Friday, June 10, 2011

ஊழல்?

நாடெங்கும் ஊழல் குறித்து பரபரப்பாக இருக்கும் போது சரி நம் எழுத்துக்கடையில் அதுபற்றி எழுதாவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் ஒரு சிறு பதிவு.

அன்னா ஹசாரே இது குறித்து ஒரு போராட்டத்தை ஆரம்பித்த போது அவர் போட்டோவை பார்க்குமுன்பு சரி ஏதோ இளைஞர் போல் இருக்கிறது, நியாயம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள், சரி இந்தியா இனி உருப்பட்டுவிடும் என நினைத்தேன். பின்பு அவர் போட்டோவை பார்த்ததும் இது என்ன எழவுடா இது, இந்த மனிதர் இத்தனை நாள் எங்கிருந்தார்?? என்ற எண்ணம் தான் மனதில் வந்தது.

60 அல்லது 70 வயதுக்குக்கு மேல் திடீரென்று ஒருநாள், சரி, எல்லாரும் வாங்க, ஊழலை ஒழிக்கலாம் என்றால்?? ஒரு வேளை நம் ராசாக்களும், கனிகளும் தென்னகத்திலிருந்து சென்று செய்த மெகா ஊழல்களை பார்த்து மலைத்துப்போய், அடடா.. நாம் வட இந்தியாவில் இத்தனை நாள் இருந்தும் இது தெரியாம போச்சே என்று ஷாக்காகிப்போய் திடீரென்று முளைத்து வந்த காளானைப் போல தான் என்று சரியோ, தவரோ ஒரு எண்ணம் வந்தது நிஜம்.

இந்த கூத்தை பார்த்து விட்டு அப்புறம் ராம்தேவ் யோகா சாமியார்? அடுத்தது! காங்கிரஸ் தனக்கு மாற்று இல்லை, போட்டி இல்லை என்று தெனாவட்டாய் இருந்து கொண்டிருக்கும் போது இப்படி ஆளாளுக்கு ஆரம்பிப்பதை பார்த்து என்னடா நடக்கிறது என்று அவர்களும் இப்போது மண்டை காய்ந்து புதிதாக ராம்தேவின் சொத்து என்ன, பத்து என்ன என்று புதிதாய் கணக்கு பார்த்து, கேட்டு, அந்த சாமியாரும் எனக்கு 1100 கோடி சொத்து இருக்கிறது என்று டிக்ளேர் செய்வதும், மேலும் என்னென்ன நிறுவனங்கள் இருக்கிறது என்றால் சொல்ல மாட்டேன் என்பதும் மனதில் ஏதேதோ எண்ணங்களை வரவைக்கிறது.

சாமியாருக்கு எதுக்குடா சொத்தும், பங்களாவும்? இந்த ஆள் பின்னால் தொடர்வதற்கு எங்கிருந்து கூட்டம் வருகிறது? நம் மக்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்களோ??

இதற்கிடையே நம் கலிஞ்ங்கர்ஜீ தாத்தா திடீரென்று முழித்துக்கொண்டு நாங்கள் 1971லியே ஊழலை ஒழிக்கும் தீர்மானம் போட்டுவிட்டோம் என்று நானும் உண்டு என்று ஆரம்பித்துள்ளார். இவர் சைலன்ட்டாய், சத்தம் காட்டாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம், அத்தனை அனுபவசாலி என்று ஊருக்கே தெரியும்.

காங்கிரஸ் இப்போது ராம்தேவ் பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்று பிரச்சாரம் பண்ண ஆரம்பித்திருப்பது வீணாய் பி.ஜே.பியின் வாக்கு வங்கியை அதிகரிக்கத்தான் உதவப்போகிறது. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதேதோ சொல்கிறார்கள்.

அ.தி.மு.க வினர் வெற்றி மமதையில் ஏதேதொ செய்து கொண்டிருக்கிறார்கள், பாடம் படித்திருந்தால் சரி, இல்லாவிட்டால் நம் வாக்காளர்களுக்கு இன்னொரு பாடம் படிப்பிக்கும் வேலை இருக்கும்.

தலைகீழ் ஆட்சி மாற்றம் வந்த பின்னும் அரசியல் வாதிகள் வாக்காளர்களின் பலத்தை தெரிந்து கொண்டதாய் தெரியவில்லை, நடுநிலையாளர்களின் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை அன்றும் தீர்மானித்தது, இன்றும், இனிமேலும் தீர்மானிக்கப்போகிறது, தற்கால அரசியல் மூடர்கள் என்று இதை புரிந்து கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.

என்னை பொருத்த வரை எந்த லோக்பால் வந்தாலும் இந்தியாவில் இனி ஊழல் ஒழியப்போவதில்லை. அதை ஒழிப்பது என்றால் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது, அவர்கள் ஒரு கூட்டு இயக்கம் போல் ஒன்றை ஆரம்பித்து வேரிலிருந்து அதை அழிக்க வேண்டும், நான் சொல்வது புரட்சி போன்றது அல்ல, மக்கள் இயக்கம், சாத்வீகமான மக்கள் இயக்கம்.. ஒருவருக்கொருவர் ஊழல் பற்றி பேசி, லஞ்சம் கொடுப்பதில்லை என்பதில் உருதியான செயல்பாடுகளை கொண்டு வருவது. அதை பரவலாக்குவது. இப்படி புதிதாக ஆரம்பித்தால் மக்கள் ஆதரவும் இருக்கும் என்றே தோன்றுகிறது.

ம்ம்ம், பார்த்துக்கொண்டிருப்போம், நம் மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது, ஆப்படிப்பது எப்போது என்பது அந்த ஒரு மகிழ்ச்சி இப்போது இருப்பது உண்மைதான்.

அன்புடன், வசந்தா நடேசன்

1 comment:

  1. மக்கள் ஊழல் பிரச்சனையில் அதிிகம்
    பாதிக்கப்பட்டுள்ளார்கள்
    என்வே ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும்
    ஆதரவு தர தயாராய் இருக்கிறார்கள்
    அதை சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
    அவ்வளவே
    ம்...பார்ப்போம்
    சமூக சிந்தனைகளை தூண்டிச் செல்லும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete