Saturday, January 29, 2011

நீங்களுமா டாக்டர்?

விஜய் டிவி வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.. இங்கே இரவு 9,45..

எக்ஸ்பயர்டு மெடிசன் பற்றிய நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. காலவதியான மாத்திரை மற்றும் மருந்துகளை சாப்பிட்டு ஒரு குழந்தை இறந்து விட்டது குறித்தும், ஒரு சிறுமி கண்பார்வை இழந்ததை குறித்தும் சமீபத்தில் பிரிண்ட் மீடியாவில் பரபரப்பாக இருந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

பார்மஸிகளை பற்றி சொல்லிவிட்டு டாக்டர்களுக்கும் ஆப்படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லா குற்றச்சாட்டுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. சமீபத்திய என் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று இந்த பதிவு.

அதற்க்கு முன் நிகழ்ச்சியில் நான் பார்த்த ஒருவேளை நீங்கள் விட்டிருந்தால் கீழ்வந்தவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.

பேட்டியில் ஒரு நபர் டாக்டர்கள் மருந்து விற்ப்பதை தடை செய்யவேண்டும் என்றார்.. எனக்கும் இது சரி என்றே படுகிறது. அவர்களே மருந்து விற்ப்பதால் அவர்களிடம் இருக்கும் மருந்தை மட்டுமே எழுதுவார்கள், சுற்றுவட்டாரத்தில் எங்குமே அது கிடைக்காது. வேறு வழிஇல்லாமல் அங்கேயே வாங்கவேண்டியதிருக்கும் அதிக விலையில். டாக்டர்கள் மருத்துவத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளவேண்டும். வியாபாரத்தை வியாபாரிகள் பார்த்துக்கொள்ளட்டுமே.

தேவையில்லாமல் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று எடுக்க வைப்பார்கள் என்றார்கள். பலநேரங்களில் எனக்கும் இந்த சந்தேகம் வந்திருக்கிறது. இதை தவிர்ப்பதற்க்கு எல்லா டெஸ்டுகளுக்கும நிர்ணயிக்கப்பட்ட விலை போல் அரசே கட்டணத்தை தீர்மானிக்கவேண்டும் என்றார்கள். டாக்டர்களின் கமிஷனை ஒழிப்பதற்க்கு.

இரண்டுமே நல்ல பாயிண்டுகள். நான் இந்த இரண்டையுமே ஒத்துக்கொள்கிறேன். அரசு இதில் தலையிடவேண்டும். டாக்டர்கள் பில்டிங் கட்டியிருப்பதற்க்கும் மெஷினரி வாங்கியதற்க்கும் நோயாளிகளிடம் காசை பிடுங்குவது சரியில்லைதான்.

மற்ற ஒரு நல்ல விஷயம் பார்த்தது, துணைமுதலமைச்சர் ஸ்டாலின் கண்பார்வை இழந்த சிறுமிக்கு கண்பார்வை ஆப்பரேஷனுக்கான எல்லா செலவையும் அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்து விட்டதாக சொன்னார்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். நான் திமுக இல்லை, தற்போதைய அரசியல்வியாதிகள் மேல் எனக்கு நம்பிக்கை போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.

சரி, இப்போது என் அனுபவத்திற்க்கு வருகிறேன். ஊருக்குச் செல்லும் போது நான் அனேகமாக வருடத்திற்க்கு ஒருமுறை எல்லா டெஸ்ட்டுகளும் ஊரில் செய்து விடுவது வழக்கம். இங்கே மருத்துவகட்டணம் மிக அதிகம், மற்றும் இன்சூரன்ஸ் காசுக்கு ஆசைப்பட்டு டாக்டர்கள் மற்றும் பார்மஸிகள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். நானே பார்த்திருக்கிறேன், அதை எல்லாம் எழுதினால் நாறிவிடும், வேண்டாம்.. விடுங்கள். நாம் இந்தியாவில் நடப்பதைப்பார்ப்போம்.

நான் பல ஆண்டுகளாக இந்த டெஸ்டுகளை ஒரே டாக்டரிடம் செய்து வருகிறேன். அவர் இப்போது கட்டியிருக்கும் பெரிய ஆஸ்பத்திரியை கட்டுவதற்க்கு முன் ஒரு சிறு கிளினிக்கில் இருந்தபோதே நான் அவர் கஸ்டமர்(?). நன்கு அறிமுகமானவர். இப்போது பெரிய ஆளாகிவிட்டார். பெரிய ஆஸ்பத்திரி, பல வார்டுகள், புது பில்டிங் என்று மிக வளர்ந்துவிட்டார். மிக மிக பிஸியானவர்.

அப்பாயின்ட்மென்டுடன் போனாலே குறைந்தது 2 மணிநேரம் காவல் இருக்கவேண்டும். நான் எப்போதும் என் மனைவியுடன் சேர்ந்து அங்குள்ள நர்சுகளை கலாய்த்துக்கொண்டிருப்பேன், எல்லோரையும் தெரியும் அதனால்.

இந்த முறை சென்றபோது இரண்டு டெஸ்ட் முடிந்து மூன்றாவது டெஸ்ட்டுக்கு காவல் இருந்தேன். முதல் நாளே அடுத்தநாள் முதல் நம்பர் டோக்கன் எடுத்தும் காலையிலேயே போய் 12 மணி அப்போது. டாக்டரே நேரிடையாக செய்யவேண்டியது என்பதால் வேறு வழி இல்லை. என் மனைவி போய்விட்டாள் வீட்டிற்க்கு வேறு கெஸ்ட் வருகையும் அன்றே இருந்ததால். நான் கூடக்கொஞ்சம் கலாய்த்துக்கொண்டிருந்தேன் என்று வையுங்கள்;-)

கடைசியாய் மூன்றாவது டெஸ்ட்டுக்கு ஒருவழியாக வந்தார்.. எப்படி, என்னை டெஸ்ட் பண்ணிக்கொண்டே வெளியிலிருந்தும் ஒவ்வொரு பேஷன்ட்டாக என்னை டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த அறைக்குள் (கன்ஸல்ட்டிங் ரூமை அடுத்து உள்ள டெஸ்ட் ரூம்) அழைத்து நோயை கேட்டு பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொண்டு ஓரக்கண்ணால் என்னையும் கவனித்துக்கொண்டு, நான் சட்டையில்லாமல் இருக்கிறேன்.. மற்றவர்கள் அப்படி வந்து சென்றது எனக்கு படு அன் ஈஸி ஆக இருந்தது. எனக்கு மண்டை காய்ந்து கோபம் வந்தது.. என்னடா நடத்துறீங்கன்னு கத்தியிருப்பேன் வேறு சூழ்நிலையில், நாகரீகம் கருதி வாய்மூடி இருந்தேன். நீண்ட காலம் தெரிந்த நபரான எனக்கே இந்த கதியென்றால் புதிதாக வருபவர்கள் கதி என்னவாக இருக்கும். அந்த க்ஷணத்தில் முடிவெடுத்தேன், அதுவே அங்கு கடைசி விசிட் என்று. கைராசியும் மண்ணாங்கட்டியும், நமக்கு மரியாதை வேண்டாம் சார், ஒரு பேஷியன்ட்டை பேஷியன்ட்டாகவே மதிக்க வில்லை என்றால்? இனிமேல் கூட்டமில்லாத ஒரு டாக்டரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேறு வழியில்லாமல் ஒருவழியாய் எல்லாம் முடித்து வந்தேன் இந்தமுறை.

டாக்டர்களே தயவுசெய்து மருத்துவம் மட்டும் பாருங்களேன். பார்மஸியை வியாபாரிகள் கவனித்துக்கொள்ளட்டும். டெஸ்ட்டுகளை லாபரேட்டரிகள் பார்த்துக்கொள்ளட்டுமே, உங்களுக்கு ஏன் இந்த வீண்வேலை.. நீங்களே எல்லாவற்றையும் பார்க்க நினைப்பதால் தான் இந்த குழப்பங்கள் எல்லாமே.

நம் டாக்டர்கள் திருந்துவார்களா??

அன்புடன், வசந்தா நடேசன்.

1 comment:

  1. //நம் டாக்டர்கள் திருந்துவார்களா??//    திருந்தவே மாட்டார்கள்.....!!!
    பணமென்றால் பிணமும் வாயை பிளக்கும். இதையே உல்டா படிங்க அதுதான் சரியா இருக்கும்.

    ReplyDelete