Monday, December 20, 2010

இணையத்தில் வந்த கதை

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் தமிழ்மணம் மேய்வது வழக்கம். ஒரு நேரத்தில் அது போதையாகவே மாறி ஆபிஸ் வேலையை விட்டு மேய்ச்சலுக்கே நேரம் சரியாகப்போயிற்று,, சரி இது தொடர்ந்தால் வேலைக்கே டிஸ்கி ஆகிவிடும் என்று பயந்து அதை விட்டு விலகி மீண்டும் என் மனைவி சொல்வது போல் ஆபிஸ் கழுதையாகவே மாறி பல காலம் ஆயிற்று.

இருந்தாலும் போதை விடுமோ? மீண்டும் துளிர்த்தது,, அடங்குடா என்று சொல்லிப்பார்த்தும் மனம் அடங்குவதாய் தெரியவில்லை,, தொடங்குடா என்றது ! ஜாதக தோஷம்! (எனக்கா அல்லது படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கா தெரியவில்லை!) வேறு வழி தெரியாமல் என்ன செய்யலாம் வேலையா? இணையமா? என்ற ரீதியில் மனதிற்க்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு வழியாய் ‘இரண்டும் தேவையே‘ என்று லியோனி பாணியில் முடிவு செய்து, அதற்க்கான திட்டமிடல் ஆரம்பம் ஆனது,, இணையத்திற்காக வேலையை இழக்கமுடியாது என்பது வேறு விஷயம்!

ஆபிஸ் முடிந்து மாலை ஐந்தரைக்கு வீட்டுக்கு வந்தால் வேறு வேலை ஒன்றும் பெரிதாக இல்லை, சமையலைத்தவிர! (நான் துபையில் வேலை பார்க்கும் ஒரு அனாதப்பய தான், குடும்பம், குட்டிங்கள்ளாம் ஊர்ல இருக்காங்க சொகமா !) சமையலுக்கு ஒரு அரை மணி நேரம் நான் உதவினாலே போதும் மீதியை உடனிருக்கும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. இங்கே குளிர் காலம் இப்போது தொடங்கி விட்டதால் மாலை வாக்கிங் போய் ஒரு வாரம் ஆயிற்று,, சமையலும், இரண்டு லார்ஜ் அடித்து பின் சாப்பிட்டு (இடையிடையே சன் டிவி பார்த்து) பதினொரு மணிக்குத் தூங்கினால் மறுநாள் காலை ஆறு பத்து அலாரம்!

மாலை வேளை இனி இணையவேளை என்று முடிவு செய்தேன் ஆனால் அதற்க்கான பட்ஜெட் மற்றும் செயல் திட்டம் மலைப்பைத் தந்தது! ஒரு மடிகணிணியும், இன்டர்நெட்டும் முதலில் தேவை, இரண்டாவதாக தமிழ் டைப்பிங் கற்றுத் தேரவேண்டும்! நான் ஒன்றும் இலக்கியம் எழுதப்போவதில்லை என்றாலும் முடிந்தவரை தப்பில்லாமல் எழுதவேண்டும் என்று நினைத்ததே காரணம்!

துபையில் சிலகாலமாய் எல்லோரும் லேப்டாப்பும் கையுமாக அலைகயில் நான் மட்டும் நீண்ட நாளாக வேண்டாம் என்று தள்ளிப்போட்டது தவறென்று பட்டது.. கிட்டத்தட்ட கழிந்த இருபது ஆண்டுகளாக வேலைநாட்களில் எல்லாம் ஆபிஸில் கணிணியுடன் மாறடித்து மாறடித்து வீட்டிற்க்கு வந்தும் அது வேண்டாம் என்று வெருப்பில் இருந்தேன் என்பதே உண்மை, விதி யாரை விட்டது, ஆஜர் போட்டாகிவிட்டது இனி ஆடித்தான் ஆகவேண்டும்!

ஒரு சுபவேளையில் கிரடிட் கார்டு உரசி மடிகணிணி வீட்டிற்க்கு வந்தது, இனி தமிழ் கற்க வேண்டும், கற்றபின் இன்டர்நெட் எடுக்கலாம் என்று முடிவெடுத்து துவங்கினால் இடையில்
தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் எண்ணம் வந்து, ஆபிஸிலும் ‘ஓகே‘ சொன்னதால் எல்லாம் போட்டது போட்டபடி பறந்து விட்டேன்,, Back to Family Life, 22 நாள் ஊரில் இருந்தேன், வந்து மீண்டும் துவங்கினேன்.. அவ்வளவு சுலபத்தில் தமிழ் டைப்பிங் கைவரவில்லை, விட்டுவிடுவோமா என்ன? வந்துட்டோம்ல?

இப்போது ஏதோ கொஞ்சம் டைப்ப முடிகிறது என்றால் இதற்க்கு முதலில் ஆசான் சாப்ட்வேருக்கு ஒரு நன்றி தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நன்றி கெட்ட பாவி ஆகிவிடுவேன்! நல்லாத்தான் கத்து கொடுக்கிறாங்க சார்.. தப்பு தப்பாக தமிழெழுதும் பதிவர்கள் இதைப்பயன்படுத்தி என்னைப்போல் குறைந்த அளவு தப்புகளுடன் எழுதலாம். வாழ்த்துக்கள். 12 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னாலும் உண்மையில் அதைவிட குறைவான நேரமே போதும். அருமையாக டிசைன் செய்திருக்கிறாகள், Chennai Kavigal\Aasaan\Aasaan.exe க்கு மீண்டும் ஒரு நன்றி!

தமிழ் டைப்பும் வேகம் இன்னும் வரவில்லை என்றாலும் கைகள் துடிக்கிறது, என்ன செய்வது எழுத்துக்காரனாய் ஆகி விடுவது என்ற முடிவை மாற்றுவது இல்லை என்று தீர்மானித்து துவங்கிவிட்டேன். டைப்ப, டைப்ப வேகம் வந்துவிடும் என்று தெரியாதா என்ன?

கழிந்த 2 நாட்களாய் இன்டர்நெட்டுக்கு அலைகிறேன், (துபாயில் தான் சார்!)
முதல் நாள் Shindaga Etisalat போனால் வீடு இருக்கும் கட்டிடத்தில் உள்ள வொர்க்கிங் நம்பர் கேட்டார்கள்! இந்த பில்டிங்கில் இருப்பதே நாலு ஃப்ளாட் தான், யாரிடமும் இல்லை என்றேன், அப்ப Al Kaleej Centre Etisalat போ என்றார்கள், அங்கு தான் வொர்க்கிங் நம்பர் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் கொடுக்கும் வசதி இருக்கிறதாம் ! Tenancy contract கொண்டு போ என்றார்கள், சரிங்க சார் என்று அடுத்த நாள் Al Kaleej Centre Etisalat போனால் அங்கே பில்டிங் பிளாட் நம்பர் கேட்டார்கள், டெனன்சியில் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டாகளாம். லேண்ட்லார்டிடம் கேட்டு முனிசிபாலிட்டி கொடுத்திருக்கும் survey plan வாங்கவேண்டுமாம்! நடக்கிற கதையா? வழக்கமாய் இது போல் வேலைகள் இங்கே ஒரே விசிட்டில் முடிந்துவிடும்,

நமக்கு நேரம் சரியில்லையோ என்று ஒரு ஆயாசம் வந்துவிட்டது, நமது தமிழ்ச்சேவை அவ்வளவு தான் என்று வெருத்துப்போய் பத்து நிமிடத்தில் காருக்கு திரும்பினேன், பார்க்கிங் போட்ட 2 திர்கம் தண்டம் ஆக வேண்டாம் என்று பக்கத்தில் உள்ள சிட்டி மார்ட் அல் மயாவில் ராத்திரி சாப்பாட்டுக்கு ரவையும் பழமும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் போதே முன்பு DEWA (Dubai Electricity and Water Authority) கனெக்ஷனுக்காக லேண்ட்லார்ட்டிடம் ஏதோ பேப்பர் வாங்கியது நினைவு வந்தது, வந்து வேகமாய் பைலை புரட்டினால் survey plan தான், தப்பினேன்டா சாமி என்று எடுத்து வைத்தேன் அடுத்த நாள் கொண்டு செல்லலாம் என்று ! எப்போதும் கையில் கிடைக்கும் முக்கியமான எல்லா பேப்பர்களையும் காப்பி எடுத்து வைப்பது எவ்வளவு நல்லது என்று நினைத்துக்கொண்டேன்.

சத்தியமா சுருக்கமா தான் சொல்ல நினைத்தேன், கொஞ்சம் நீண்டு விட்டது, நம்ம கைல என்னங்க இருக்கு! இரண்டு நாட்களாய், கைவசம் இருந்த ஈமெயில், இத்துப்போன கவிதை, சுட்ட கவிதைன்னு ஓட்டியாயிற்று, சொந்தமா எழுதலைன்னா உலகம் நம்மள பத்தி என்ன நினைக்கும் என்று கைவலிக்க, வலிக்க எழுதியாயிற்று. துபாயின் இரவு வாழ்க்கை அழைக்கிறது.

மீண்டும் நாளை வருகிறேனே. நன்றி.

அன்புடன், வசந்தா நடேசன்.

No comments:

Post a Comment