Tuesday, January 25, 2011

நான் துபாய்ல பேச்சிலர்ங்க!

துபாய் வாழ் பேச்சிலர்களைப்பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன், ஓயாத வேலை நெருக்கடிகளின் இடையில் இன்று தான் நேரம் வாய்த்தது. எங்கே முன்னாள் பதிவர் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்களோ என்று அடித்து பிடித்து வந்திருக்கிறேன் சார்!

இங்கு இந்தியாவின் எல்லாமாநிலத்தை சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள். கேரளத்தவர்கள் அதிகம். அதற்க்கு அடுத்த இடத்தில் தமிழர்களும், தெலுங்கர்களும் இருக்கக்கூடும். கேரளத்தவர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழர்களுக்கு கடும் நெருக்கடி இருக்கும், அதேபோல் தமிழர்கள் அதிகம் வேலை செய்யும் கம்பெனிகளில் மலையாளியின் பல் பிடுங்கப்பட்டிருக்கும். இதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதலாம், அதை அப்புறம் வச்சிக்கிறேன்.

திருமணம் ஆனவரும், ஆகாதவரும் குடும்பத்தை ஊரில் விட்டு வந்துவிட்டாலே எல்லோரும் இங்கே பேச்சிலர்தான். அதிக சம்பளத்துடன் பேமிலிவிசாவில் மனைவியுடன் இங்கே வருபவர்கள் அனைவரும் பாக்யசாலிகளே! நம்ம தலையெழுத்து வேறங்க..

திருமணம் முடிந்து 9 வருடங்கள் நான் குடும்பத்துடன் தான் ஊரில் வசித்தேன், பின்னர் வந்த ஒரு போதாத வேளை (நல்ல நேரமோ? பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜனகராஜ் போல் அலராமல் வருடத்தில் பெரும்பாலும் இஷ்ட்டம் போல் வாழ்க்கை, நினைத்தபோது, நினைத்தபடி, நான் ரொம்ப நல்லவன் சார்!) இங்க வந்து மாட்டிக்கிட்டேன்.

இன்றே கம்பெனியில் திடீர்னு வீட்டுக்கு போடான்னு சொன்னா ஊருக்கு வந்தா ஒரு பொழப்பும் இல்லை. இப்ப லீவுல வந்தாலே நேரம் போவதில்லை, உடன் படித்த நண்பர்கள் எல்லாமே வேறு வேறு ஊரில் செட்டில் ஆகி விட்டனர். ஆகா, சுயசொறிதல் ஆரம்பித்து விட்டேனே.. மன்னிக்கவும், மீண்டும் கதைக்கு வருவோம்.

வந்த புதிதில் பெட் ஸ்பேஸ் தேடும் போது தான் ‘நான் பேச்சிலரா‘ன்னு ஒரு நிமிஷம் ஷாக்காகி ஒரு வழியாய் நானும் இங்க ஒரு பேச்சிலரானேன்.

புதிதாக வருபவர் எல்லோருக்கும் இங்கு பெட் ஸ்பேஸ் வாழ்க்கைதான். பெட் ஸ்பேஸ் வாடகை பல ரேஞ்சில் இருக்கும். குறைந்த பட்சம் 300 திர்கம் அதிகபட்சம் 1500 திர்கம். ஒரு பெட் ஸ்பேசுக்கு மட்டும் தான் சார்.

யாருடனும் எனக்கு ஒத்துப்போகாது, தனியே தான் வசிப்பேன் என்று அடம் பிடிச்ச கழுதையானால் 1500க்கு மேலும் கொடுக்க வேண்டியதிருக்கும். நான் 375க்கு பெட்ஸ்பேஸ் வாழ்க்கை ஆரம்பித்து இப்போது ஏதோ கிரைஸிஸ் புண்ணியத்தில் ஒரு சின்ன ஒன்பெட்ரூம் ஹாலில் பெட்ரூமை எனக்கு மட்டும் தனியே வைத்துக்கொண்டு ஹாலை வேறு நண்பர்கள் இருவருடன் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வருகிறேன். (இது தேவையாடா மக்களுக்குன்னு கேக்காதிங்க சார், கொஞ்சம் இடையே சுயசொறிதலும் வந்துவிடுகிறது)

இங்குள்ள பேச்சிலர் வாழ்வு எப்படி இருக்கும் என்பது அவரவர்க்கு கிடைக்கும் சம்பளத்தை பொருத்து மாறுபடும். சம்பளம் அவரவர் படிப்பும், எக்ஸ்ப்பீரியன்சும், தகுதியும் பொருத்தது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாக இங்கே வருபவர்களுக்கு 2000 திர்கம் முதல் 10000 வரை கிடைக்கும். வாடகை குறைவென்றால் குறைந்தது 10பேருடன் தங்க வேண்டியதிருக்கும், வாடகை கூடக்கூட நபர்களின் எண்ணிக்கை குறையும். இங்கே கொடுக்கும் வாடகையை பத்து வருடம் ஊரில் முதலீடு செய்தால் சொந்த வீடாகிவிடும்.

துபாயில் தான் வீட்டு வாடகை இப்படி அநியாயத்துக்கு அதிகம், இப்படி அதிகமாக இருப்பதால் கம்பெனிகளும் வீடு பற்றி இங்கே அதிகம் தலையிடுவதில்லை.. இவ்வளவு தருகிறேன், எங்க வேண்ணாலும் இருந்துக்கன்னுட்டு அவுக ஒதுங்கிருவாங்க.

இப்போது நிறைய புதிய வீடுகள் காலியாக இருந்தாலும் பர்துபாய் போன்ற நான் அதிகம் பழகிய இடங்களில் கிரைஸிஸ் தொடங்கிய நாட்களில் கொஞ்சம் குறைத்தார்கள், பின்னர் ‘வாடகை இவ்ளோ தான்ம்பூ, இருக்கறன்னனா இரு, இல்லன்னா நடைய கட்டு‘ கதைதான் சார்.

ஆனால் சவுதி, ஓமன் போன்ற அரபுநாடுகளில் வீட்டு வாடகை குறைவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதானல் அங்கே கம்பெனிகளே அவரவர் தகுதிக்கேற்ப்ப வீட்டைக்கொடுத்து விடுகிறார்கள்.

குடும்பத்தை ஊரில் வைத்து இங்கு தனிமரமாய் கழிந்தால் தான் ஏதோ கொஞ்சம் காசு வீட்டிற்க்கு அனுப்பி கொஞ்சம் மிச்சம் பார்க்கலாம்.

பல நண்பர்களுடன் இங்கே வசிப்பதால் நட்புக்கு பஞ்சமில்லை.. ரயில் பயணம் போல் எத்தனையோ பேர் 6 மாதம் 1 வருடம் வீட்டில் ஒன்றாய் வசித்துக்கொண்டு பின்னர் வேறு ஜாகைக்கு அல்லது வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். நிரந்தர நட்பு கொஞ்சம் குறைவுதான்.

சாப்பாடு மற்றும் இதர செலவுகள் சொந்தமாய் சமைத்தால் 300 முதல் 400க்குள் முடிந்து விடும். இதுவும் நபர்களின் எண்ணிக்கை பொருத்ததே, நபர் கூடக்கூட செலவு குறையலாம். ஹோட்டல் என்றால் 750 முதல் 800 ஆகலாம், நாமல்லாம் சொந்த சமையல்ங்க.. (ஈஸியாய் சமைப்பது எப்படி, என்னென்ன சமைக்கலாம்னு பதிவெழுதணும்னு ஒரு ஐடியா இருக்கு, பார்க்கலாம்)

பெரும்பாலும் அலுவலகமே போக்குவரத்தை கவனித்துக்கொள்ளும் இல்லையென்றால் அதற்க்கு இப்போதைய நிலவரப்படி 250 ஆகலாம்.

ஆக, வீட்டுவாடகை பற்றி சொல்லிவிட்டேன், சாப்பாட்டுச்செலவைப்பற்றி சொல்லி விட்டேன் இருக்கும் மற்ற சில பல பழக்கங்களையும் இந்த ரீதியில் கணக்கு பண்ணி (சிகரட் 90 முதல் 180 வரை பிராண்ட் பொருத்து, தண்ணி?? வீக் எண்ட் மட்டும் என்றால் 100, தினமும்னா 300) வீட்டுக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதும் போக மீதியை வைத்து எங்கள் வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதை ஒரு திர்கத்துக்கு ரூபாய் 12.50 என்று உத்தேசமாக ஒரு கணக்கு வைத்து ஒருவாறு நீங்களே கற்பனை செய்யலாம் என நினைக்கிறேன்.

இதைதவிர இங்கே எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் ஒரளவுக்கு அனுபவசாலி என்ற முறையில் தனிப்பதிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு நன்றி, வணக்கம்.

வசந்தா நடேசன்.

5 comments:

  1. ஆஹா... அப்படின்னா மனைவியை பிரிஞ்சு சந்தோஷமா தான் இருக்கீங்களா... வயித்தெரிச்சலா இருக்கு... ம்ம்ம் நடத்துங்க...

    ReplyDelete
  2. \Anonymous\Philosophy Prabhakaran\ராம்ஜி_யாஹூ வருகைக்கு நன்றி..
    //ஆஹா... அப்படின்னா மனைவியை பிரிஞ்சு சந்தோஷமா தான் இருக்கீங்களா... வயித்தெரிச்சலா இருக்கு... ம்ம்ம் நடத்துங்க...// ஆமாங்க சார், எப்ப வருவீங்க? ஏன் லேட்டு? ஒரு கேள்வியும் கிடையாது, இதுவும் ஒருவித சுகம் தான்.. நன்றி.

    ReplyDelete
  3. வாழ்க்கை பல விதம் நமக்கு ஒரு விதம் வேற என்னத்தை சொல்ல போங்க....

    ReplyDelete