Tuesday, September 27, 2011

கட்டிங், கட்டிங்..

வணக்கம் நண்பர்களே.

சிறுவயது மலரும் நினைவுகள் என்றுமே மனதுக்கு நிறைவானவை.. மீண்டும், மீண்டும் எத்தனை முறை வாழ்க்கையில் அசை போட்டாலும் அலுப்பை தராதவை. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்வதற்காக செய்த அளும்புகளை கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்.

சிறு வயதில் எனக்கு குருவிக்கூடு வைத்து என் அம்மா தலை சீவி விடுவார்கள். நல்ல வேளையாக குடுமி ஸ்டைல் இருந்த காலத்தில் பிறந்து தொலைக்காமல் இருந்தேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டதுண்டு. இடது உச்சி எடுத்து தலை சீவிவிட்டு, வலது பக்கம் படிந்துள்ள முடியை அப்படியே பின்னால் கோறிவிட்டு ஒரு மூணு இஞ்ச் முன்னந்தலையில் விட்டு விட்டு வலதுபக்கமாய் பணித்து சீவி விட்டால் அதுதான் குருவிக்கூடு ஸ்டைல்.

மிகச்சிறு வயதில் எங்கே குருவி நெசமாலுமே குடி வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் தான். நீண்ட நாட்களாக, ஒரு அஞ்சாப்பு அல்லது ஆறாப்பு படிப்பது வரை ஐயா இந்த ஸ்டைல் தான். பின்னர் ஒரு சுப தினத்தில் இனி குருவிக்கூடு சரிவராது என்று வெறுமனே இடது உச்சி எடுத்து பணித்து சீவிக்கொள்ள ஆரம்பித்தேன்.

பின்னர் வந்தது பாருங்கள் ஹேர் ஸ்டைலில் ஒரு புரட்சி.. ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் வந்து எல்லா இளைஞர்களை பாடாய் படுத்தியது மறக்க முடியாதது. பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஸ்டைலாக இது இருந்தது.. வணங்காத முடியையும் ஹீட்டர் போட்டு ஒரு அளவுக்கு வளைத்து முக்கால் காதை மூடிக்கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்தார்கள் என்று நினைக்கிறேன்..

சினிமா உலகிலும் இந்த ஸ்டைல் பிரபலம். ஒரு தலை ராகம் சுதாகர், கமல ஹாசன் என்று எல்லோருக்குமே ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் தான் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு. இடையிலேயே சுதாகர் எல்லாம் காணாமல் போனது வேறு கதை.

என்னுடைய அப்பா அப்போது முடி வெட்டிக்கொள்ளும் கடையில் தான் நானும் அப்போது முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது என் வீட்டில் எழுதாத சட்டம். கொஞ்சம் வளர்ந்ததும் இந்த சட்டத்தை மாற்ற நிறைய போராடியிருக்கிறேன். இப்போது ரோடுக்கொரு ஏ.சி சலூன் வந்து விட்ட நிலையில் நான் ஊருக்கு சென்றால் என் பையன் வெட்டிக்கொள்ளும் கடையில் நானும் முடி வெட்டிக்கொள்கிறேன், காலம் எவ்வளவு மாறியிருக்கிறது!

நானும் ஸ்டெப் கட்டிங் வெட்டிக்கொள்வதற்காக நிறைய சலூன்களை அப்போது மாற்றியிருக்கிறேன். நம் ஊர் சலூன்களில் ஹீட்டர் முதலிய அட்வான்ஸ் கருவிகள்(!) அறிமுகம் ஆனது அந்த காலம் தான். ஹீட்டர் போட்டுக்கொண்டால் முடி கொட்டி விடும், சீக்கிரம் நரைத்துவிடும் என்று பெருசுகளிடம் இருந்து மிரட்டல்களும் வருவதுண்டு.

பத்தாப்பு, பதினொண்ணாப்பு படிக்கும் போது யாருக்கு அதைப் பற்றி கவலை?? கலங்காமல் மாறி, மாறி ஹீட்டர் போட்டு பணிய வைத்த தலை என்னுடையது!

தெருவுக்கு தெரு அப்பாயிண்ட்மென்ட் எடுத்து/கொடுத்து சைட் அடித்த காலம் அது, இவள் செட்டாவாளா? அவள் செட்டாவாளா என்று அலைவோம். அப்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இவ்வ்வ்வளவு சோஷியலாய் இல்லை என்பது ஒரு குறைதான்.

கடைக்கண் பார்வைக்காக உயிரையே விட துணிந்திருந்த நம்மை முடி கொட்டிவிடும், நரை வந்துவிடும் என்பதெல்லாம் மிரள வைக்கவில்லை. முடிவெட்டிக்கொள்வதற்காக வடசேரியிலிருந்து செட்டிகுளம் ஜங்ஷன் வரை சைக்கிளை அளுத்திக்கொண்டு போயிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பின்னர் வந்தது தான் இப்போதைய டிஸ்கோ கட்டிங்.. கார்த்திக், கமல் ஹாசன் எல்லாம் இந்த ஸ்டைலுக்கு முதலிலேயே மாறி விட்டார்கள். என்னுடைய நண்பன் ஒருவன் அவன்தான் நாகர்கோவிலிலேயே முதன் முதலாக இந்த ஸ்டைல் வைத்துக்கொண்டதாக இந்த பேச்சு வரும்போதெல்லாம் அப்போது பீற்றிக்கொள்வான்.

நான் இன்றுவரை அதே டிஸ்கோவுடன் நிறுத்திக்கொண்டாலும், (ஆமா.. இப்ப மாத்திட்டா மட்டும் நாம சைட் அடிக்கவா போகப்போறோம்? இல்ல வீட்டம்மா தான் உட்ருமா??)

ஆனாலும் இப்போது வித விதமாய் ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு பைக்கில் சுத்தும் என் பையனைக் கண்டு கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறேன்.

ம்ம், நாளை அவனுக்கு அசை போட இன்றைக்கு நிறையவே ஸ்டைல்கள் உள்ளன! நம் வாயிலேயே அந்த ஸ்டைல் பெயர்கள் நுழையவில்லை என்பது தான் நிஜம்.

அன்புடன், வசந்தா நடேசன்.

1 comment:

  1. யோவ் கட்டிங் கட்டிங்க்ன்னு சொன்னதும் என்னவோன்னு நினைச்சு உள்ளே வந்தேன்...

    ReplyDelete