக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்து கதையில் அறிமுகம் செய்யப்பட்டார். கதைப்படி அவர் இதற்காகவே ஊர் சென்று தற்செயலாய் மம்மியை பார்ப்பது போல் பார்த்து வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இடையில் சாணக்கியத்தனமாய் இந்த வரண் குறித்து பேசிவிட வசனம் எழுதிக்கொடுக்கப்பட்டது.

சும்மா சொல்லக்கூடாது, சொல்லிக்கொடுத்தது போல் கெஸ்ட் ரோலில் அசத்தி விட்டார். எல்லாம் பேசி விட்டு கடைசியில் கிளம்புவதற்கு முன் ஏதோ ஞாபகம் வந்தது போல் அவருடைய(?) நண்பரின் அமெரிக்க மகன் குறித்தும், அவனுக்கு வரண் பார்க்க வேண்டும் என்றும் உங்கள் மகளை பேசிமுடித்தால் என்ன என்று கேட்டு, யோசித்து சொன்னால் அவர்களை வரண் பார்க்க வரச்சொல்வதாய் ஒரு பிட்டை போட்டு விட்டு சென்றுவிட்டார்.

மம்மிக்கு முதலில் ஒரு தயக்கம் நாம் சொன்னால் இந்த மனுஷன் சம்மதிப்பானோ?? என்று ரகுவை குறித்து. என்ன இருந்தாலும் ரகு மகளின் தந்தை அல்லவா? என்று யோசிக்க ஆரம்பித்து விரைவிலேயே நான் எதிர்பார்த்தது போல் ஆணவம் தலைக்கேறி என் மகள், நான் தான் முடிவெடுக்க வேண்டும், அவரை கேட்க அவசியம் இல்லை.. மகளிடம் கேட்கலாம் அவள் சரியென்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று மகள் வந்ததும் இது குறித்து கேட்டிருக்கிறார்.

மகளிடம் இது குறித்து ரகு ஏற்கெனவே சொல்லி நம் கதையை ஏற்கெனவே அவுட் ஆக்கி விட்டதால், திட்டம் அனைத்தும் தெரிந்த மகள், இப்படியாவது இவர்கள் சேர்கிறார்களா பார்க்கலாம் என்று, ம்ம்ம், பார்க்கலாம் என்றதும் மம்மிக்கு அடுத்து என்ன செய்வது என்ற கவலை ஆரம்பித்தது. பையன் போட்டோ வாங்கலாம் பார்த்து மகளுக்கு பிடித்து ஜாதகமும் பொருந்தியிருந்தால் பின்னர் ரகு குறித்து கவலைப்படலாம் என்று அடுத்த நாளே டெல்லி நண்பருக்கு போன் வந்தது, கதைப்படி வரவேண்டும், நாம யாரு?

பையன் போட்டோவும், ஜாதகமும் கேட்டு கால் வந்ததும், ஏற்கெனவே ரகுவினால் பொருத்தம் பார்க்கப் பட்டு ஜாதகம் பொருந்திய பின்பே நம் கதை ரெடியாகி இருந்ததால் நோ ப்ராப்ளம். நண்பர் ஊரிலேயே இருந்ததால் அடுத்த நாளே போட்டோ மற்றும் ஜாதகம் கொடுக்கப்பட்டது.

ஜாதகம் நல்ல பொருத்தம், மகளுக்கு பையனை பிடித்து விட்டது எனக்கு டென்ஷனும் கூடவே. ரகு சிக்கன் சாப்பிட்டுக்கொண்டு பல் குத்திக்கொண்டிருந்த போது ஊரிலிருந்து போன் வந்தது. நண்பர் பேசினார், ஆல் ஓகே.. அப்புறம் என்ன?

கல்யாணத்தை பொருத்த வரை ரகுவின்/அப்பாவின் முக்கியத்துவம் குறித்து மம்மிக்கு புரியும் படி எடுத்துரைக்கப்பட்டது, டெல்லி நண்பர் நான் வேண்டுமானால் இப்படி பேசிப்பார்க்கவா என்று நம் திட்டப்படி கேட்கவும், மம்மியிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்தது. அதாவது பெண் பார்க்க வரும்போது ரகு துபாயில் இருந்து வேலை அதிகம் என்பதால் வரமுடியாது ஆனால் திருமணத்திற்கு வருவார் என்பது போல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிடலாம், பையனுக்கு பெண்ணை பிடித்து பெண்ணுக்கும் பையனை பிடித்தால் பின்னர் ரகுவை திருமணத்திற்கு அழைத்து வர டெல்லி பொருப்பேற்றுக்கொண்டது நம் திட்டப்படி!

மாப்பிள்ளை மற்றும் அவர் அப்பா அம்மா தவிர அவர் உறவினர் யாருக்கும் என் திட்டம் தெரியாது என்பதும் இந்த கதையை படிப்பவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தும் கூடுதல் செய்தி!

பெண் பார்த்து பேசி முடித்து கல்யாணத்திற்கு குறித்திருந்த நாளும் வந்தது. ரகு திட்டப்படி கல்யாணத்தன்று காலை பெண் அழைப்பிற்கு முன் பதினைந்து வருடத்திற்கு பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தார், பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி, மம்மியின் முகத்தில் பெருமிதம் அவர் நினைத்தபடி கதை நடக்கிறதாம்.. டயலாக் உதவிக்காக உடனிருந்த எனக்கு இன்னும் டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது..

பெண் அழைப்பு முடிந்து நல்லபடியாய் பெண் கழுத்தில் தாலி ஏறியது. ஆக நம் திரைக்கதை, டைரக்ஷ்ன் எல்லாம் நல்லபடியாய் முடிந்து ‘டும், டும், டும்‘ வெற்றிகரமாய் நடந்து முடிந்தது.

ஆள உடுரா சாமி ன்னு தாலி ஏறியதும் எனக்கு வந்த ஒரு மூச்சு இருக்கிறதே, நிம்மதிப்பெருமூச்சு.. செம ரிலாக்ஸ், வாழ்க்கையில் இதற்குமுன் அதை அனுபவித்ததில்லை!

என்ன எனக்கு ஒரு சிறு வருத்தம், நான் பிரிந்தவர் கூடிட விரும்பி கொஞ்சம் அதிகமாய் வசனம், திரைக்கதை ரெடி பண்ணி வைத்திருந்தேன். அதற்கு வேலை இருக்கவில்லை. எல்லாம் எடிட் ஆகி விட்டது?

ரகுவும், மம்மியும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும், புன்னகைத்ததும் தான் நடந்தது, கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே சமாளித்து விட்டார்கள், நான் ஆர்வத்துடன் பார்க்க, பார்க்க?? ம்ம், காலம் இனி அவர்களை சேர்த்துவைக்கக்கூடும்.

அன்புடன், வசந்தா நடேசன்.

படங்கள் கூகிளில் திருடப்பட்டது, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்ளாக!

2 comments:

  1. இக் கதையினை இரு வேறு விடயங்களினூடகா எதிர்பார்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் நகர்த்தியிருக்கிறீர்கள்.
    முதலாவது விடயம்,,, அமெரிக்க மாப்பிள்ளை, பெண் பார்த்தல்.
    இரண்டாவது விடயம், ரகுவும், அவர் மனைவியும் ஒன்று சேருவார்களா என்பது.

    கதையில் வைராக்கியம், பிடிவாதம் உள்ளவர்களாக ரகு, அவரின் மனைவியினைச் சித்திரித்து விட்டு முடிவை ரசிகர்களின் எண்ணப் போக்கிற்கு விட்டு விட்டு நழுவி விட்டீர்கள்.
    டும் டும்,.. இதற்கான பதில் காலத்தின் கைகளில்..
    ரசித்தேன். அழகான மொழி நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அழகா சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete