Monday, December 27, 2010

என்.ஆர்.ஐ. வாரியர்ஸ்

இந்தியர்கள் இன்று உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இல்லை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் பல தேசத்தவர்களும் இவ்வாறு பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு பிழைப்பிற்க்காக வந்தேரிகளாய் (இந்தப்பதம் சிலரைப்புண்படுத்தக்கூடும், ஆனால் அதுவே உண்மை என்பதால் மன்னியுங்கள், நானும் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு பிழைப்பதற்க்காக துபாய்க்கு வந்த ஒரு வந்தேரி தான்!) உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்தாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாட்டவர்களை விட மிக அதிகம் என்றே நினைக்கிறேன். உலகிலுள்ள எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியனையாவது காணமுடியும். இதைப்பற்றி சிலநேரங்களில் இங்குள்ள நண்பர்களிடம் முன்பு விவாதித்ததுண்டு.

நம் ஏழ்மை, கொடிய அரசியல் வாதிகளின் சுரண்டல் இது போல் பல காரணங்கள் யோசித்தால் கிடைக்கும். நமது இப்போதைய ஏழ்மையைப்பற்றியோ அல்லது நம் அரசியல் வியாதிகளைப்பற்றியோ பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டிய ஒரு சிந்தனை.

எதனால் இது போல் நாம் கடல்கடந்து பல தேசங்களிலும் பொருள் சம்பாதிப்பதற்க்காக படர்ந்து விரிந்து வாழ்கிறோம்? பழைய நியூட்டனின் மூன்றாம் விதியைப்போல் நம் எந்த விழைவால் இந்த விழைவு வந்தது?

ஒரு காலத்தில் நாம் (இந்தியர்கள்) செல்வச்செழிப்பாகவே வாழ்ந்திருக்கிறோம். இராஜ ராஜன் உழவர்களுக்கு அப்படி வரி விதித்தான் ஐயர்களுக்கு இப்படி சலுகை செய்தான் என்று இன்று நாமெல்லாம் கவலைப்பட்டாலும் அன்று உழவர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. வரி விதித்தது இவ்வளவு என்று குறிப்புகள் இருந்தாலும், நான் கட்டமாட்டேன் என்று யாரேனும் சொன்னார்களா?

தமிழர்கள் வீரத்திற்க்கு பல கதைகள், கல்வெட்டுக்கள் இருக்கின்றன, தமிழன் பயந்து போய் இதை எழுதாமல் விட்டிருப்பான் என்பதை என் அறிவு (குறைஅறிவு தான் என்றாலும்) ஏற்க வில்லை.

எல்லோரும் மகிழ்ச்சியாக, நிறைவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பயணம் செய்த லார்ட் மெக்காலே இப்படி எழுதியிருப்பானோ?

முன்கோபக்காரர்களும், பிளட் பிரஷர் அதிகம் உள்ளவர்களும் கீழ்வருவதைப்படிக்கவேண்டாம், இது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியதின் பின்னணியில் உள்ள ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.



இந்தியா ஒரு காலத்தில் Land of Kings என்று அழைக்கப்பட்டது என்று எதிலோ படித்திருக்கிறேன் (மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்?) வெள்ளையர்கள் வருமுன் நம்மை முகலாயர்கள் ஆண்டிருந்தாலும், அவர்கள் கொஞ்சம் நியாயமான நல்லவர்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. இந்தியாவின் பாதி செல்வத்தை தங்கள் நாட்டிற்க்கு அனுப்பிவிட்டு மீதியை வைத்துக்கொண்டு, நம் பெண்களையும் கல்யாணம் செய்து, பிள்ளை குட்டிகளோடு இங்கேயே இருந்து நம்மை ஆண்டு வந்தார்கள்.

ஆனால் நம்மை ஓட்டாண்டியாக்கி விட்டுச்சென்றது வெள்ளையர்கள் தான். கப்பல், கப்பலாக இந்தியாவின் செல்வம் ஐரோப்பாவிற்க்குச் சென்றது. இங்குள்ள ஓலைச்சுவடிகளைக்கூட விட்டுவைக்கவில்லை (நம்ம பயபுள்ளைகள் எங்கே அதை படித்து விட்டு, அறிவு வளர்ந்து(?) கேள்வி கேட்டு விடுவானோ என்ற பயத்தில்) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் நம்மை சுரணையற்றவர்களாய் மாற்றியதே, மெக்காலேயின் கல்வி முறையும் அவர்கள் நம்மை ஆண்டவிதமும்தான் என்பது மேற்படி அறிக்கையில் விளங்குகிறது பாருங்கள்.

