Tuesday, December 28, 2010

இணையத்தில் வந்த கதை 2

முதலில் எழுதிய வந்தகதையின் தொடர்ச்சி..

சரி இன்டர்நெட் வரும்போது வரட்டும் மீண்டும் தமிழ்ச்சேவை தொடங்க தீர்மானித்தேன்.. நாம் எழுதாவிட்டால் பதிவுலகம் என்ன ஆகும் என்று அநியாயமாய் கவலை வந்தது. பதிவுலகில் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன், ஆயிரம் கேள்விகள் அநியாயமாய் அடுக்கடுக்காய் வந்தது..

நான் ஒரு இலக்கியவாதியோ கவிஞனோ இல்லை, கிலோ என்ன விலை கேஸ் தான்! கதை எழுதவும் தெரியாது! கட்டுரைகளோ துணுக்குகளோ கூட எழுதியது இல்லை, சரி ஜோக் ஏதாவது என்றால் அந்த ஞானமும் நஹி.. பழகியவர்கள் எல்லாம் என்னை சீரியஸ் ஆசாமி என்றே சொல்லியிருக்கிறார்கள்!

ஏதோ சிறு வயதில் கொஞ்சம் கதைகள் படித்திருக்கிறேன். கன்னித்தீவு(!), டார்ஜான் (!) சிலகாலம் தொடர்ந்ந்ந்து நாகர்கோவில் வடசேரியில் வீட்டுப்பக்கம் லைப்ரரியில் படித்திருக்கிறேன் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில தினசரிகளும் வாராந்திரி மாதாந்திரிகளும் படித்திருக்கக் கூடும். அதிக பட்சம் ஸ்கூல் நாட்களில் சில பல அத்தியாயங்கள் குமுதத்தில் கடல் புறா, கல்கியில் பொன்னியின் செல்வன்... கல்லூரி பருவங்களில் ரசித்தவை, பாலகுமாரன், சுஜாதா, மதன். எல்லாம் அப்போது இருந்து இப்போது காணாமல் போய்விட்ட மடத்துவாசல் தெரு லைப்ரரியிலோ, திருவள்ளுவர் லைப்ரரியிலோ தான். வறுமைக்கோட்டை எப்படி தாண்டுவது என்ற சிந்தனையிலேயே இளமையில் பல காலம் கழிந்து விட்டது என்றாலும் படிப்பதில் ஆர்வம் இருந்தது உண்மை.

முதலில் வந்தகதையை எழுதுவோம், இலக்கணமா இல்லை இலக்கியமான்னு அப்புறம் பாத்துக்கலாம், வடசேரி கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் (சத்தியமா எங்க ஸ்கூல் பேரு அதான் சார்! இப்ப என்ன பேரு வச்சிருக்காங்களோ தெரியவில்லை, அடுத்தமுறை போகும் போது பார்க்கவேண்டும்) கோலப்ப வாத்தியார்ட்ட ஒண்ணாப்பு படிச்சி வளர்ந்த நான் இது எழுதியதே சாதனை தான், கோலப்ப வாத்தியார் இதை ஒரு வேளை படிக்க நேர்ந்நதால் புல்லரித்துப்போய்விடக்கூடும்..

பொதுவாக எழுத வருபவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கக்கூடும், சமூகத்தை திருத்தவேண்டும் என்று கங்கணம் கட்டி எழுத வரலாம், பெயர், புகழ், பணம் சம்பாதிப்பது சிலவேளை நோக்கமாக இருக்கக்கூடும், சிலர் பக்திப்பூர்மாய் விரதம் இருந்து, மாலை போட்டு ஆன்மிகத்தை வளர்க்கப்போறேன் என்று வரக்கூடும்!

நமக்கு இது ஒன்றும் நோக்கம் இல்லை, பின்ன ஏண்டா வந்தன்னு உங்களுக்கு கோபம் வருவது நியாயமானதே! யார் கெட்டநேரமோ படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது, இணையத்தில் தமிழ் படித்தால் படித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது,, எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சர்யம் வந்தது, எவ்வளவு நேரம், எத்தனை புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்.

போகன் என்று ஒருவர் எழுத்துப்பிழை எழுதுகிறார், எங்கள் ஊர்க்காரர் போல் இருக்கிறது.. அகத்தியர் பற்றி நிறைய எழுதுகிறார், கொஞ்சம் அப்படி இப்படி (அழகாக, இனிமையாக சார்!) எழுதினாலும் அவர் கடையில் நிறைய சரக்கு இருக்கும் போல் இருக்கிறது., ரசிக்க முடிகிறது.

அவர் தளத்தின் வழியாக அப்பாத்துரை என்பவரின் தளத்துக்கு செல்லும் படி நேர்ந்தது, அது ஹோல் சேல் மால் போல்! அறிவுச்சரக்கு அதிகம், மோகவண்டாய் பல மணி நேரம் இந்த இருவரின் தளத்திலேயே சுற்றி வந்தேன். மலைப்பாக இருந்தது, நாமும் கொஞ்சம் எழுதிப்பார்த்தால் என்ன என்று ஒரு ஆசை வந்தது.

கண்டிப்பாய் இது பேராசை தான், அவர்களை கம்பேர் பண்ணினால் நம்முது வெறுங்கடை, இருந்தாலும் ஆசை யாரை விட்டது, என்னைப்போல் பலர் இணையத்தில் பொழுது போக்கு எழுத்தாளர்களாக இருப்பதைக் கண்டு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கட்டுரை வடிவில் ஏதேனும் எழுதலாம் என்று சுற்று முற்றும் சனி பகவான் நிற்க்கிறானான்னு பார்த்துவிட்டு இணையத்தில் வந்த கதை என்று பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்.

தமிழ் இணைய வட்டத்தில் நடக்கும் சண்டை, கூத்தைப்பார்த்தால் மனதுக்குள் ஒருவித பயம் வந்தது. சரி, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதலாம் என்று அதற்க்கான ரூல்ஸ் அண்டு ரெகுலேஷனை என் மனசாட்சியும் நானும் பேசுவதாய் கேள்வி பதில் பாணியில் நினைத்துப்பார்த்தேன். கலைஞர் மட்டும்தான் கேள்வி பதில் எழுதலாமா என்ன? இதோ வருகிறது..

மனசாட்சி : யாரு நீனு?

நான் : வசந்தா நடேசன்

மசா : உன் சர்ட்டிபிகட் பெயரா இது?

நான் : சத்தியமா இல்லைங்க

மசா : ஏன், பெயரச்சொல்ல தெகிரியம் இல்லையோ?

நான் : ஆமாங்க. காலம் இருக்கிற இருப்புல எதுக்குங்க வம்பு , நம்ம வாய் வேற சும்மா இருக்காது. வேலில போறத வேட்டிக்குள்ள உட்டாப்ல ஆயிரக்கூடாது பாருங்க.

மசா : சரி, என்ன எழுதப்போர?

நான் : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, கொஞ்சம் கதை, கொஞ்சம் கவிதை

மசா : கண்ணால பாக்கறது, காதால கேக்கறது, சரி, அது என்ன கொஞ்சம் கதை, கவிதை, இதுக்கு முன்னால எழுதியிருக்கியா?

நான் : எங்கங்க, சின்னவயசுல சைட் அடிக்கும் போது கொஞ்சம் கவிதை எழுதிருக்கேன், சும்மா டிரை பண்ணலாம், காசா, பணமா? சும்மா டயரி எழுதற மாதி எழுத வேண்டியதான்.

மசா : மவன, நீ டயரியே ஜனுவரி 1க்கு பொறவு வாழ்க்கைல எழுதினதே இல்ல, எங்க போட்டு? என்ன தெரியும் உனக்கு?

நான் : என்ன அப்டி சொல்லீட்டீங்க.. டெபிட், கிரடிட் தெரியும்ங்க

மசா : அது எவனுக்கும் தேவைப்படல, தெரியும்ல?

நான் : தெரியுங்க, டெபிட் கிரடிட்னா கல்ல எடுப்பாங்க. சும்மா எதுனா டிரை பண்றங்க, வரலன்னா, அப்புரம் பாத்துக்கலாம்.

மசா : கருத்து சொல்லி ஒன்ன ஓட, ஓட தொரத்தப்போராங்க பாரு,

நான் : பாத்துக்கலாங்க, அஞ்சமாட்டம்ல. நாம சரின்னு படரத எழுதறோம், யாரு மனசும் நோகாம எழுதணுங்க. தப்புன்னா தயங்காம கால்ல விழுந்துருவோம்ல!

மசா : இது தேவையா? எதுக்கு எழுதணும்? எதுக்கு கால்ல விழுணும்?

நான் : பொழுது போகணுங்களே? தப்புன்னா கால்ல விழருதல தப்பே இல்லீங்க.

இப்படித்தான் வந்தேன், கோடிக்கணக்கான(!) ஈமெயில்கள் வந்த கதையை முடிக்க வேண்டி வற்ப்புருத்தியதால், அன்றே எழுதி வைத்திருந்ததை ஓரளவுக்கு ப்ரூஃப் பார்த்து ஒரு வழியாய் இன்று முடித்திருக்கிறேன், Sorry for the Delay!

ஒருவழியாய் இண்டர்நெட் கனெக்ஷ்னனும் வந்து இதை பாதியில் விட்டுவிட்டு வேறு சிலவும் எழுதியிருக்கிறேன், ஏதோ யாவாரம் சுமாரா போகுது. இதுவரை யாரும் கல்லைத்தூக்க வில்லை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இணையத்தைத்தான்! நாம ஓடிப்போயிருவோம்ல.

அன்புடன், வசந்தா நடேசன்.

No comments:

Post a Comment