Wednesday, August 3, 2011

திருப்பம்

வாழ்வில் ஏதேதோ நாம் நினைக்காத பல விஷயங்கள் பல சமயங்களில் நடந்து விடுகிறது. அதற்கெல்லாம் நாம் காரணம் தேடினால் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

என்னைப்பொருத்தவரை நான் ஒரு பெரும் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக இந்த பதிவுலகிற்கு வரவில்லை. ஏதோ பொழுதுபோக்கு. சில காலங்கள் ஏதோ தோன்றியது, எழுதினேன், பின்னர் ஒரு சிறு இடைவெளி விடும் கட்டாயம் வந்தது. பின்னர் நான்கு மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் ஒரு தொடக்கம்.

சரிப்பா, எங்க போன இந்த நாலு மாசம்? என்று ஒரு கேள்வி பிறப்பது இயல்பு. மனிதனுக்கு பல சமயங்களில் பல பொழுதுபோக்குகள், சில நாலு மாதமாய் நான் சினிமா பார்ப்பதை பொழுதுபோக்காய் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இந்த சினிமா பைத்தியம் பிடிப்பதற்குமுன் ஊரில் நான் தியேட்டருக்குப்போய் சினிமா பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என் மனைவியும் அதற்கு வற்புருத்தியதில்லை, அதனால் தப்பித்தேன்.

சிறுவயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன், வாழ்வில் பணத்திற்கான தேடலில் மூழ்க ஆரம்பித்தபின் சினிமாவுக்கான ப்ரியாரிட்டி குறைந்து போனது, எப்போதாவது நேரம் கிடைக்கும் போது டிவி யில் பார்த்தால் தான். கடைசியாக நான் தியேட்ருக்கு சென்று சினிமா பார்த்தது கோகுலத்தில் சீதை என்ற ஒரு அர்ஜீன் படம். குடும்பத்துடன் தான், என் மனைவியுடன் முதலில் பார்த்த படம். நாகர்கோவில் தங்கம் தியேட்டரில் என்று ஞாபகம்.

இங்கே துபாய் ஜீவிதம் ஆரம்பித்ததும், சில பல நேரங்களில் அலுவலக நண்பர்களுடன் சினிமாவிற்கு போனதுண்டு. ஓசி டிக்கெட். புதிய தமிழ் சினிமாக்கள் வரும்போது சில சமயங்களில் எங்களுக்கு 10 அல்லது 15 ஓசி டிக்கட்டுகள் கிடைக்கும், ஷிப்பிங் கம்பெனிகளில் இருந்து கொடுப்பார்கள்.

அதற்குப்பின் கழிந்த நாலு மாதங்களில் தினமும் ஒரு சினிமா பார்த்திருப்பேன், சமீபத்திய வெப்பம் சினிமா முதல் ஒரு நாலு வருடங்களுக்கு முன் வரை வெளிவந்த எல்லா முக்கியமான சினிமாக்களும் முடித்து விட்டேன். ஏதோ ஆவேசம் வந்தது போல் தினமும் டொவுன்லோட் செய்து ஒன்று அல்லது இரண்டு சினிமாக்கள்.

அப்போது தான் புரிந்தது, சினிமாவில் இருக்கும் மோகம் எத்தகையது என்பது. நானும் ஒரு காலத்தில் சிவாஜி ரசிகன் தான், பின்னர் புன்னகை மன்னன் வெளிவந்த போது முதல் நாள் (தீபாவளி அல்லது பொங்கல் அன்று?) முதல் காட்சிக்கு அடித்து பிடித்து போனது நினைவில் உள்ளது. ஆனால் அப்போதைய புரிதல் வேறு, இப்போதைய புரிதல் வேறு.

சரி, இனி பார்ப்பதற்கு புதியதாய் ஏதும் இல்லை என்ற ஒரு நிலை வந்ததும், அடுத்த பொழுது போக்காய் பொட்டி தட்ட வந்து விட்டேன். மன்னிக்கவும் இனி மொக்கைகள் தொடரும், எனக்கான அடுத்த தேடல் அல்லது அடுத்த பொழுதுபோக்கு மாட்டும் வரை கொஞ்சம் கஷ்டம் தான், பொருத்துக்கொண்டு அவ்வப்போது வந்து செல்லுங்கள்.

ஒரு விஷயம் உறுதி செய்து கொண்டேன், இனி தமிழ்மணம் அல்லது இன்ட்லியில் பதிவதில்லை, இந்த நாலு மாதங்களில் பல சமயங்களில் பல விஷயங்கள் இணையத்தில் வாசிக்கவும் செய்தேன். என் எழுத்தின் தரம் என்ன? என்ற ஒரு புரிதல் வந்துவிட்டது.

ஒருவேளை அப்படி ஒரு தரம் உள்ளது என்றோ அல்லது இதை பலர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ கண்டிப்பாக தமிழ்மணத்தில் பதிகிறேன். இனி முடிந்தவரை தினமும் சந்திக்கலாம்.

அன்புடன்

வசந்தா நடேசன்

No comments:

Post a Comment