வெள்ளையர்கள் நம்மை ஆளஆரம்பித்த துவக்க காலகட்டங்களில் நம் தென்னிந்தியப் பெண்கள் வாழ்ந்த நிலையைப்பாருங்கள்.

இவர்கள் முகத்தில் ஏதேனும் கவலை ரேகைகள் தெரிகிறதா? அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப்பாருங்கள்! இத்தனைக்கும் இவர்கள் நம் கோவில்களில் நடனமாடிய அல்லது வேலைசெய்த பெண்கள் என்று ஒரு குறிப்பு இருந்தது.




வடஇந்தியர்கள் இன்னும் செழிப்பாகவே வாழ்ந்திருக்கின்றனர்!




சரி, இனி நான் சொல்ல வந்த விஷயத்திற்க்கு வருகிறேன்.

நாம் இன்று பல தேசங்களிலும் அலைந்து திரிந்து பொருள் சேர்த்து வரும் இந்த விளைவு அன்று நாம் இழந்தவற்றின் எதிர்விளைவே. நாம் இழந்தவற்றை நியாயமான வழிகளில் மீண்டும் நம் இந்தியாவிற்க்கு கொண்டு சேர்க்கும் நமக்கு ஏன் வந்தேரிகள் என்றால் கோபம் வர வேண்டும்?

நாம் கவலைப்பட தேவையில்லை. சொல்லப்போனால் நாம் எல்லோரும் ஒரு வகையில் ஒருவித படைவீரர்கள். கத்தியின்றி, ரத்தமின்றி நாம் இழந்த செல்வத்தை நியாயமான முறையில் மீண்டும் அன்னிய செலாவணியாய் நம் தாய்நாட்டிற்க்கு கொண்டு சேர்க்கிறோம். அதை சில நேரங்களில் சில கபோதிகள் கொள்ளையடித்து விடுகிறார்கள், என்றாலும் நம் தேசம் திருந்தும் என்று நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தான் வாழ்க்கை என்று போதித்திருக்கிறார்கள்.

இப்போது என்னுடன் வேலை செய்யும் சக வெள்ளையர்களிடமே நான் இது குறித்து பேசியிருக்கிறேன். கம்பெனி டின்னர்களில் அவனும் போதை, நானும் போதை! (நீயும் போதை, நானும் போதை, நினைத்துப்பார்த்தால் எல்லாம் போதை!)

போதையை சாக்கு வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். You guys looted us!, You emptied India என்று ஒரு நாள் என் முதலாளியின் முகத்தைப்பார்த்தே சொன்னேன் (போதையில் தான்). Yes, I agree with you, it is not fare என்று சொல்லிவிட்டு இன்னமும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறான் (கடவுள் புண்ணியம் தான்).

அய்யா புண்ணியவான்களே, ஏதோ வந்தோம், வேலைசெய்தோம், பணம் சம்பாதித்தோம், நாட்டிற்க்குத்திரும்பினோம் என்று இருங்கள். 50 ஆண்டுகளாய் வேலைசெய்கிறேன், சவுதிஅரேபியா எனக்குத்தான், பாதியைக்கொடு என்று யாராவது கேட்டால் அதற்க்கு நம் நிர்வாகம் பொருப்பல்ல என்பதை மெக்காலே அறிவுடன், தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

வந்தேரி, வசந்தா நடேசன்.

2 comments:

  1. // போதையை சாக்கு வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். You guys looted us!, You emptied India என்று ஒரு நாள் என் முதலாளியின் முகத்தைப்பார்த்தே சொன்னேன் (போதையில் தான்). Yes, I agree with you, it is not fare என்று சொல்லிவிட்டு இன்னமும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறான் (கடவுள் புண்ணியம் தான்). //

    ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
  2. போதை இல்லாவிட்டால் நமக்கு ஏது அத்தனை தைரியம் வரப்போகிறது!!ஹி... ஹி... ஹி...
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete